ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி இராஜராஜன் முடிசூடல் பொருளடக்கம் | ஆறாவது அங்கம்
யாண்டு ஓர் பதினைந்து ஆண்டு முடிந்திடவே மாமன்னர் உத்தமத் தேவரும் உயிர்விடவே பெரியோரும் அருள்மொழியை அரியணையில மர்த்தி சிரீ ராஜராஜனெனச் செங்கோலும் அளித்தனரே உத்தமச் சோழர் கி.பி. 970 முதல் 985 வரை பதினைந்து ஆண்டுகள் ஆண்டு மறைந்தார். அவர் இறந்ததும் அருண்மொழிவர்மன் 985இல் அரியணை ஏறினான். அப்போது இராஜகேஸரி வர்மரான இராஜராஜ சோழ தேவர் என்று பட்டாபிஷேகப் பெயர் சூடினான். அவன் முடிசூடிய விழா ஒப்பற்ற விழாவாக, உலகமே போற்றும் விழாவாக அமைந்தது. அந்தக் கோலாகல விழாவைச் சொல்லால் வடிக்க ஒண்ணாது. ஆதலின் நாட்டியமாகவே ஆடப் பெறும். வாத்ய கோஷங்கள் முழங்க, மறையவர் வேத ஒலி முழங்க, மரபுளோர் அரியணை தாங்க, மாற்றரசர் அடி வணங்க, முறைப்படி அரியணை ஏறியது கொற்றற்குடை கொடுத்தல், சாமரை வீசல், அபிஷேக மங்கள நீராடல், அரியணை ஏறல், உடைவாள் பெறல், பட்டம் கட்டிக் கொள்ளுதல் மகுடம் சூடிக் கொள்ளல் முதலிய ஆடல்கள் இதில் இடம் பெறுகின்றன. (இராகம்-சாவேரி) பல்லவி மகாபிஷேகம் செய்து மகிழ்ந்தனரே அருண்மொழிக்கு (மகாபிஷேகம்) சரணம் இராஜராஜன் எனத் திருவுடைப் பெயரளித்து இராஜ கேஸரி எனப் பெரும் பெயருமளித்து லோகமாதேவியரை உடன் அணையில் இருத்தி மாதேவர் அருளினால் மணிமுடியும் புனைந்து (மகாபிஷேகம்) மந்திர மறை உரைக்க மங்கள ஒலி இசைக்க தந்திரச் சுற்றம் சூழ மும்முரசம் முழங்க சந்திரனை நிகர்க்கும் சுந்தரக் குடைஎடுத்து சக்கர வர்த்திஎன சகம்முழுதும் துதிக்க (மகாபிஷேகம்) விண்ணோர் தலைவன் என விழுநீர் முடியிலாட்டி வெண்சா மரையுடன் உடை வாளும் அளித்து மின்னார் மணிதுலங்கும் வீரபட்டமும் சூட்டி தன்னேர் இல்லாத தரைபதி இவன் என்ன (மகாபிஷேகம்) மாமன்னனாக முடிசூடும் விழாவை “மகாபிஷேகம்” என்று செப்பேடுகள் கூறுகின்றன. ஆதலின் பட்டாபிஷேக விழாவை மகாபிஷேகம் என்று அழைத்துள்ளோம். முடிசூடும் போது அரசனுக்குப் பட்டப் பெயர் அளிப்பது மரபு. அருண்மொழிக்கு முடிசூட்டிய போது “இராஜராஜன்” என்ற பட்டப் பெயர் சூட்டினர். ஆதலின் இதுவரை அருண்மொழி என்று அழைக்கப் பெற்றவன் இனி இராஜராஜன் என்று அழைக்கப்படுகிறான். விஜயாலயன் காலத்திலிருந்து முடிசூட்டிய சோழர்கள் “பரகேசரி” என்று ஒருவரும், அடுத்து வந்தவர் “இராஜகேஸரி” என்றும் பட்டப் பெயரை மற்ற மாற்ற ஏற்றுக் கொண்டனர். நம் இராஜராஜ சோழன் “இராஜகேஸரி” என்று பட்டம் பூண்டான். அவன் அரியணையில் அமர்ந்தபோது அவனது தலைமைத் தேவி லோகமகாதேவியும் உடன் அமர்ந்து முடிசூட்டப்பட்டாள். அவளே அவனது “பட்டமகிஷி” ஆனாள். சிறந்த சிவபக்தன் ஆதலின் அருளோடு மணிமுடி தரித்தான் என்றது. இவ்விழாவில் அரசனுக்கு வெண்கொற்றக் குடை, வெண்சாமரை, உடைவாள், வீரப்பட்டம் முதலியவை அளிக்கப்படும். மங்கள இசை ஒலிக்க, மணப்பறை முழங்க புண்ணிய நீர் அவன் முடி மீது ஆட்டப் பெறும். அவற்றை இப்பாடல் குறிக்கிறது. அவ்வமயம் இவனது சிறப்புகள் பாடப்படுகின்றன. அயம் அகில கலா கலாப பாரவார பாரதிருச்வா அசேஷ நிருப சக்ர சாரு சாமீகர கிரீட கோடி கடித அனேக மாணிக்ய மரீசிபுஞ்ச பிஞ்சரீ கிருத பாதபீட ராஜராஜ ராஜகேஸரிவர்மா இவன் அனைத்துக் கலைகளையும் கரை கண்டவன்; இவனது பாதத்தை ஏராளமான பிற அரசர்கள் வந்து வணங்குகிறார்கள்; அவர்களது மகுடங்களில் உள்ள மாணிக்கங்கள் இவனது பாதத்தில் பளிச்சிடுகின்றன என்பது கருத்து. சமஸ்கிருதத்தில் உள்ள வரிகள் இராஜராஜனின் அருமை மகன் இராஜேந்திர சோழன் வெளியிட்ட திருவாலங்காட்டுச் செப்பேட்டில் உள்ளன. தனது மைந்தனால் இவ்வாறு இராஜராஜன் புகழப்பட்டுள்ளான். இவ்வரும் விழாவில் ஆன்றோர்கள் ஆசீர்வதித்து அறிவுரை வழங்குகின்றனர். அறிவுரையாக இங்கு இரண்டு பாடல்களைக் கொள்கிறோம். இரண்டும் கம்பனது இராமகாப்பியத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்கள். இவ்விரு பாடல்களும் இராமபிரான் அருளியவையாக வருகின்றன. வாலிக்கு மோக்ஷம் அளித்து, சுக்ரீவனுக்கு அரசை அளித்து அவன் முடிசூடப் போகும் போது எம்பிரான் கூறியவை: வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் தீமை தீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும் தூய்மை சால் புணர்ச்சி பேணி துகள் அறு தொழிலை ஆகி சேய்மையோடு அணிமை இன்றி தேவரின் தெரிய நிற்றி நாயகன் அல்லன் நம்மை நனி பயந்து எடுத்து நல்கும் தாய் என இனிது பேணி தாங்குதி தாங்குவாரை ஆயது தன்மை யேனும் அறவரம்பு இகவா வண்ண தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை வாய்மையும் அறிவும் மிக்க அமைச்சர்களுடனும் தீமை அற்ற ஒழுக்கமுடைய வீரர்களுடனும் இணைந்து குற்றமற்ற ஆட்சி புரிவாயாக. பிறர் சொல் கேட்டு நமக்கு நெருங்கியவர் இவர்; வேண்டாதவர் இவர் என ஆட்சி செய்வோர் பிரிக்காது, தேவர்களிலும் சிறந்தவராக ஆட்சி புரிதல் வேண்டும். இவன் நம்மை ஆள்பவன் என்ற எண்ணம் வராமல் மக்கள், நம்மை பயந்து காக்கும் தாய்க்கு நிகரானவன் என அன்போடு நேசிக்கும் வண்ணம் ஆட்சி செய்வாய். இதுவே உகந்த தன்மை. ஆனால், தீயன வந்த போது தீயைப் போல் சுடுவாயாக என இராஜராஜனுக்கு அறிவுரை வழங்கப் படுகிறது. இராஜராஜனது ஆட்சியை நன்கு ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர்கள் அவன் இவ்விரு பாடல்களுக்கும் இலக்கணம் போல திகழ்ந்தான் என்று அறிவர். அவனது ஆட்சி மக்களுக்கு மட்டிலா மகிழ்ச்சியை அளித்தது. அவனைத் தாய்க்குச் சமமாகவே எண்ணி இன்புற்றனர். அதே சமயம் தீமையைக் கண்டிக்கவும் அவன் தவறவில்லை. ஆதலின் கம்பனது இவ்விரு பாடல்களை மேற்கொண்டோம். (ஐந்தாம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | ஆறாவது அங்கம்