ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி அருள்மொழி: ஆயிரம்
பொருளடக்கம் | அருண்மொழியின் குழந்தைப் பருவம் இராஜராஜன் சீர்மிகு சுந்தரச் சோழரின் செல்வ! செந்திரு மடந்தை வானவன் தேவி எழில்மான் பயந்த புலியின் ஏறே! கரிகால் வளவன் பின்வரு காவல! ஐப்பசித் திங்கள் சதயநாள் பிறந்தோய்! அக்கன் குந்தவை அன்பினில் வளர்ந்தோய்! அருண்மொழி என்னும் இயற்பெயர் கொண்டோய்! இராசர் தம்ராசன் எனும் பெயர் ஏற்றோய்! காந்தளூர்ச் சாலை கலமறுத் துகந்தோய்! வேங்கை நாடும் கங்க பாடியும் தடிகைப் பாடியும் நூளம்ப பாடியும் குடமலைநாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண் டலமும் இரட்டப் பாடி ஏழரை இலக்கமும் முந்நீர் பழந்தீவுபன்னீ ராயிரமும் திண்திறல் வென்றித் தண்டார் கொண்ட ராஜகே சரிக் கோவே உந்தன் வாள் ஒளி படரா நாடும் உளதோ! புலிக்கொடி பறந்திடாப் புவனமும் உண்டோ ! அரசர் கட்கரசே அடியினில் வீழ்ந்தனம் பெருந்திறை கொணர்ந்தனம் பெற்றி ஈதெனப் பொன்னும் பொருளும் புனைமணி அணிகளும் முத்தும் பவளமும் மங்கலப் பொருட்களும் கணக்கி னிலடங்கா கரிகளும் பரிகம் கடுகியே கொடுத்தனம்! கரதலம் கூப்பினம்! எண்டிசை மன்னரும் ஈங்குற் றுள்ளோம்! கண்ணோ க்காலே கரந்திடும் எம்தமை உம்தம் அடிகளை எம்முடி மலர்த்த சென்னியர் நாட்டின் சீர்புகழ் பரவிட சிற்றரசாய் எமை ஏற்றிடும் எனவே ஏத்திடும் அரசை எண்ணலும் எளிதோ! அலைகடல் கடந்த கடாரநாடும் விலையில் பொருள் கெழு விஜயதேசமு ஒருகுடைக் கீழே தனியர சாற்றிய பெரும் புகழ் மாரவிஜயோத் துங்கன் தன்னரும் தந்தையின் தனிப் பெயராலே சொல்லரும் சீர்மிகு சூளாமணி எனும் விஹாரை ஒன்று உன்னரு நாட்டில் நாகைப் பட்டின நல்லூர் தன்னில் போதி நீழற் புண்ணியன் வழியில் போந்த பிக்கு சங்கம் திகழ அமைத்திட நீயும் அருளினை அன்றோ! ஆனைமங்கலப் பெயர் பெரும் ஊரை பூசையும் விழாவும் பொலிந்திட தந்தனை! உந்தன் பெயரால் பள்ளியும் அமைத்தனை! எல்லாச் சமயமும் சமம் என ஏற்ற உன்னிலும் உளரோ உயர் தவத்தோரே! வேட்புலம் முதலாய் வென்றியாற் கொண்ட காடும் நாடும் கல்லும் தெற்றியும் திணைத் துளியளவே ஆயினும் தவிரா தூர்தொறும் ஊர்தொறும் ஊன்றியே அளந்து விளைநிலம் ஈது! விளையா நிலமிது! இறைதரு நிலமிது! இறை இலி இதுவென வளமையின் வகையால் தரம்தரம் பிரித்து வளநா டுடனே பல்புரம் அமைத்து பழம்பெயர் தவிர்த்து தன்பெயர்நிறீஇ மண்டலம் கூற்றம் வளநா டூரென மண்ணுல கறியா மாண்புடன் வகுத்து வரியி லிடுவோர், வகைபல செய்வோர், கணக்கர், ஓலை கண்காண் புரிவோர் பாண்டா ரத்தின் பொத்தகமுடையோர், பட்டோ லையிடு பூட்சிப் பாட்டம் திணைக்க ளத்துடனே, திருவாய்க் கேழ்வி, நடுவு இருக்கை, நல்லறம் பகர்வோர், பெருந்தரம், சிறுதரம், வேளைக் காரர், அதிகார கரெனப் பாங்குட னமர்த்தி ஊர்தொறு குடவோலை முறைதனை நிறுவிய உலகளந்த, சோழ! உன்சீர் இந்த உலகெலாம் பரவி புலவர்தம் நாவில் இன்றும் உளதெனில் பிறிதும்உண்டோ புகழ்தனைப் பெறவே! தென்னா டுடைய தேவினை நாளும் தேன்தமிழ் இசையால் பாடிய மூவர் தேவா ரங்கள் காணா தொழிய திருநா ரையூர் நம்பியின் துணையால் தில்லைப் பதியில் பொல்லா பிள்ளை திருக்கர நீட்ட அறைதனை தெரிந்து மன்றுள் ஆடும் தெளி தேனுக்கும் மன்னி அருளும் மலர்க் கொடிதனக்கும் பதிகம் பாடிய மூவர் தமக்கும் அன்புடன் திருவிழா அமைவுற எடுத்து திருந்திய கதவம் திறனுடன் திறந்து மறைந்த பாக்களை புற்றினில் கண்டு மறையோர் புகழ இமையோ வியக்க இவ்வுல கெங்கும் இசைப்பா தந்த திருமுறை கண்ட பெரும் புகழ்ச்சோழ! நின்பெயர் தமிழ் உளவரையும் திகழ்ந்திடும் அன்றோ! உலகின் தோற்றமும் திதியும் மறைவும் அளவில் பரவெளி அலைந்த இசையும் நாத வெளிதனில் நடந்திடும் ஆடலும் அண்ணல வகுத்த அரும்கலை அன்றோ! அம்மையும் அமர்ந்து அருளிய அன்றோ! தேவரும் ரிஷிகளும் தவம்புரி முனிவரும் பெரியரும் சிறியரும் கண்டும், கேட்டும், களித்தும், சிறந்த வரன்முறை அன்றோ! தேவர்தம் குலம்தொறும் தினம்புரி விழவில் ஆடலும் பாடலும் அங்கம் என்ன ஆகம நூல்கள் பகர்ந்திடு மரபை ஆலயம் அனைத்தும் நடத்திட வகுத்தனை! தளிச்செரி பெண்டிரும் தகவுடன் ஆட திருப்பதி கங்கள் பண்ணுடன் இசைக்க தென்தமிழ்நாடதில் எங்கும் திகழ்ந்திட அன்று நீ அளித்தமை அன்றோ எம்மிடை இன்றும் உளது! இவ்வரும் பாங்கே என்றும் நிலைக்கும் என்னிடில் மிகையோ! நித்த வினோத வாழ்த்தினம் நினையே! தஞ்சைமா நகர்தனவிலே தரணியெலாம் போற்றிடவே தக்கிண மாமேருவெனப் பெருங்கோயில் படைத்தனையே! பெருங்கோயில் அதுதனையும் கருங்கல்லால் எடுத்தனையே! கல்எல்லாம் அரும்பணியால் கலைப் பொருளாய் மாற்றினையே! கலைமிளிர கண்வியக்கும் சிலைவடிவாய் நிறுத்தினையே! சிலைகளையே செகம்புகழ செம்பாலும் வடித்தனையே! கண்கவரும் ஓவியமும் வெண்சுதையில் விளைத்தனையே! எண்ணிலா அணிகலன்கள் எண்ணியே அளித்தனையே! பண்செய்த பயிர்நிலங்கள் நெல் அளக்க விடுத்தனையே! நொந்தாமல் விளக்கெரிய நற்பசுக்கள் கொடுத்தனையே! பதிகங்கள் பாடிடவும் பரத வகை ஆடிடவும் பரிகலன்கள் எடுத்திடவும் பல்கணக்கு எழுதிடவும் மெய்காத்து நின்றிடவும் பல்லோரை அமர்த்தினையே! உயிர் அனைய தமக்கையுடன் உயர்க்காதல் தேவியரும் உன்தானைத் தலைவருடன் உவந்தளித்தோர் கொடைகளையே கல்லிலே வெட்டி வைத்துப் புதுச்சரிதம் படைத்தோய் நீ! பரதவள நாடுமே பார்த்திராப் புரவலன் நீ! சொற்கோயில் எடுப்பவரும் புனைந்தறியா புகழ்க்கோயில் கற்கோயில் என்போமோ! கலைக்கோயில் என்போமோ! புதயரில் புதியன் நீ! பழையரில் பழையன் நீ! பண்பன் நீ! அன்பன் நீ! பக்தன் நீ! சித்தன் நீ! சிவனடி மறவாச் செம்மால்! சிவபாதசேகர! முத்தமிழ்ப் பெருமை மூவுலகேற்றிய மும்முடிச் சோழ! இத்தரை எங்கும் நின்புகழ் நிலைக்கும் ஆயிரம் ஆயிரம் ஆயிரம் ஆண்டே!
பொருளடக்கம் | அருண்மொழியின் குழந்தைப் பருவம்