ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி திருக்கோயிலூர்ப் பாட்டு பொருளடக்கம் | தேவார ஓவியம்
"முல்லைப்பாட்டு" என்றும் "குறிஞ்சிப்பாட்டு" என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். பட்டினப்பாலையை "வஞ்சி நெடும் பாட்டு" என்றும் அறிவோம். சங்கப்பாடல்கள் பத்தின் தொகுப்பைப் பத்துப்பாட்டு என்று அழைப்பதும் அனைவருக்கும் தெரியும். அவ்வாறு இருக்க இது என்ன திருக்கோயிலூர்ப் பாட்டு என்று நினைக்கிறீர்களா! ஆம், இந்த சங்கப்பாடல்களை நினைவில் கொண்டுதான் திருக்கோயிலூரில் உள்ள ஒரு பாடல் கல்வெட்டைத் "திருக்கோயிலூர்ப் பாட்டு" என்று கூறுகிறேன். சங்கப்பாடல்களைப் போல் இக்கல்வெட்டு முழுவதும் ஒரு நெடும்பாடலாக ஆசிரியப்பாவில் திகழ்கிறது. இக்கல்வெட்டை இயற்றியவன் சங்கப் பாடல்களை நன்கு கற்றுச் சுவைத்தவன். இப்பாடலில் சங்கப் புலவன் கபிலனை இவன் குறித்துள்ளான். இக்கல்வெட்டு தொன்மை மரபில் இயற்றப் பட்ட ஒரு சிறந்த இலக்கியமாகவும், கல்வெட்டுச் செய்தியை இலக்கியப் பாணியில் அமைத்ததால் ஒரு புதுமை இலக்கியமாகவும் திகழ்கிறது. இக்கல்வெட்டு தமிழகத்தின் தலைசிறந்த மாமன்னன் இராஜராஜன் காலத்தது என்று அறியும்போது இன்னும் பெருமிதம் அடைகிறோம். இராஜராஜனது அவையில் அறங்களை எடுத்துரைக்கும் சோழ அதிகாரியாகத் திகழ்ந்த வீதிவிடங்கன் கம்பன் என்பவனால் கொடுக்கப்பட்ட கொடையை இது குறிக்கிறது. ஆதலின் கல்வெட்டு வீதி விடங்கனைப் புகழ்வதாக முடிகிறது. பத்துப்பாட்டில் சில பாடல்கள்; "குன்று சூழிருக்கை நாடு கிழவோனே" - மலைபடுகடாம், "ஒளிறிலங் கருவிய மலை கிழவோனே" - பெரும்பாணாற்றுப்படை, "காவிரி புரக்கு நாடு கிழவோனே" - பொருநர் ஆற்றுப்படை, "பழமுதிர் சோலை மலை கிழவோனே" - திருமுருகாற்றுப் படை என முடிகின்றன. இம்முடிவுகள் போலவே இக்கல்வெட்டும் வீதிவிடங்கனைப் புகழ்ந்து "நலந்தரு பொன்னிநாடு கிழவோனே" என்று முடிகிறது. இம்முடிவே, இக்கல்வெட்டை இயற்றிய புலவன் பத்துப்பாட்டுக்களை தன் கண் முன்னே நிறுத்தி இக்கல்வெட்டை இயற்றியிருக்கிறான் எனப் புலப்படுத்துகிறது. இனிக் கல்வெட்டைப் பார்ப்போம் மற்ற கல்வெட்டுக்களைப் போல் இக்கல்வெட்டும் அன்றாண்ட அரசனாகிய இராஜராஜனின் புகழைக் கூறுவதுடன் தொடங்குகிறது. இராஜராஜன் - அவனது தாய் - அவள் பிறந்த மலையமான் குலம் - மலையர்களின் தலைநகராம் கோவலூர் - அங்கு சங்கப் புலவன் கபிலன் விண்ணுலகெய்திய கல் - அங்குள்ள சிவபிரான் - சிவபிரானின் வழிபாட்டுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் - அதன் வருவாயில் யார் யார் பங்கு பெற்று வழிபாடு செய்யவேண்டும் எனப் படிப்படியாகக் கூறி அதற்காகத் தானம் அளித்தவன் வீதிவிடங்கன் கம்பன் - அவனே "நலந்தரு பொன்னி நாடு கிழவோன்" எனக் கல்வெட்டு முடிகிறது. பாட்டின் அமைதியும், பத்துப்பாட்டில் வரும் நெடும்பாட்டுக்களைப் போலவே அமைந்திருக்கிறது. நல்ல இனிய தமிழ். இலக்கிய நயம் சிறக்க ஒவ்வொரு பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. கற்பனையின் சிகரத்தையே ஒவ்வொரு பகுதியும் எட்டிப் பிடிக்கின்றன என்றால் அது மிகையல்ல. அவ்வளவு சுவையுள்ள இலக்கியம் இது. சொல்லினிமையும் பொருள் செறிவும் நிறைந்து நிற்கும் இக்கல்வெட்டைப் பகுதி பகுதியாக அறிவது மிகவும் சுவை பயக்கும். இராஜராஜன் முதல் பகுதி இராஜராஜனைக் குறிக்கிறது. "இராஜராஜன்", "தண் தமிழ் நாடன்", "செம்பியர் பெருமான்". அவன் தான் எவ்வளவு பெரிய வீரன்! கதிரவனின் வழியில் வந்த மன்னன். மாபெரும் மாற்றரசர்களை எல்லாம் வென்று புறங்கண்டவன். பாண்டியர்களை மலைக்கு ஓட்டியவன். சேரர் வஞ்சியைக் கைப்பற்றியவன். கங்கபாடி இவனடி பணிந்தது. உதகை இவனது சீற்றத் தீயால் பற்றிச் சாம்பலாயிற்று. ஈழ மண்டலத்தைத் தன் தண்டால் வெற்றி கண்டவன். தங்கள் முன்னோர் இமயத்தில் பொறித்த புலிச் சின்னத்தை புதுக்க வடதிசை நோக்கிப் படை செலுத்தியவன் இவன். இவனது வெற்றிக் குடைக்கீழ் பெரும் நாடுகள் அடங்கின. அவ்வளவு வெற்றிச் சிறப்பு வாய்ந்தவன் "சண்ட பராக்கிரமன்", "இந்திர சமானன்" என்றும் "ராஜசர்வஞன்" என்றும் புகழ்கொண்ட மன்னன். இராஜராஜன் என மாபெரும் வீரனாக இவன் சித்திரிக்கப்படுகிறான். ஜய ஜய (வென்று) மொழி பன்னிய வாய்மையில் பணியப் பொன்னியல் விசும்பரில் கதழும் பசும்பரி வெள்ளுளை நெடுஞ்சுவற்று எடுத்த குறுந்துணைப் படுங்க நள்ளுறப் பொன்ஞாண் வள்ளுற வச்சத் தனிக்கா லரசு மனக்காற் கங்குல் குழம்புபடு பேரிருள் பிழம்புபட உருட்டிய செஞ்சுடர் மௌலி வெஞ்சுடர் வானவன் வழிமுதல் வந்த மஹிபதி வழிமுதல் அதிபதி நரபதி அசுவபதி கஜபதி கடலிடங் காவலன் மதிமுதல் வழுதியர் வரைபுக மற்றவர் தேவியர் அழுதுயர் அழுங்கலில் அழுங்கப் பொழுதியல் வஞ்சியிற் காஞ்சி வகுத்த செஞ்சிலைக் கலிங்கன்... புதுமலர் வாகை புனைந்து நொதுமலர் கங்கபாடிக் கவ்விக் கொங்கம் வெளிப்படுத் தருளி யளிப்படுத் தருளிய சாரல் மலையட்டுஞ் சேரன் மலைஞாட்டுத் தாவடிக் குவட்டின் பாவடிச் சுவட்டுத் தொடர்நெய்க் கனகந் துகள் எழ நெடுநற் கோபுரம் கோவை குலைய மாபெரும் புரிசை வட்டம் பொடிபடப் புரிசைக் கதைகவின் படைத்த சூளிகை மாளிகை உதைகை முன்னாள்ளெரி கொளுவி உதைகை வேந்தைக் கடல்புக வெகுண்டு போந்து சூழமண்டலந்தொழ ஈழமண்டலமும் கொண்டு தண்டு விட்டருளிப் பண்டு தங்கள் திருக்குலத்தோர் தடவரை எழுதிய பொங்கு புலிப்போத்துப் புதுக்கத் துங்கத் திக்கினிற் சேனை செலுத்தி மிக்க ஒற்றை வெண்குடைக்கீழ் இரட்டை வெண்கவரி தெற்றிய அனலந் திவள வெற்றியுள் வீற்றிருந் தருளிய வேந்தன் போற்றிருந் தண்தமிழ் நாடன் சண்ட பராக்ரமன் திண்டிறல் கண்டன் செம்பியர் பெருமான் செந்திரு மடந்தைமன் சீராஜராஜன் இராஜராஜனின் தாய் இதுவரை இராஜராஜன் சிறப்பினைக் கூறிய கல்வெட்டு இப்பொழுது இவனது தாயை கூறுகிறது. மாவீரனாகிய இப்புலியைப் பெற்றெடுத்த இவன் தாயைப் "புலியைப் பயந்த பெண்மான்" என்று கல்வெட்டுக் கூறுகிறது. எவ்வளவு உயர்ந்த கற்பனை! வீரமும் மென்மையும் இச்சொற்களிலே எடுத்துரைக்கப்பட்டுள்ள புலமை ஈடிணையற்றது. புலி என்னும் சொல் வீரத்தைச் சுட்டுவதோடன்றி புலிக்கொடியுடைய சோழன் என்பதையும் சுட்டுகிறது என்பது புலவனின் திறமைக்கு எடுத்துக்காட்டு. பெண்மையின் சிறப்பனைத்தையும் பூண்ட இராஜராஜனின் தாயைப் பெண்மான் என்னும் கல்வெட்டு, அவளை மாதவிக் கொடி என்றும் அழைக்கிறது. இப்புண்ணியத்தாய் இராஜராஜனின் தந்தை சுந்தர சோழன் இறந்தபோது அவனுடன் தீப்பாய்ந்தாள். பூதப் பாண்டியன் இறந்தபோது அவனது தேவி கோப்பெருந்தேவி தடுத்த மக்களை இகழ்ந்து தீப்பாய்ந்தாளே அவள் மரபில் வந்தவள் அல்லவா? கொழுந்து விட்டெரியும் தனது கணவனின் ஈமத்தீயின் மத்தியிலும் அவனது திருப்புயத்தில் முயங்கிய உத்தமி என அவளைப் புகழ்கிறது கல்வெட்டு. இந்திர சமானன் இராஜசர்வஞன் என்னும் புலியைப் பயந்த பெண்மான் கலியைக் கரந்து கரவாக் காரிகை சுரந்த முலைமகப் பிரிந்து முழங்கெரி நடுவணும் தலைமகன் பிரியாத் தையள் நிலை பெறுந் தூண்டா விளக்கு .................................. அரைசர் தம்பெருமான் அதுலன் எம்பெருமான் பரைசை வன்களிற்றுப் பூழியன் விரைசெயு மாதவித் தொங்கல் மணிமுடி வளவன் சுந்தரர சோழன் மந்தர தாரன் திருப்புய முயங்குந்தேவி மலையர் குலதெய்வம் இராஜராஜனைப் பெற்றெடுத்ததாலேயே சிறந்த இவ்வுத்தமி, தன் கணவனுடன் தீப்பாய்ந்த தெய்வப் பெண் எனில் அவளது சிறப்பைக் கூறவும் இயலுமோ! இவ்வளவு சிறந்த பெண் பிறக்கும் பேறு பெற்றது மலையமான் குலம். (இராஜராஜனின் தாய் மலையமான் குலத்துதித்தவள்) அவ்வளவு சிறந்த மலையமான் குலத்தோர் தங்கள் குல தெய்வமாகப் போற்றிய புண்ணியக் கோயில் திருக்கோயிலூர்க் கோயில். அவ்வூர் தென்திருக்கோயிலூர் என்றழைக்கப்பட்டது. அந்தப் புண்ணிய கோயில் பெண்ணை ஆற்றங்கரையிலுள்ளது. குடதிசையில் தோன்றி அருகில், சந்தனம் முதலிய வாசனை மரங்கள் நிறைந்த குன்றின் உச்சியிலிருந்து பாய்ந்து புது மதகுகளும், கலிங்குகளும் ஆங்காங்கே விளங்கப் பொங்கி வரும் அலைகளுடன் பாய்ந்து வரும் ஆறு பெண்ணையாறு. அப்பெண்ணையாற்றின் கரையில் அக்கோயில் உள்ளதால் புண்ணிய தீர்த்தம் என வணங்கப்பெறும். ............. விருப்புடன் வந்துதித்து அருளிய மலையர் திருக்குலத்தோர் அன்மை யாக தமரகத் தொன்மையில் குலதெய்வ மாகக் கொண்டது நலமி தங்கு அவசந் தொடுத்த கவின்கொளக் கதிர்நுதித் துவசந் தொடுத்த சுதைமதிற் சூழகழ் புளகப் புதவக் கனகக் கோபுர வாயில் மாட மாளிகை வீதித் தேசாந்தன்மைத் தென்திருக் கோவலூரி சாந்தன்றக் கவன்றது மிசாங் குடக்குக் கலுழி குணக்கு கால்பழுங்கக் காளாகருவும் கமழ்சந்தனமும் தாளார் திரள்ச் சாரளமு நீளார் குறிஞ்சியும் கொகுடியும் முகடுயர் குன்றில் பறிந்துடன் வீழப் பாய்ந்து செறிந்துயர் புதுமதகு இடறி பொரக் கலிங்கு இடந்து மொதுமொது முதுதிரை விலகிக் கதுமென வன்கரை பொருது வருபுனல் பெண்ணைத் தென்கரை உள்ளது தீர்த்தத் துறையது கபிலக்கல் மலையர்குலத் தெய்வமான அக்கோயிலில் அருகில் இருக்கும் குன்று கபிலக்கல் என்று அழைக்கப்படுவது. ஆம், முத்தமிழ் புலவனாக விளங்கினானே சங்கப் புலவன் கபிலன் அவன் பாரியின் பெண்ணை மலையமானுக்குக் கொடுத்து தன்பணி தீர்ந்ததென எண்ணி வீடு பேற்றை நினைந்து தீயில் பாய்ந்து உயிர் நீத்த இடம் அக்கல் என்று கல்வெட்டுக் கூறுகிறது. மொய் வைத்தியலு முத்தமிழ் நான்மைத் தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கை பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை அலைபுனல் அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும் விசும்பின் வீடு பேறெண்ணி கனல்புகும் கபிலக் கல்லது சங்கப் புலவன் கபிலனைப் பற்றிச் சில புதிய செய்திகளை இக்கல்வெட்டுக் கூறுகிறது. கபிலன் பாரியின் பெண்ணை மலையர்க்குக் கொடுத்தான் என்பது ஒரு செய்தி. திருக்கோயிலூரில் கபிலன் வீடுபேறெண்ணி தீப்பாய்ந்து உயிர் நீத்தான் என்பது மற்றொரு செய்தி. "பாரி தன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி" என்பது கல்வெட்டு வாசகம். அடைக்கலப் பெண் என்று ஒருமையிற் குறிக்கப்பட்டுள்ளது. பாரி மகளிர் இருவர் என்பது சங்கச் செய்தி. ஆய்தொடி அரிவையர் (புறம் 117) குறுந்தொடி மகளிர் (புறம் 113) இவர் யாரென்குவை யாயின்... நெடுமாப் பாரி மகளிர் (புறம் 201) பரந்தோங்கு சிறப்பிற் பாரிமகளிர் (புறம் 201) என்றும் கபிலரே பாடிய பாட்டுக்கள் பாரி மகளிரை பன்மையில் கூறுகின்றன. பாரி மகளிர் பாடிய பாடலில் "யாம் எந்தையும் இலமே" என அவர்களே தங்களைப் பன்மையில் குறித்துள்ளனர். அவன் மகளிரை "பார்ப்பார் படுக்கக் கொண்டு போவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது" (புறம் 113) என்றும் "அவன் மகளிரைக் கொண்டு போம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது" (புறம் 111) என்றும், புறநானூற்றின் பண்டைய அடிக்குறிப்புக்களும் பன்மையிலேயே கூறுகின்றன. அவ்வாறு இருக்க கல்வெட்டில் ஒரு பெண் மட்டும் குறிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது. மேலும் புறநானூற்றின் அடிக்குறிப்பு கபிலன் பாரி மகளிரைப் "பார்ப்பார்ப் படுத்தான்" எனக் குறிக்கிறது. ஆனால் கபிலர் பாரியின் பெண்ணை மலையமானுக்குக் கொடுத்தார் என்று கல்வெட்டுக் கூறுகிறது. "தமிழ் நாவலர் சரிதை" என்னும் தொகுப்பில் பாரி மகளிரைப் பற்றிய சில செய்திகள் உள்ளன. பாரி மகளிருக்கு "அங்கவை சங்கவை" என்று பெயர். அவர்களில் அங்கவையை மலையமானுக்கு மணம் செய்து கொடுத்தனர். அம்மலையன் பெயர் தெய்விகன் என்பதாகும். இம்மணம் திருக்கோவலூரில் நடந்தது என்ற செய்திகள் தமிழ் நாவலர் சரிதையில் காணப்படுகின்றன. சேரலர்கோன் சேரல் செழும்புத் திருக் கோவ லூரளவுந் தான் வருக வுட்காதே-பாரிமகள் அங்கவையைக் கொள்ள அரசன் மனமியைந்தான் சங்கியாதே வருக தான் என்பது ஒரு பாடல். இப்பாடலில் திருக்கோவலூர் அரசன் அங்கவையை மணந்துகொள்ள இசைந்துள்ளான் என்ற செய்தி காண்க. சங்கவையையும் கூடத்தான் என்றும் ஒரு பாடம் உண்டு. மேலும் சில பாடல்கள் ஒரு பெண்ணுக்கு மட்டுமே மணம் நடந்ததாக குறிக்கின்றன. அவ்வை பாண்டியனைத் திருமணத்துக்கு வர எழுதிய பாடலில் ...............................தையற்கு வேண்டுவன கொண்டு விடியல் பதினெட்டா நாள் ஈண்டு வருக இயைந்து என்று உள்ளது. அதேபோல் சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவரும் வந்ததாகக் கூறும் பாடல். சேரனும், சோழனும், பாண்டியனும் மங்கைக் கருகிட வந்து நின்றார் மணப் பந்தரிலே என மங்கை ஒருவளையே குறிக்கின்றது. திருமணம் திருக்கோவலூரில் நடந்தது என்று ஒரு பாடல் குறிக்கிறது. கருணையால் இந்தக் கடல் உலகங் காக்கும் வருணனே மாவலையான் கோவற் பெருமணத்து நன்பாரி தாழிகொண்ட நன்னீரது தவிர்த்து பொன்மாரி யாகப் பொழி இப்பாடல்களிலிருந்து ஒன்று புலப்படும். பாரி மகளிரில் ஒருவரை மலையமான் மணந்து கொண்டான். அத்திருமணமும் திருக்கோயிலூரில் நடந்தது என்ற செய்தியும், இராஜராஜன் காலத்துக் கல்வெட்டிலும் உள்ளது அறியற்பாலது. தமிழ் நாவலர் சரிதை கி.பி.17ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது எனத் தமிழ்ப் பேரறிஞர் கருதுவர். பாரிமகளை மலையமான் மணந்தது இராஜராஜன் காலம் வரை புகழ் பெற்றிருந்தது என்பதும் அது அண்மைக் காலம் வரை வழக்கிலிருந்தது என்பதும் தெளிவு. கோவலூர் வீரட்டானம் இவ்வளவு சிறப்பு வாய்ந்தது திருக்கோவிலூர் வீரட்டானம், எட்டு வீரட்டானம் என்று புகழப்படும் வீரட்டானங்களில் இதுவே தொன்மையானது. பெரும் யோகிகள் எல்லாம் வந்து தங்கும் பெருமையுடையது. இங்கு ஆதவனைத் தொழும் அந்தணர்கள் ஆகமத் தொழில் வழுவாது அர்ச்சனை புரிவர். எழில்மிகு பாவையர் நாட்டியம் புரிவர். இசைக் கருவிகள் எல்லாம் இனிமையாக இசைக்கும் ஒலி நிறைந்தது. பக்தர்கள் எல்லாம் மனம் நிறைந்து பாடுவர். அரஹர என்னும் பேரொலி விண்ணைப் பிளக்கும் வகை பக்தர்கள் குழுமிய புண்ணியத்தலம், ஈசர் கோயில் என கோவிலூர் வீரட்டானம் கல்வெட்டில் புகழப்படுகிறது. புனல்வளர் பேரெட்டான வீரட்டானம் அனைத்தினும் அனாதியாயது நினைப்பினும் உணர்தற்கு அரியது யோகிகள் உள்ளது புணர்தற்கு இனியது பொய்கைக் கரையது சந்தன வனத்தது சண்பகக் கானது நந்தன வனத்தின் நடுவது பந்தல் கரும்படை பெண்பூங் கரும்பிடை துணித்தர ஆட்டொலி ஆலை அயலது பாட்டொலிக் கருங்கைக் கடையர் பெருங்கைக் கடைவாள் பசுந்தாட்டியும் செந்நெல் பழனத் தசும்பார் கணியும் ................ அருக்கன் அரிச்சனை முற்றிய நான்மறை தெரிந்து நூன்முறை உணர்ந்து ஆங்கு அருச்சனா விதியொடு தெரிச்ச ஆகமத் தொழில் மூவெண் பெயருடைய முப்புரி நூலோர் பிரியாத் தன்மை பெருந்திரு உடையது பாடகச் சீரடி பணைமுலைப் பாவையர் நாடகத் துழதி நவின்றது சேடகச் சண்டையும் கண்டையும் தாளமும் காளமும் கொண்டதிர் படகமும் குளிறு மத்தளங்களும் கரடிகைத் தொகுதியும் கைம்மணிப் பகுதியும் முருடியல் திமிலை முழக்கமும் மருள்தரு வால்வளைத் துணையும் மேல் வளைத் தணையும் கருப்பொலி மேகமும் கடலும் எனக் கஞலி திருப்பொலி திருப்பலி சினத்து விருப்பொலி பத்தர் தம் பாடல் பயின்றது முத்தமிழ் நாவலர் நாற்கவி நவின்றது ஏவலில் அருஷையோடு அரஹர எனக் குனித்து அடிமை செய் பருஷையர் பகுவிதம் பயின்றது அருஷை முக்கண்ணவன் உறைவது கடவுளர் நிறைவது மண்ணவர் தொழுவது வானவர் மகிழ்வது மற்றும் இன்ன வளங்கொள் மதிற் பதாகை தெற்றுங் கொழுநிழல் சிவபுரத்தாற்க்கு கோயிலுக்கு தானம் வீரட்டானத்து உறைகின்ற பெருமானுக்கு வழிபாட்டுக்குக் கொடுத்த தானத்தையும் கல்வெட்டு பாடலாகவே கொடுத்துள்ளது. கொடுத்த தானம் தேவன்குடி என்னும் ஊர் நிலமாகும். 12 சாண் நீளம் கொண்டது ஒரு கோல் என்னும் அளவு. இந்த 12 சாண் கோல் அளவால் 160 குழி கொண்டது ஒரு மா நிலம். இவ்வாறு 6 1/4 வேலி நிலம் தானமாக அளிக்கப்பட்டது. (20 மா கொண்டது ஒரு வேலி) இந்நிலத்திலிருந்து 1 மா நிலத்துக்கு 6 கலம் இறையாக 720 கலம் அளிக்கவேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அதிலிருந்து வரும் வருவாயிலிருந்து என்னென்ன செய்தல் வேண்டும் என்றும் கல்வெட்டு குறிக்கிறது. பன்னாள் நிலைபெற முன்னாள் உரவோன் செய்த தானம் தேவன் குடியில் அலகியல் மரபில் அமைந்து உலகியல் சாண் பன்னிரண்டில் அமைந்த தனிக்கோல் போற்றுற வளந்த நூற்றறுபது குழி மா வொன்றாக வந்த வேலி ஆறே காலில் அந்தங் களைந்து நீங்கிய நிலத்தால் நீங்கா நெற்றுகை ஆங்கொரு மாவிற்கு அறுகலமாக கொழு நூற்றுவராடும் கூட்டி அளந்த எழுநூற்றிருபதில் இறை மகற்கு உரிமை நாழி எட்டான் வாழி அட்டானக் கருங்கால் ஒன்றால் செங்கை இரண்டிட்டு அளந்த நெல்லால் அறுபதினில் களைந்த நிவந்த தன்மை நினையில் உவந்து நஞ்சுண்டவர்க்கு அமுதுண்ண நயந்த ஒத்தெண் வழுவாப் பத்தெண் குத்தல் பழ நெல்லரிசி பன்னிரு நாழிக்கு பதினை இரட்டி நெல் பதினை இரட்டியும் குறுவாளான நெடுவாள் நயனிக்கு ஓரிரு நாழி யுள்படுத் துயர்ந்த நெல் நாலெட்டான நாழியும் மிளகு முப்பிடிக்கு செல்லக் குடுத்த நெல் லஞ்ஞாழியும் சூழ் கறி துவன்ற போழ் கற் கொள் நெல் நால் உரி உருக்கிய நறு நெய் உழக்கரை தனக்கு வழக்கரை வினவில் முந்நாழியுந் தயிர் முந்நாழிக்கு ஆங்கு அறுநானாழியும் அடைக்காய் அமிதுக்கு பந்நிரு உழக்கும் பரிசாரக மாணன் நான்கினுக்கு நெல் அறு நானாழியும் திருமடைப் பள்ளிப் பெருமடைக்குதவும் இந்தன ஒருவற்குத் தந்த முன்னாழியும் ஆக நெற்கலமும் ஏக நற்றிவசம் அப்பரிசு இயற்றலில் அறு வகை இருதுவும் இப்பரிசு இயற்றி எழுந்து நேரான தேவன் குடியிலிருந்து வந்த நெல் 720 கலமும் கொண்டு செய்ய வேண்டியவை நாள் 1க்கு அமுது படிக்கு 18 குத்தல் பழநெல்லரிசி 12 நாழிக்கு 32 நாழி நெல் மிளகு 3 பிடிக்கு 5 நாழி நெல் கறி 4 உரி நெய் 1 உழக்கு 3 நாழி தயிர் 3 நாழி 24 நாழி அடைக்காயமுதுக்கு 12 உழக்கு பரிசாரகர் நால்வர்க்கு 24 நாழி விறகுக்கு 3 நாழி பிற ஊர்களில் அளிக்கப்பட்ட நிலங்களின் அளவுகள் கோவலூரில் 15 மா. இலுப்பைக்கால் 2 மா. மேட்டுக் கொல்லை 3 மா. புல்லாலிபுரம் 5 மா. ஆலஞ்செறு 5 மா. தோங்காச் செறு 2 மா. ஆக மொத்தம் 32 மா நிலம் இந்நிலங்கள் அர்ச்சனாபோகத்திற்காக அளிக்கப்பட்டன. மேலும் பிற இடங்களில் கொடுக்கப்பட்ட நிலம். முணங்கல் பூண்டி 36 மா. களர் நிலம் 10 மா. பகவந்தக் கழனி 28 மா காயம்பள்ளம் 2 மா. படித்துழான் வேலி 8 மா. கணியக்கழனி 8 மா. பழனக்காடு 5 மா. ஆக இவற்றில் இருந்த வந்த நெல் 522 கலமும் 66 கலமும் ஆகும். முணங்கல் பூண்டியிலிருந்து 267 கலம் நெல் வந்தது (300க்கு 33 குறைவு) இவற்றில் இருந்து வருவது கொண்டு அமுதுக்கு 1 தூணி நெல் நெய் 3 பிடிக்கு 6 நாழி தயிர் 3 நாழிக்கு 6 நாழி அடைக்காயமுது 6 உரி அபிஷேகம் செய்யும் மாணிக்கு 1 குறுணி 4 நாழி வேதம் படித்த ஏவல் மாணிக்கு 1 குறுணி 4 நாழி மேலும் திருவிளக்கு 80க்கும் இவை பயன்பட்டன. இவை தவிர ஆவியூர் என்ற ஊரில் சமணர் கோயிலுக்கு சொந்தமான பள்ளிச் சந்தம் (முக்குடையவர் தம் அறப்புறம்) நீக்கி 3 + 3/4 + 1 வேலி நிலம் இதிலிருந்து வந்த நெல் கீழ் வருபவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க நிர்ணயிக்கப்பட்டது. 32 நாடகமகளிர்க்கும், பஞ்சாசாரியருக்கும் நந்தவனத்துக்கு நீர் இறைப்போர்க்கும் யோகி ஒருவனுக்கும் திருவாய்க் கேழ்வி ஒருவனுக்கும் கொடுக்க நிச்சயிக்கப்பட்டது. புதுமலர் விரிந்து மதுமலர் சோலைப் புள்ளூர் கோவல் உள்ளூர்ப் பழநிலம் இரட்டு முக்காலிற் றந்த பதினைஞ்சு மொட்டுக் கல்லைக் கவர் மூன்று மாவும் ஆலஞ் செறுவில் அஞ்சு மாவும் திரண்டுபாய் புனல் தேங்காச் செறுவில் இரண்டு மாவும் இலுப்பைக் காலிரண்டும் நெல்லாலித் தெழும் புல்லாலிப் புறம் அஞ்சொடும் கூட்டி ஆகிய நிலத்தொகை அப்புத் திரண்டியல் மா முப்பத்திரண்டும் மேலாறு உணர்ந்த நாலாறு எண்பயில் அந்தணர் அனைவர்க்கும் அர்ச்சனா போகம் தந்தபின்னைத் தடமலர்ப் பொய்கைப் போதகர் பழனப் புதுமலர்ச் சோலைச் சிதாரி பலம்மஞ்சும் அஞ்சாமல் கேட்ட திருவைய்யன் கோட்டமில் குணத்தால் செம்பொற் புரிசை சிவபுரத் தார்க்கு கோவல் அந்தணர் பால் கொண்டு கொடுத்தன பண்டைக் கோலால் பண்டை குழித் தொகை மணங் கொண்டிரண்டு முணங்கல் பூண்டி ஒப்பத் தொறுமா முப்பத் தறுமாவும் மிகவந்துயர் புனல் பகவந்தக் கழனி எட்டு முதல் இருபது மாவும் மட்டவிழ் பூத்துழாவிய புனல் மாத்துழான் வேலி ஏவிய எட்டு மாவும் வாவியில் கோடெறு பழனக் காடெறு மாநிலம் அஞ்சும் களர்நிலம் பத்தும் நெஞ்சசத் துள்ளத் தகும்புனல் உரவுக் கடலுகாயம் பள்ளத் திரண்டும் பாவரும் கணியக் கழனியில் எட்டும் கைகலந்து ரைப்பில் உழனி... மேற்படி காலால் பாற்பட வளந்த இங் கடனவர் பாங்குடன் தொகுத்த மெஞ்ஞூற் றுரைகையில் மேதகு தூநெல் அஞ்ஞூற் றிருபத் திருகலம் என மற்றைத் தொகையில் மதிவளர் சடையோன் பெற்ற வாரம் பிழையறப் பேசில் ஐம்ப திற்றைஞ்சொடு மொய்ம்புறு பதினொரு கலத்தொடு முணங்கர் பூண்டியில் கறைநெல் நஞ்சை நீக்கிப் புஞ்சை நான்மா மாத்தால் கலவரை யான வரையறை அறுகலம் ஏற்றிப் பெறுகல வளவை மூன்றொடு முப்பது குறைந்த முன்னூற்றுக் கலத்தினில் மற்றக் கண்ணுதற்காக நிலத்த வருவந்த நிவந்தம் நலந்தகு நாள் ஒன்றினுக்கு நால் முன்னாழி பானிறத் தன்மை தூநிறக் குத்தல் அரிசியிலான நெல்லு வரிசையில் குறுபவள் கூலி யேற்றி பெறுவன பேணிய பழநெல் தூணியுங் காணியவை அமுது புகழு நெய்யமுது முப்பிடி கொள்ளக் கொடுத்த நெல்அறு நாழியும் பொழுது மூன்றினுக் கிழுதுபடு செந்தயிர் ஒரு முன்னாழிக் கிருமுன் னாழியும் அடைக்காய முதுக்கு ஆறு உரியத்து அந்தணன் ஒருவன் அபிஷேகம் செய்ய தந்தன குறுணி முற்றதைந்த நானாழியும் ஓராண்டினுக்கு நேராண் டாக நண்ணிய நக்ஷத்திரமென நல்லோன் எண்ணிய திருவிளக்கு எண்பதும் கண்எனக் காவியர் கயல் பயல் ஆவியரதனில் திக்குடையிவரும் முக்குடை யவர்தம் அறப்புற மான திறப்பட நீக்கிச் சாலி விளைநிலம் வேலி யாக்கி முதல்வதின் மூன்றே முக்காலே அரைக்கால் இதன்தனி வந்த இயல்வகை உரைப்பில் ஒப்பத் திருஅனையவர் முப்பத் திருவர் பாடல் பயின்ற நாடக மகளிர்க்கும் நெஞ்சாசார நிறைவொடு குறையா பஞ்சா சாரியப் பகுதி யோற்கும் நரைப் புதுமலர் விரி நந்தவானம் இறைப்புத் தொழில் புரிந்த இருந் தவத்தோர்க்கும் யோகி ஒருவனுக்கு நியோகமுடைய ...................... செஞ்சடைக் கடவுள்தன் திருவாய்க் கேழ்வி தஞ்சுடைக் கடிகையன் தனக்கும் பாட்டுடைத் தலைவன் இந்நிவந்தங்களைக் கூறும் கல்வெட்டு இவற்றை யார் கொடுத்தார் எனக்கூறும் பகுதியில் வீதி விடங்கன் கம்பன் என்பவன் இவற்றை அளித்த கொடையாளி எனக் கூறுகிறது. இவனே பாட்டுடைத் தலைவன். இவனைக் கூறும் பகுதியும் படித்துப் படித்து இன்புறத்தக்கது. இவ்வீதி விடங்கன் இராஜராஜசோழனுடைய அவையில் அறங்களை எடுத்துக்கூறும் அதிகாரி. இவன் அம்பர் நாடன். மணற்குடி நாடு, ஆலங்குடி, திரைமூர் முதலிய ஊர்களை உடையவன். அரசனது ஏவல் கேளாது இருந்த மாற்றார்களைத் தண்டித்து புலிச் சின்னத்தின் புகழ் சிறக்க உழைத்தவன். நித்தவினோதன் என்றும், அருள்மொழி என்றும் பெயர் பெற்ற இராஜராஜனது காரியத்தைத் தவிர வேறு எக்காரியத்தையும் நினையாதவன். சிவபிரானுடைய நெற்றிக் கண்ணையும், சிந்தாமணியையும் போன்ற புகழ் பெற்றவன். யானை ஏற்றத்திலும், குதிரை ஏற்றத்திலும் சிறந்தவன். இவ்வளவு சிறப்பு பெற்ற கம்பன் ஆகிய வீதி விடங்கன் கரும்பு ஆலைகள் நிறைந்த பொன்னி நாட்டின் கிழவன் எனப்பாடல் முடிகிறது. நெஞ்சில் விதித்த முறைமை மதித்து நோக்கி இன்னவை பிறவும் இராஜராஜன் தன்னவை முன்னற் தத்துவ நெறியில் அறங்கள் யாவையும் இறங்கா வண்ணம் விஞ்ஞா பனத்தால் மிகவெளிப் படுத்தோன் அன்பது வேலியில் அடைகுன் றகர்க்கும் ஒன்பது வேலி உடைய உரவோன் கொம்பர் நாடுங் குளிமலர்ச் சோலை அம்பர் நாடன் ஆலங் குடிக்கோன் தெண்டிரை பழனந் திரைமூர் நாடன் வண்டிரை துயர்பொழில் மணற்குடி நாடன் நேரிய அருமொழி நித்த வினோதன் காரியம் அல்லது காரியம் நினையாது ஆரா தலைமை கூற்பக சதுசன போரான் தலைமை புனர்புயத்து கூத்தொழில் கேளா தேத்தொழில் முனைந்த கண்டகர் கரிசறக் துறிசற் கலிசெக மண்டல சுத்தியில் வயப்புலி வளர்த்தோன் வான்பால் மதியும் வலம்புரி இடம்புரி ஆன்பால் வதியும் விரிசடைக் கடவுள் நெற்றிக்கண்ணும் நிலத்தவர் நினைந்த தெற்றிக் கண்ணும் சிந்தாமணியும் போலப் பிறந்த புகழோன் கோலக் கருங்களிற்று உழவன் கம்பத்தடிகள் மாதி விடங்கு வரு பரிவல்ல வீதிவிடங்கன் மென்கருப் பாலை தலந்தருந் தண்டலைத் தடநீர் நலந்தரு பொன்னி நாடு கிழவோனே கி.பி. 1000-ல் சங்கப் பாடல்களின் செல்வாக்கு சங்க நூற்களை கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்று வரலாற்றாசிரியர் கூறுவர். இவை எழுந்த ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இராஜராஜன் காலத்தில் (கி.பி. 1000) சங்க இலக்கியங்கள் மீண்டும் சிறப்பாகப் படிக்கப் பெற்றன என இப்பாட்டால் அறிகிறோம். இராஜராஜன் செந்தமிழைச் சிறப்பாகப் போற்றியிருக்கிறான் என்பதற்கு இக்கல்வெட்டும் ஒரு சான்று. கி.பி.11-ம் நூற்றாண்டில் இராஜராஜன் காலத்தில் எழுந்த சில பாடல்கள் இது போல் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளதைக் காணும்போது இந்நூற்றாண்டில் சங்கப் பாடல்கள் பெரிதும் உவந்து படிக்கப் பெற்றன என்பது தெளிவாகும். நக்கீரதேவர் இயற்றிய "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" என்னும் பாடலும், "கோபப் பிரசாதம்" என்னும் பாடலும், நம்பியாண்டார் நம்பி பாடிய "ஆளுடைப்பிள்ளை திருத்தொகை" முதலிய பாடல்களும் இது போன்று ஆசிரியப்பாவாலாகிய சிறந்த பாடல்களாகும். இவை அனைத்தும் இராஜராஜன் காலத்தில் இயற்றப் பட்டவை. இவை நெடும் பாட்டுக்களாக அமைந்துள்ளதிலிருந்தும் இராஜராஜன் காலத்தில் சங்க மரபு மறுமலர்ச்சி பெற்றது எனத் தெளியலாம். ஆதலின் தொடக்கத்தில் கூறியதுபோல் இப்பாடலை திருக்கோயிலூர்ப் பாட்டு என்பது பொருத்தமே. இப்பாட்டைத் தொடர்ந்து மேலும் மூன்று பாடல் கல்வெட்டுகள் உள்ளன. அவற்றிலிருந்து வீதி விடங்கன் கம்பனுக்கு மஹிமாலய மூவேந்த வேளான் என்னும் பட்டம் இருந்தது என்று அறிகிறோம். வீரட்டானத்தாரின் முடிமேல் வைக்கப் பொன்னாலான பூ ஒன்றுஅளித்தான். மூன்று கழஞ்சு பொன்னால் பூவேலைப் பாடுடன் கூடிய மணிப்பட்டம் ஒன்றும் அளித்தான். மேலும் நூறு பொன்னால் சிவலிங்கம் ஒன்றும் அதற்கு வெள்ளியினால் பீடம் ஒன்றும் செய்து அதன்மேல் பொன் போர்த்துக் கொடுத்தான் என்றும் அப்பாடல்கள் கூறுகின்றன. வேலியர்கோன் வீதிவிடங்கள் விறல் கம்பன் ஆலியல் மான் சோழன் அதிகாரி-கோலப் படியின்மேல் பொற்பூப் பைங்கோவல் வீரட்டர் முடியின்மேல் வைத்தான் முயன்று. பொன் முக்கழஞ்சால் மணிப்பட்டம் பூப்புனைந்து மின்மிக்க கட்டமைந்து மேற்கட்டி சொன்மிக்க கோவலான் வீரட்டற்கு ஈந்தான் குலவேலி காவலான் வாழ் கம்பன் கண்டு சென்னி திறல் ஸ்ரீராஜராஜற்கு யாண்டு திகழும் இருபத்தேழில் செழுநீர் வேலி மன்னிய கம்பன் மஹிமாலய மூவேந்த வேளான் விண்ணப்பத்தால் மணிநீர் கோவல் வென்னியல் சீர்வீரட்டத்தில் இலிங்கமொன்று பொனூற்றால் செய்ததற்கு வெள்ளிப்பீடம் பன்னிய தொண்ணூற்றால் முக்கழஞ்சுடை அம்பொன் போர்த்ததும் அய்ங்கழஞ்சின்மேல் பத்துமாவே. மாபெரும் வீரன் இராஜராஜன். அவனை ஈன்ற ஈடிலாத்தாய் மலையமான் குலத்தவள். அம்மலையர் குலத்து நகரம் திருக்கோவிலூர். அங்கு அனாதியாயது வீரட்டானர் கோயில். அப்புண்ணியக்கோயில் எவ்வளவு சிறந்ததாக இருக்கவேண்டும்! அக்கோயிலுக்குத் தானம் அளிக்கும் பேறு பெற்றவன் கம்பன் வீதி விடங்கன் எனில் அவன் புகழ் தான் என்னே! இச்சிறப்புடைய கல்வெட்டு திருக்கோயிலூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கருவறையின் தெற்கு, கிழக்கு, வடக்குச் சுவர்களில் வெட்டப்பட்டுள்ளது. தமிழ் நாட்டுக் கல்வெட்டு வரலாற்றில் பொன்னேட்டில் வடித்து வைத்து போற்றத்தக்கது.
பொருளடக்கம் | தேவார ஓவியம்