chap19 chapter18.html chapter19.html chapter20.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 19. கௌதம புத்தர் போதித்தது யோகமார்க்கம்
பொருளடக்கம் | அத்தியாயம்-18 | அத்தியாயம்-20 | அகெடமி

யோகமார்க்கம் என்பது ஒரு விஞ்ஞான அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது என்பதை உலகம் முழுவதும் உணர்ந்து “யோகநாள்” என இப்பொழுது கொண்டாடுகிறார்கள். இந்த வழியைத் தோற்றுவித்தவர் பதஞ்சலி மாமுனிவர். இவர் தமிழகத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர் எனக் கூறுவர். இவர் தோற்றுவித்த மார்க்கத்தை “அஷ்டாங்க யோகம்” என்று கூறுவர். அது எட்டு அங்கங்களை உடையது. “இயமம்”, “நியமம்”, “ஆசனம்”, “பிராணாயாமம்”, “பிரத்யாஹாரம்”, “தாரணம்”, “த்யானம்”, “சமாக” என்பவை அவற்றின் அங்கங்கள். முதலில் இது இந்து சமய வழி என்று மறுத்த வந்த மேலை நாட்டார், இப்பொழுது அதன் உண்மை நிலையை அறிந்து, தாங்களே அதைப் பரப்பி வருகிறார்கள். கௌதம புத்தர் பரப்பிய சமயத்தை “பெளத்த சமயம்” என்று சொல்கிறோம். அவர் நிர்வாணம் அடைந்தபோது யோகத்தில் நின்றுதான் உயிர் நீத்தார் என அவர் வரலாறு கூறும். அவர் பரப்பிய கொள்கைகளை “தர்மம்” என்றும் அதைச் சுழற்றிவிட்டு உலகில் பரவ விட்டதால் அதை “தர்மச்சக்கரம்” என்றும் கூறுவர். அவர் யோகாசனத்தில் அமர்ந்து இரு கரங்களையும் மார்பில் வைத்துக் காட்டும் அமைதியை “தரும சக்கர பிரவர்த்தனம்” என்பர். 1700 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு புத்தரை சித்தரிக்கும் போது அவர் “அஷ்டாங்க” மார்க்கமாகிய யோகத்தைத்தான் தர்ம சக்கரமாக உலகிலே சுழற்றித் தொடங்கி வைத்தார் என்று கூறுகிறது. “அஷ்டாங்க மார்க் தர்ம சக்ர ப்ரவர்தகர்” என்பது கல்வெட்டு பிராம்மி எழுத்தில் ப்ராக்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. 270இல் ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தைச் சார்ந்த மன்னன் வீரபுருஷதத்தன் என்பவன் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் ஆண்டபோது நாகார்ஜுனகொண்டா என்ற இடத்தில் இக்கல்வெட்டு எழுதப்பட்டது. நாகார்ஜுனகொண்டாவில் திகழ்ந்த ஒரு மாபெரும் பௌத்த விஹாரத்திலும் சுற்றியுள்ள பல இடங்களிலும் பல கட்டடங் களையும், குளங்களையும், மண்டபங்களையும் போதிஸ்ரீ என்ற ஒரு பெண்மணி, தனது கணவர், தான், தன் தந்தை, தன் தாய், தன் உடன் பிறந்தோர், சுற்றம் ஆகிய அத்தனையோரின் நன்மைக்காகவும் கட்டியிருக்கிறாள். அங்கு புத்த பிரானை பிரதிஷ்டை செய்து அவரைப் போற்றும் இடத்தில்தான் “அஷ்டாங்க மார்க்க தரும சக்ர ப்ரவர்த்தகராய புத்தாய” செய்தளித்தேன் என்கிறாள். புத்த பிரானின் இரு கால்களிலும் சக்கரச் சின்னங்கள் உள்ளன என்றும் கூறுகிறாள். பௌத்தர்கள் புத்த பிரானின் திருவடிகளை தங்கள் தலை மேல் கொண்டு தியானித்து வீடு பேறு பெறுவர். இதிலிருந்து தரும சக்கரம் என்பது அஷ்டாங்க யோகத்தின் சின்னம் என்பதும் அறிகிறோம். அதனால் புத்த சமயம் யோக மார்க்கத்தை உபதேசித்த சமயம். புத்த சமயத்தில் பின்னர் பல உட்பிரிவுகள் தோன்றின. அவற்றின் மிகச்சிறந்த மார்க்கமாக “யோகாசாரம்” என்ற பிரிவு சிறந்தது. இக்கல்வெட்டில் இன்னம் மிகச்சிறந்த செய்தி ஒன்று உண்டு. நாகார்ஜுனகொண்டா 270இல் மிகச்சிறந்த பெளத்த க்ஷேத்ரமாகத் திகழ்ந்தது. காந்தாரம், சீனம் ஆகிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் பௌத்த குருமார்கள் வந்து தங்கி இருந்தனர். எங்கெங்கிருந்து இங்கு வந்து படித்தனர் என்று சொல்லுமிடத்து தமிழர்களும் அங்கு சென்று படித்திருக்கிறார்கள் என்று கல்வெட்டு கூறுகிறது. அங்கு வந்து படித்தவர்கள் — காஷ்மீரம், காந்தாரம், சீனம், கிராதம், தோசலி, அபாராந்த, வங்கம், வனவாசி, யவனர், தமிளர், பளுரம், தாம்பரபரணி தீவு ஆகிய இடங்களில் இருந்து வந்தோர்கள் என்று கல்வெட்டுகள் கூறுகிறது. தாம்பரபரணி என்பது இலங்கை தீவை குறிக்கும். அங்கிருந்து வந்தவர்கள் தேரர்கள் என்று குறிக்கிறது. அக்காலத்தில் தமிழ் மக்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கைப்படி தாம் தனித்து நிற்காமல் எங்கும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் தமிழகத்தைச் சார்ந்த பதஞ்சலி முனிவரின் யோக மார்க்கத்தை புத்தபிரான் உலகுக்கு தர்மமாக போதித்தார் என்பதும் அந்த யோக மார்க்கம் உலகு அறிவாக மலர்ந்திருக்கிறது என்பதும் அறிந்து இன்புறத்தக்கது.
பொருளடக்கம் | அத்தியாயம்-18 | அத்தியாயம்-20 | அகெடமி