சுந்தரமூர்த்தி சரிதம் நாட்டிய இலக்கியம் டாக்டர் இரா. நாகசாமி முன்னுரை பொருளடக்கம் | கடவுள் வாழ்த்து | சுந்தரமூர்த்தி சரிதம்
தமிழக வரலாற்றில் எழிலான சுவையான வரலாற்று நிகழ்ச்சிகளை நாட்டிய நாடகமாகப் படைத்திடில் பல்லோரும் கண்டும் கேட்டும் இன்புறுவர். அவ்வரலாற்று நிகழ்ச்சிகளும் பக்திப்பெருக்கோடு இணைந்ததாயின் ஆன்மீக வாழ்வுக்கு உகந்ததாக அமையும் என்பதால் சில நிகழ்ச்சிகளை நாட்டிய நாடகமாக இயற்ற முனைந்துள்ளேன். அவற்றை ஆண்டுதோறும் தில்லையில் ஆடவல்ல பெருமானின் திருமுன்பு நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் புதுமலராக அட்டித் திருவடிதொழ விழைந்துள்ளேன். அம்மை அப்பனின் அருட்பெருக்கு கைகூடும்போது, இப்பணி மலர்கிறது. தஞ்சையில் பெருங்கோயில் எடுப்பித்த இராஜராஜப் பெருந்தகையின் வரலாற்றை இராஜராஜேச்வரவிஐயம் என்ற பெயரில் இயற்றி அதில் ஒரு பகுதியை முதன் முதலில் அம்பலவாணனின் அடிக்கமலத்தில் நாட்டியமாகப் படைக்கும் பேறுபெற்றேன். பின்னர் அம்முழு நாடகமும், தஞ்சைப் பெருங்கோயிலிலேயே. இராஜனின் திருநக்ஷத்திரத்தன்று சதையவிழாவில் நடத்தும் பாங்கு கிட்டியது. அவனது அருமை மைந்தன் கங்கை கொண்ட சோழன் — இராஜேந்திரனின் வரலாற்றை கங்கை கொண்ட சோழன் காதல் என்ற பெயரில் இயற்றி, தில்லையில் ஏழாவது நாட்டியாஞ்சலி விழாவில் (1988ஆம் ஆண்டு) புதுமலராக நாட்டியமாக அஞ்சலிக்கும் பேறும் கிட்டியது. இவ்வாண்டு (1989) நாட்டியாஞ்சலி விழாவில், சுந்தரமூர்த்தி நாயனாரின் சரிதத்தை நாட்டிய நாடகமாக இயற்றி நடராஜப் பெருமானின் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றேன். இதை முழு நாட்டியமாகப் படைக்க இயலாவிட்டாலும், ஒரு பாடலை நாட்டியமாக்கும் பேறு கிட்டியுள்ளது. பிற பாடல்களை இசை மலராக அட்டு கின்றேன். இரா. நாகசுவாமி
பொருளடக்கம் | கடவுள் வாழ்த்து | சுந்தரமூர்த்தி சரிதம்