chap20 chapter19.html chapter20.html chapter21.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 20. தருமம் தலை காக்கும்
பொருளடக்கம் | அத்தியாயம்-19 | அத்தியாயம்-21 | அகெடமி

திருவாரூரில், அநபாயன் என்னும் இரண்டாம் குலோத்துங்க சோழன் 12ஆம் நூற்றாண்டில் ஆண்டான். அவனுடைய அவையை அலங்கரித்த சேக்கிழார் பெருமான், மனு நீதி சோழனை தமது பெரிய புராணத்தில் முதலிலேயே பாடி உள்ளார். பாரத நாடு முழுவதும் பின்பற்றிய தர்மத்தை கெடாது கடை பிடித்தவர்கள் சோழர் என மணிமேகலையில் சாத்தனார் (பதிகம் வரி 72-73) பாடினார். இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில் தன் கணவனைக் கொன்ற பாண்டியன் அவையில், நீ யார் எனக் கேட்க, பதிலளித்த கண்ணகி, வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணியுறு நீர், நெஞ்சு சுடர் அரும்பெறல் புதல்வனை தான் தன் ஆழியின் மடித்தோன் பெரும் பெயர் புகார் எம் பதியே எம் ஊர் என்றாள் என்று கூறிய சொல் இன்றும் தமிழகம் எங்கும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதே கருத்தை மீண்டும் ஒருமுறை இளங்கோ அடிகள், செங்குட்டுவன் அவையிலும் நிலை நிறுத்துகிறார். செங்குட்டுவன் அவையில் அமர்ந்திருக்கும் புலவோர் பாண்டியன் தான் தவறிழைத்ததை உணர்ந்து உயிர் விட்டதும், அவன் தேவி உடன் உயிர் இழந்ததும் கூற, செங்குட்டுவன் தன் தேவியை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்கிறான். “தன் மகனை உயிருடன் தேர்க் காலில் ஊர்ந்த மன்னனா அல்லது சீற்றத்துடன் தன் கணவனைக் கொன்ற மன்னனை சபையில் உயிரிழக்கச் செய்து இங்கு வந்த சேயிழையா, இருவரில் நல்லோர் யார்?” என்று கேட்க, அவன் தேவி, தன் பதியோடு தானும் உடன் உயிர் துறந்தாள் அல்லவா, அவளையும் நாம் நினைக்கவேண்டும். அவள் உயர் உலகம் சென்றுவிட்டாள் என்று கூறி அப்பெண்ணின் நினைவையும் கூறி, இப்போது நாம் இப்பத்தினிக் கடவுளாம் கண்ணகிக் கடவுளை வணங்க வேண்டும் என்கிறாள். இங்கு மனுவின் கதை மீண்டும் இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம். இதை அரும்பத உரை ஆசிரியர், “மனு வேந்தன்” என்கிறார். (சிலம்பு - 3.25, 105-115). இளங்கோ அடிகளின் பார்வையில் “மனு தர்மத்தின்” சிறப்பு இங்கு மேலோங்கி நின்றது என்பதில் ஐயமில்லை. இளங்கோ அடிகள் மற்றோர் இடத்திலும் மனுவின் முறையைப் பாடுகிறார். சிலம்பின் இறுதியில் வாழ்த்துக்காதையில், அம்மானைப் பாட்டில் (சிபி சோழனின் கதையைக் கூறி, ஓர் பறவைக்காக தன் தசையை அரிந்தளித்த) சிபிக்கும் முன்னோன் மனு நீதி சோழன் என்று சொல்லும் இடத்தில், குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன் வந்த கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை என்று மனுவைப் பாடுகிறார். மனுவிற்குப் பின் வந்தவன் சிபிச்சக்ரவர்த்தி என்பதை சோழர்களின் பல செப்பேடுகளும் உறுதி செய்கின்றன. மணிமேகலையில் இரண்டாம் முறையாக சோழ அரசின் மகன் உதயகுமாரன் காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலையை, காமத்தோடு நெருங்க, காயசண்டிகையின் கணவன், தன் மனையாளைக் கெடுக்க முயல்கிறான் என்று அவனை வாளால் வீழ்த்தி விடுகிறான். அதை அறிந்த அரசன், தன் மகனுக்கு, தான் கொடுக்க வேண்டிய தண்டனையை, காயசண்டிகையின் கணவனே கொடுத்ததைப் பாராட்டி, உடனே அவன் உடலை ஈமத்தீயில் இட ஆணையிட்டான், என்ற இடத்தில் “மகனை முறை செய்த மன்னவன் (மனு) வழியோன்” என்று கூறுகிறார். முறை செய்தல் என்றால் தண்டித்தல் என்பதாம். அதனால் மிகவும் தொன்மையான இரு காப்பியங்களிலும் இளங்கோவும், சாத்தானாரும் மனுநீதி சோழன் என்பதையும், அவனது நீதியைத்தான் சோழர்கள் நிலை நிறுத்தினார் என்பதையும் கூறி உள்ளார். சோழர் கால காப்பியங்களில் ஈடு இணையற்ற வரலாற்றுக் காப்பியம் சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரியபுராணம். அதில் முதலிலேயே ஓர் அத்தியாயம் முழுவதும் மனுநீதி சோழனின் வரலாற்றைப் படைத்துள்ளார். சேக்கிழார், அநபாய சோழன் என்னும் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர். சோழர்கள் சூரியன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வழியைக் கூறும்போது, துன்னு செங்கதிரோன் வழித்தொன்றினான் மன்னு சீர் அநபாயன் வழி முதல் மின்னும் மாமணிப் பூண் மனுவேந்தனே செற்றம் நீங்கிய செம்மையின் மெய் மனு பெற்ற நீதியும் தன் பெயராக்கினான் என்று கூறுகிறார். சேக்கிழார் பாடல்களின் வன்மையால், செம்மையால் இந்தக் கதையை படிக்கலுற்றால் உள்ளம் உருகி, தமிழ் மக்களின் பண்பு இமயம்போல் ஓங்கி நிற்பதை உணரலாம். இவ்வகைக் காவியங்கள் மட்டுமல்ல, கல்வெட்டுகளும், செப்பேடுகளும் காலம் காலமாக மனுநீதியைப் புகழ்ந்து பேசுகின்றன. அருள்மொழித் தேவன், இராஜ இராஜ சோழனின் செப்பேடுகளும் இராஜேந்திர சோழனின் செப்பேடுகளும், சோழர்கள் மனுவின் வழிவந்தவர்கள் என்பதைப் பறை சாற்றுகின்றன. தங்கள் ராஜ வம்சத்தைக் கூறும்போது, “கதிரவன் வழி வந்த அரச வம்சத்தைத் தோற்றுவித்தவன் மனு என்றும், அவன் மகன் இக்ஷ்வாகு என்றும் செப்பேடுகள் கூறுகின்றன. இக்ஷ்வாகு வம்சத்தில் வந்தவன், அறத்தின் நாயகனாம் இராமபிரான். இராமன் வம்சத்தில் வந்தவர்கள் தாம் தமிழ் நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள். அவன் பின் வந்தோர் சிபிச்சக்ரவர்த்தி. அவர் வழி வந்தோர் நாங்கள்.” என்று அவர்கள் செப்பேடுகளில் அவர்களே எழுதி வைத்துள்ளனர். இராஜ இராஜசோழன், தான் மனு வழி வந்தவன் என ஆனைமங்கலச் செப்பேட்டில் கூறுகிறான். அவன் அருமை மைந்தன் இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டு செப்பேடுகளில் இந்நாட்டு பண்பாட்டை நிலைத்து நிற்க மனு வேந்தனே இராஜ இராஜனாகத் தோன்றினான் என்று கூறுகிறது. மனு “சர்வ சமத்வம்” என்பதுதான் தனது குறிக்கோள் என்று, தனது தரும சாத்திரத்தில் கூறியுள்ளான். அதன் பிரதிபலிப்பாகத்தான் இராஜ இராஜன், சைவம், வைணவம், சாக்தம், சமணம், பௌத்தம், வைதீக வேள்விகள் என அத்தனை சமயங்களுக்கும் ஏராளமான பொருள் அளித்துப் போற்றினான். மக்களின் கோட்பாடுகளை காப்பதுதான் மன்னனின் கடமை. “செக்குலரிசம்” என்று கூறி சமயத்தைச் சாடுவது அரசனுக்குக் கொடுத்த உரிமை அல்ல. “செக்குலரிசம்” நம் நாட்டுப் பண்பும் இல்லை. “சமதர்சனம்” என்பதுதான் “மனு நீதி”. இறுதியில் இராஜ இராஜன் தானே இந்நாட்டை ஆள வேண்டும் என்ற கொள்கை கொண்டவன் அல்லன். மக்கள் எல்லாம் அவன் தந்தை இறந்ததும் அவனை ஆட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க, அவன், தன் பெரிய தந்தையின் மகன் உத்தம சோழன் ஆளட்டும் என்று தனக்கு வந்த அரசை தியாகம் செய்த மாமன்னன். பதினைந்து ஆண்டுகள் உத்தம சோழன் ஆண்ட பின்னர், அவன் அரியணை ஏறினான். அவன் தமிழ் மரபின் படியும், மனுவின் மரபின் படியும் “அறிவுடையோன் ஆறு அரசு செல்லும்” என்ற முற்போக்கும், வருங்கால நாட்டின் நன்மையைக் குறித்தும் அரசியல் அனுபவம் முதிர்ந்திருந்ததால், அவ்வாறு செய்ததாக அவன் செப்பேடு “க்ஷத்ரதர்மமார்த்த வேதி” கூறுகிறது. மக்களின் நன்மையையும் தியாக மனப்பான்மை யுடையோனையே தமிழ் மக்கள் பின்பற்றினர். அதனால் அவன் ஆட்சி பொற் காலமாகத் திகழ்ந்தது. பண்பாடு மிக்க தமிழ் மக்களின் அரசனாக வாழ்ந்தது மனுவின் அறம். அதனால் “தருமம் தலை காக்கும்”. இது நான்மறை தீர்ப்பு என்றார் எம்.ஜி.ஆர். நமது கலைஞர் அவர்கள் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், மாதம் ஒரு நாள், மக்களைச் சந்தித்து அவர்களது இடர்களையும், விருப்பங்களையும், தேவைகளையும் அறிந்து ஆக்கபூர்வமாக செய்யவேண்டும் என்றும் அதற்கு, “மனு நீதி திட்டம்” என்றும் பெயர் கொடுத்தார். அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது “மனு நீதி”. மனுவின் அறத்துக்கு ஆணி வேறாகத் திகழ்வது அறம், பொருள், இன்பம், வீடு என்ற நால்வகை புருஷார்த்தமே, ஆதலாலும், அது தமிழ் வேந்தர் மூவருக்கும், பொதுவாகலாலும், சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் யாத்தார். அரசியல் பிழைத்தோரை அறம் கூற்றாகிக் கொல்லும் என்பது சிலம்பின் முடிவுரை. அரசியல் பிழைத்தோருக்கு அறமே கூற்றாய் முடியும். மனு நீதி: மனுவின் சரிதத்தை சேக்கிழார் பெருமான் தமது வரலாற்றுக் காப்பியமாகிய திருத்தொண்டர் புராணத்தில் ஏன் முதலில் குறிப்பிட்டுள்ளார் என்பது கேள்வி? முதல் காரணம் மனு, சோழர் வம்சத்தைத் தோற்றுவித்த முதல் அரசன் என்பது. இரண்டாவதாக 63 நாயன்மார்கள் கதைகளிலும் பின்னணியாக ஒவ்வொருவருக்கும் அதன் வாயிலாகக் கிடைத்த சைவ நீதியைக் குறிக்கிறது பெரியபுராணம். அதனால்தான் வரலாற்றில் தடுத்தாட்கொண்ட காதையில் நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் மரபை விரிவாகக் கூறியுள்ளார். அதேபோல் அப்பர் பெருமானின் வரலாற்றிலும் சம்பந்தப் பெருமானின் வரலாற்றிலும் அரசன் நீதியை நிலை நிறுத்தியதைக் காண்கிறோம். இவை எல்லாம் மனுவின் நீதி முறைக்கு எடுத்துக்காட்டு. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் மனு நீதியின் பின்னணியை மறவாது இளங்கோ அடிகளும், சாத்தனாரும் குறித்துள்ளனர். மனுநீதியால் முற்றிலும் தமிழ் மரபை அறிந்த அநபாயனாகிய இரண்டாம் குலோத்துங்கன் யாரும் செய்யாத செயற்கரிய ஒரு நினைவுச் சின்னத்தை திருவாரூரில் தியாகேசர் கோயிலின் தென்கோபுர வாசலின் புறத்தே எடுத்துள்ளான். அந்தச் சின்னம் இன்றும் உள்ளது. அது 1150ல் தோற்றுவிக்கப்பட்டது. சிறு சேதங்களை தவிர இன்றும் சோழர் கலையின் எடுத்துக்காட்டாக உள்ளது. மனு நீதியைக் குறிக்கும் சோழர் நினைவுச் சின்னம் இரண்டு பகுதியாகக் காணப்படுகிறது. முதல் பகுதி நான்கு தூண்களின் மத்தியில் ஒரு பசுமாடு நிற்கிறது. அதன் கண்ணீர் மல்குவதை சிற்பி சிறப்பாகக் காட்டியுள்ளார். தனது கன்றின்மீது மனுவின் மைந்தன் தேர் சக்கரம் ஏறி அது இறந்து கிடக்கும் உருவமும் அப்பசுவின் முன் கிடப்பதைக் காணும்போது நமது மனது உருகும். அதே சமயம் அப்பசு தன் இளங்கன்றை இழந்த துக்கத்தால் சீற்றம் வெளிப்பட, சீறி நிற்பதை தத்ரூபமாக சித்திரித்துள்ளான் சிற்பி. மனுவின் அரண்மனையின் வாயிலில் அக்கன்றைக் கொண்டுவந்து கிடத்திய மாடு, தனது கொம்புகளால் வேகம் வேகமாக மணியை, முட்டி முட்டி விரைத்து நிற்கும். அம்மாடு ஓர் ஈடு இணையற்ற கலைப் படைப்பு. அம்மண்டபத்தின் மேலே ஒரு விமானமே எடுத்து அந்நிகழ்ச்சியை ஒரு கோயிலாகக் கற்பித்துள்ளான் அநபாய சோழன். அதைக் குறிக்கும் வகையில் அதன் நுழைவாயில் ஓர் எழிலே உருவான ஒரு மகரத் தோரண வாயிலாக வடித்துள்ளான் சிற்பி. ஒரு பசு நீதி கேட்கும் காட்சியைவிட்டு அகலவே மனம் தோன்றாது. இரண்டாவதாகக் காணப்படுவது ஒரு தேர். அதில் முதலில் அரசன் மனுவின் உருவமும் அத்தேரை இழுத்து ஓடும் குதிரைகளும், சுதை உருவங்கள். ஆனால் அவற்றில் சோழர் கலையில் இருந்த உயிர் துடிப்பைக் காண இயலாத போதிலும் அந்நிகழ்ச்சியை நினைவுட்டுவதைக் காண்கிறோம். தேர் நான்கு சக்கரங்களைக் கொண்டுள்ளது. தேரும் அதன் சக்கரங்களும் சோழர் காலத்தில் கல்லால் செய்யப்பட்ட எழிலான படைப்பு. அதன் வலப்புற சக்கரத்தின் கீழ் மனுவேந்தனின் மைந்தன் கீழே கிடக்கிறான். தனது மைந்தன் என்றும் பாராது நீதி ஒன்றே தலையாய தண்டனையாக கொடுத்த காட்சி அது. மன்னனின் மைந்தன் இருகரங்களையும் கூப்பி சக்கரத்தின் கீழே வீழ்ந்து கிடக்கிறான். அவன்மீது தேர்க்காலை ஏற்றி மனு தண்டித்தது பல இலக்கியங்களிலும் காணப்படும் செய்தி. தன் கன்றுக்காக நீதி கேட்கும் பசுவும், தன் மைந்தனை தேர்க்காலில் வீழ்த்திய மனுவும் தமிழ் மக்களின் நீதி நிலை நாட்டும் பாங்காகும். இவை இரண்டும் ஒரு திருச்சுற்றின் உள்ளே காணப்படுகின்றன. நீதிக்குக் குரல் கொடுத்த பசுவுக்கு ஒரு கோயிலையே கட்டுவித்த சோழமன்னர்களின் மாண்பு தமிழக மாணவர் ஒவ்வொருவரும் சென்று காண வேண்டிய நினைவுச்சின்னம். இங்குதான் சேக்கிழார் தமிழ் மன்னர்களின் நீதிநெறிக்கு ஓர் இலக்கணம் கூறுகிறார். ஆட்சியாளர் அறத்தை எவ்வாறு காக்க வேண்டும் என்னும் இலக்கணமாகவே அது அமைக்கிறது. அதை மனுவின் வாயால் மொழிகிறார் சேக்கிழார் பெருமான். மாநிலம் காவலன் ஆவான் மன்னுயிர் காக்கும் காலைத் தான் அதற்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனம் மிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்கள் தம்மால் ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ மக்களுக்கு இடையூறு ஆட்சியாளர் தம்மாலேயே ஏற்படலாம். தன் பரிசனத்தால் ஏற்படலாம். வன விலங்குகளால் ஏற்படலாம். அதைத் துடைக்கவேண்டியது அவர்கள் கடன். ஆட்சியாளர், மக்களின் வாழ்வை வளப்படுத்தி, நீதியோடும் நேர்மையோடும் ஆளவேண்டுமே தவிர, தன் கருத்தைத் திணித்து தாமே அவர்கள் வாழ்விற்கு இடையூறாக இருக்கக்கூடாது. அவர்கள் செல்வத்தை கொள்ளையடிப்பவனாக இருக்கக்கூடாது என்பது மனுநீதி கூறியுள்ள இலக்கணம். நீதிக்கு அதைத்தான் சேக்கிழார், அரசன் தன்னால் மக்களுக்கு துன்பம் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்கிறார்.
பொருளடக்கம் | அத்தியாயம்-19 | அத்தியாயம்-21 | அகெடமி