ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி முன்னுரை பொருளடக்கம் | அருள்மொழி ஆயிரம்
தஞ்சைப் பெருங்கோயிலைத் தோற்றுவித்த முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறியது கி.பி. 985இல் ஆகும். 1985ஆம் வருடத்துடன் சரியாக ஆயிரம் ஆண்டுகள் முடிவடைகின்றன. தமிழ் மக்களது கலை, கட்டிட நுணுக்கம், ஆட்சித் திறன், வெற்றிச் சிறப்பு முதலிய அனைத்துத் துறைகளிலும் அவனுக்கு ஈடு இணை இல்லை என்று எடுத்துக் காட்டும் தனிச் சின்னமாய்த் திகழ்கிறது தஞ்சை இராஜராஜேச்சுரம். திறனான புலமை எனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்றான் பாரதி. இராஜராஜன் எடுத்த கோயிலை, அவன் வடித்துள்ள செப்புத் திருமேனிகளை உலகமே போற்றுகிறது. அந்தப் பெருமன்னன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை உலக விழாவாகக் கொண்டாட, அனைத்துலக அறிஞர்களும் பங்குபெரும் விழாவாக நடக்க வேண்டும் என்பது எனது விருப்பம். தஞ்சைப் பெருங் கோயிலில் “இராஜராஜேச்சுர நாடகம்” என்ற ஒன்று இராஜராஜன் காலத்திலேயே நடைபெற்றது எனக் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். அது நமக்குக் கிடைக்கவில்லை. ஆயினும், இராஜராஜனின் வரலாற்றை மையமாகக் கொண்டு பெருங்கோயில் பரனின் புகழ் உணர்த்தும் நாட்டியமாக அது திகழ்ந்திருக்க வேண்டும். ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப்பரணி என்ற நாட்டிய இலக்கியம், தாராசுரத்து (இராஜராஜபுரத்து)க் கோயிலைப் புகழ்வது போல, அக்கோயிலைத் தோற்றுவித்த இரண்டாம் இராஜராஜ சோழனின் சிறப்பைக் கூறுகிறது. அது போல இராஜராஜேச்சுவர நாடகம் திகழ்ந்திருக்க வேண்டும். அது இப்போது மறைந்து போனது நமது துரதிர்ஷ்டமே. ஆயினும், அதே கருத்தை மனதில் கொண்டு, “இராஜராஜேச்வர விஜயம்” என்ற பெயரில் இந்த நாட்டிய நாடகத்தை இயற்றியுள்ளேன். கல்வெட்டுகள், செப்பேடுகள், அக்கால இலக்கியங்கள், இசைப் பாக்கள் ஆகியவற்றைக் கொண்டு இராஜராஜன் வரலாறும், அந்தக் கோயிலின் வரலாறும் இந்நாடகத்தில் இடம் பெறுகின்றன. இராஜராஜனின் குழந்தைப் பருவத்தில் தொடங்குகிறது நாடகம். அருண்மொழியின் குழந்தைப் பருவம், அக்கன் குந்தவையின் அரவணைப்பு, அண்ணன் ஆதித்த கரிகாலன் வஞ்சகர்களால் கொல்லப்படுதல், தந்தை சுந்தர சோழர் பொன் மாளிகையில் துஞ்சுதல், அன்னை வானவன் மாதேவி உடன் உயிர் நீத்தல், இராஜராஜன் அரியணையை உத்தம சோழனுக்குத் தியாகம் செய்தல், இராஜராஜன் என்னும் பெயரில் பட்டாபிஷேகம் பூணல், வெற்றி வாகைகள், திருமுறை காணல், திருக்கோயில் எடுத்தல், திரு இராஜராஜேச்வரர் திருஉலா என்பதுடன் நாட்டியம் முடிகிறது. பாடல்கள் மரபு வழியிலும் பண்டைய இசை மரபிலும் அமைக்கப்பட்டுள்ளன. சிற்பங்கள் ஓவியங்களின் அடிப்படையில் ஆடை அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது என் அவா.
பொருளடக்கம் | அருள்மொழி ஆயிரம்