சுந்தரமூர்த்தி சரிதம் நாட்டிய இலக்கியம் டாக்டர் இரா. நாகசாமி சுந்தரமூர்த்தி சரிதம் பொருளடக்கம் | முன்னுரை | 1. தடுத்தாட்கொண்ட வள்ளல்
“தில்லை வாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்ற திருத்தொண்டத் தொகையும், தேவாரப்பதிகங்களும் பாடியவரும் ஆலாலசுந்தரர் என்று அழைக்கப் பெற்றவருமான சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது இந்நாட்டிய நாடகம். இந்நாயனாரது பாடல்களும் சேக்கிழார்பெருமான் இயற்றியுள்ள பெரியபுராண பாடல்களும் இந்நாட்டிய நாடகத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. பல இடங்களில் தேவாரப் பாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சில இடங்களில் சேக்கிழார் பாடல்களும் இடம் பெறுகின்றன. மற்றவை யான் இயற்றியவையாகும். இவற்றிலும் சேக்கிழாரைப் பின்பற்றியே கதைக்கோப்பும், சொல்லாக்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சரிதைக்கு சான்றுகளாக இவை அமைகின்றன. சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கை, நாட்டிய நாடகத்துக்கு மிகச்சிறந்த — கட்டுக்கோப்புடையதாக அமைந்துள்ளது. வேறு எந்த சரிதையிலும் இல்லாத அளவுக்கு நாட்டியத்துக்கு ஏற்ற சுவை மிகுந்த வரலாறு சுந்தரரின் வரலாறாகும். சுந்தரரின் வரலாற்றை கீழ்க்கண்ட ஏழு பகுதிகளாக அமைத்துள்ளேன்: முதல் இரண்டு பகுதிகளும் இங்கு வெளியிடப் படுகின்றன. தடுத்தாட்கொண்ட வள்ளல் சுந்தரருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. நரசிங்கமுனையரையன் என்ற குறுநில மன்னரால் வளர்க்கப்பட்டவராதலின் சுந்தரர், இளவரசர் போல் அலங்கரிக்கப்பட்டு மணப்பந்தலில் நிற்கிறார். அப்பொழுது தோளில் குடையும் கையில் தடியும் ஏந்தி ஒரு கிழவர் வருகிறார். தமக்கும் சுந்தரருக்கும் ஒரு வழக்கிருப்பதாகவும் அதை முடித்த பின்னரே அவர் மணக்கலாம் என்றும் கிழவர் வாதாடுகிறார். மற்றவர்கள் திகைக்கின்றனர். வழக்கு என்ன என்று கேட்க இவன் எனக்கு அடிமை என்கிறார். சுந்தரர் இவன் பித்தனோ என்கிறார். பித்தனானாலும் சரி, பேயனானாலும் சரி நீ எனக்கு அடிமை; பணிசெய் என்கிறார் பொல்லாத கிழவர். அதற்குச் சான்றாக ஆள் ஓலை ஒன்று என்னிடம் உள்ளது என்கிறார். அவரைத் துரத்திச் சென்று, ஓலையைப் பற்றிக் கிழித்தெறிகிறார் சுந்தரர். வெண்ணெய்நல்லூருக்கு, கிழவரும் சுந்தரரும் மற்றவரும் செல்கின்றனர். வெண்ணெய் நல்லூர் சபையார் வழக்கை விசாரிக்கின்றனர். அவன் முன்னம் கிழித்தது படி ஒலை. என்னிடத்தில் மூலஓலை உள்ளது என்று அதைப்படிக்கிறார் கிழவர். அதில் சுந்தரரும் அவர் வழி வந்தவர்களும் இவருக்கு அடிமை என்று எழுதியிருந்தது. சபையார் கிழவரைப் பார்த்து நீ எந்த ஊர் என்று கேட்கின்றனர். நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ள வில்லையே என்று கூறி கிழவராம் இறைவன் அவ்வூரில் உள்ள திருவருட்டுறை என்னும் கோயிலுள் புகுந்து மறைகிறார். அப்பொழுதுதான் வந்தவர் சிவபெருமனே என்று அறிகின்றனர். சிவபெருமான் அனைவர் முன்னும் தோன்றி சுந்தரரைத் தடுத்தாட்கொள்கிறார். தம்மை முதலில் “பித்தன்” என்று சுந்தரர் அழைத்ததால் “பித்தன்” என்றே பாடச் சொல்கிறார். சுந்தரர் “பித்தா பிறை சூடி பெருமானே” என்ற பாடலைப் பாடுகிறார். இதுவே “தடுத்தாட்கொண்ட வள்ளல்” என்ற முதற் பகுதியாக அமைந்துள்ளது. பரவையின் காதல் இரண்டாவது பகுதியாக சுந்தரர் பரவை நாச்சியாரை மணந்தது. சுந்தரர் திருவாரூர் தியாகேசப் பெருமானை தரிசிக்கச் செல்கிறார். கோயிலில் ஆடல் மகள் “பரவை” தியாகேசர் முன்பு ஆடிக்கொண்டிருக்கிறாள். அவளது அழகில் சுந்தரர் மயங்குகிறார். அவளும் சுந்தரரின் அழகுகண்டு அவர் மீது காதல் கொள்கிறாள். அவரோ ஆதிசைவ அந்தணர். அவளோ ஆடல் மகள். அவளால் அவரை மணக்க — இயலுமா? அப்பெண்ணின் மனம் சஞ்சலிக்கிறது. இரவில் தோன்றி நிலவோ அவளது தாபத்தை அதிகரிக்கிறது. ஈசனின் அருளால் சுந்தரர் அப்பெண்ணை மணந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியை சேக்கிழார் மிக அழகாக தமது நூலில் அமைத்துள்ளார். படிக்கப் படிக்க மிகவும் சுவையூட்டும் இப்பகுதியைப் பின்பற்றி இரண்டாம் பகுதி அமைக்கப் பட்டுள்ளது. திருவொற்றியூரில் சுந்தரர் சென்றபோது மகிழ மரத்தடியில் சங்கிலி நாச்சியாரைக் கண்டு காதலுற்று மணந்ததும், திரும்ப திருவாரூர் வந்தபோது பரவை அச்செய்தி கேட்டு சுந்தரருடன் ஊடல் கொள்வதும், சுந்தரர் கொங்கு நாடு செல்கையில் அவிநாசிக்கருகில் வேடர்களாக வந்து இவரது பொருள்களை சிவகணங்கள் கவர்தலும், திருவஞ்சைக்களத்து மன்னன் சேரமான் பெருமாளுடன் நட்பும் சேரமான் ஆதி உலாப்பாடியதும், இறுதியில் இந்திரன் அனுப்பிய வெள்ளானை மீது ஏறி சேரமான் குதிரை மீது வர இருவரும் கையிலை அடைந்து சிவபெருமானைக் கண்ணுறுதலும் பிற பகுதிகளாக அமைகின்றன. இப்பாடல்களுக்கு எனது மனைவி திருமதி பார்வதி இசை வடிவம் கொடுத்துள்ளார்.
பொருளடக்கம் | முன்னுரை | 1. தடுத்தாட்கொண்ட வள்ளல்