ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி இராஜராஜ சோழன் முடிசூடிய திருநாள் பொருளடக்கம் | திருக்கோயிலூர்ப் பாட்டு
தஞ்சைத் தரணியை ஆண்ட மாமன்னர்களில் ஈடு இணையற்ற மன்னன் முதலாம் இராஜராஜ சோழன். இம்மன்னனைப் பற்றி அறிந்து கொள்ள தமிழ் மக்களுக்கு ஆர்வம் பெரிதும் உண்டு. அதுவும் அம்மன்னின் ஆற்றலை, கலைத் தொண்டை, பக்தியை அதிகம் அறிந்து கொள்ள உணர்ச்சிப் பெருக்கிட்டு ஓடுவது இயற்கையே. இராஜராஜனைப் பற்றிய ஆய்வுகளில் அவன் எப்பொழுது பட்டத்துக்கு வந்தான் என்பது ஒரு முக்கியமான கேள்வி. அவன் முடிசூடிய தேதியை பல அறிஞர்கள் கணக்கிட முயன்றிருக்கின்றனர். அண்மைக் காலத்தில் அவன் முடிசூடிய நாள் கி.பி. 985ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதிதான். அன்று புனர்வசு நட்சத்திரம், தேய்பிறை, சனிக்கிழமை அன்றுதான் முடிசூடினான் என திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர். அது குறித்து ஆய்வது இக் கட்டுரை. இதற்கு அடிப்படையாகச் சில செய்திகளைக் காண் போம். கன்யாகுமரி மாவட்டத்தில் சுசீந்திரத்தில் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று உள்ளது. “இராஜ ராஜ ராஜகேசரி பந்மர்க்கு யாண்டு பத்தாம் யாண்டு துடங்கின கற்கட ஞான்று” என்று உள்ளது. கீல்ஹார்ன் என்ற மேலை நாட்டு அறிஞர், இந்நாளை ஆராய்ந்தார். இராஜராஜனின் 10வது ஆட்சி ஆண்டு கற்கட (ஆடி ௴) மாதம் தொடங்கியது என்று முடிவு செய்தார் (“பத்தாம் யாண்டு தொடங்கின கற்கட ஞான்று” என்று உள்ளதால் இம்முடிவுக்கு வந்தார்). ஆதலின் அவன் ஆடி மாதம் முடிசூடிக் கொண்டான் என்று தெரிகிறது என்றார். பின்னர் வந்த “ராபர்ட் சீவல்” என்ற அறிஞர் இதன் அடிப்படையில் இராஜராஜன் 985ல் ஜூன் 25லிருந்து ஜூலை 12க்கும் முடிசூடியிருக்கக் கூடும் என்று அறிவித்தார். கோனேரிராஜபுரம் கல்வெட்டையும், உடையார்குடி கல்வெட்டையும் கொண்டு மேலும் சேதுராமன் ஆய்ந்துள்ளார். கோனேரிராஜபுரம் கல்வெட்டும் இராஜராஜன் காலத்தது. அவனது 26ஆம் ஆட்சி ஆண்டில் வெளியிடப்பட்டது. அதில் உள்ள பஞ்சாங்க குறிப்புக்கள், “ஆடி மாதம், தேய் பிறை, 14ஆம் நாள், புனர்வசு நட்சத்திரம், புதன் கிழமை” என்று உள்ளது. இது கொண்டு இக்கல்வெட்டு கி.பி. 1010ல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்பட்டது எனத் துல்லியமாகக் கூறலாம். இதிலிருந்து கி.பி. 985ல் ஆடி மாதம் புனர்வசு நட்சத்திரம். ஜூலை 18ஆம் தேதி என்று கண்டுள்ளார். அதே போல் உடையார்குடி கல்வெட்டு இராஜராஜனின் மூன்றாம் ஆண்டு வெளியிடப்பட்டது. பஞ்சாங்கக் குறிப்புக்கள் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரம், சனிக்கிழமையாகும். ஆதலின் இவ்விரு கல்வெட்டுக்களையும் ஆய்ந்து இராஜராஜன் முடிசூடிய பெருநாள் 18.07.985, தேய்பிறை, சனிக்கிழமை, புனர்வசு நட்சத்திரம் என்று திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார். இராஜராஜன் ஆட்சி தொடங்கியது ஆடி மாதம் என்று கீல்ஹார்ன் எழுதியதை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் அமைந்த ஆய்வு இது. சுசீந்திரம் கல்வெட்டை ஆழ்ந்து நோக்கினால் கீல்ஹார்ன் கொண்ட முடிவு தவறு என்று தெளிவாகத் தெரிகிறது. பண்டைய கல்வெட்டுகளில் ஒரு மரபு உண்டு. இவை தானம் கொடுத்ததைக் கூறுகின்றன. இவ்வாறு கூறும்போது, “இவ்வாண்டு இம்மாதம் முதல் இந்தத் தான பத்திரத்தில் உள்ளபடி நிறைவேற்ற வேண்டும். கார் முதல் அல்லது பசான் முதல் இவ்வாறு செய்ய வேண்டும்” என்று குறிப்பர். அதே போல் இந்த ஆண்டு இந்த மாதம் தொடங்கி இந்நாள், இதைத் தானமாக வைத்தேன் என்று குறிக்கப்பட்டிருக்கும். ஆண்டு என்ற சொல் ஆண்டில் என்ற பொருளில் வரும். இதே சுசீந்திரத்தில் இராஜராஜனுக்கு முன் ஆண்ட ஒரு பாண்டிய மன்னன் கல்வெட்டு உள்ளது. மாறஞ் சடையன் என்னும் அம்மன்னனின் கல்வெட்டில் ஒருவன் விளக்குக் கொடுத்த செய்தி உள்ளது. அதை “யாண்டு இரண்டு இதன் எதிராண்டு துடங்கின கற்கடக ஞாயிற்று” என்று குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஆண்டு ஆடி மாதம் தொடங்கியது என்று பொருள் இல்லை . எதிர் ஆண்டில் அதாவது, அடுத்த ஆண்டில் என்று ஆடி மாதம் தொடங்கியதோ அன்று என்பதே பொருள். ஆதலின் இராஜராஜன் கல்வெட்டில், “பத்தாம் ஆண்டே ஆடி மாதம் தான் தொடங்கியது” என்று பொருள் கொண்டது தவறு. “பத்தாம் ஆண்டில் ஆடி மாதம் என்று தொடங்கியதோ அன்று என்பதுதான் பொருள். ஆடி மாதம் தொடங்கிய நாளைக் குறிக்கிறதே ஒழிய, ஆண்டு தொடங்கியதை இக்கல்வெட்டு கூறவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ கல்வெட்டுக்களை கூறலாம். கல்வெட்டு வாசகங்கள் பதிவு செய்யும் பத்திரங்களில் உள்ள வாசகங்கள் போன்றவை. ஆதலின் மிகவும் கவனமாக படித்தல் வேண்டும். கீல்ஹார்ன் கொண்ட தவறான கருத்தின் அடிப்படையில் இராஜராஜனின் பத்தாம் ஆண்டு ஆடி மாதம் தொடங்கியது. ஆடி மாதம் புனர்வசு நட்சத்திரம் இன்ன தேதியில் வருகிறது. ஆதலின் 985ல் ஜூலை 18ஆம் தேதி, சனிக்கிழமை தேய் பிறையில்தான் முடிசூட்டிக் கொண்டான் என்ற கருத்து ஏற்புடையது அல்ல. அவ்வாறெனில் இராஜராஜன் முடி சூடிய தேதி எது என வினவில் இன்னும் சரியான சான்றுகள் வெளிப்படவில்லை என்பதுதான் சரி. அதுவரை இந்தத் தேதியை வைத்துக் கொள்ளக் கூடாதா என்றால், அது வரலாறு அல்ல, தனிப்பட்ட விருப்பம் என்பதாம்.
பொருளடக்கம் | திருக்கோயிலூர்ப் பாட்டு