ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி இராஜராஜனின் செயல்திறன் பொருளடக்கம் | இராஜராஜ சோழன் முடிசூடிய திருநாள்
இராஜராஜன் தமிழ்த் தாயின் ஒப்பருந்தவப் புதல்வன். அவனது ஆற்றலை, அவன் விட்டுச் சென்றுள்ள அளப்பரும் கலைச்செல்வங்களை, அவனது ஆட்சித்திறனை, எங்கோ மூலையில் புற்றிட்டுக் கிடந்த திருமுறைகளைத் தேடி எடுத்து அளித்த பெருமையை, இன்னும் பல சிறப்புக்களை நோக்கும் போது இம்மன்னன் இந்திய நாட்டிலேயே ஆண்ட மன்னர்கள் அனைவரிலும் தலையாயவன், சிறந்தவன், போற்றப் புகழத் தகுந்தவன் என்பது தெளிவு. பல மன்னர்களைப் பற்றிய கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பல அன்று ஆண்ட அரசர்களைப் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. ஆயினும் இராஜராஜனுடைய கல்வெட்டுகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. அவற்றில் பலவற்றை இராஜராஜன் எழுதும்படி தானே ஆணையிட்டான். ஆதலில் அக்கல்வெட்டுகளிலிருந்து அம்மன்னனுடைய சிந்தனைகள் எவ்வாறு இருந்தன; அவன் செயலாற்றும் திறமை எவ்வாறு இருந்தது; அவனது தனித் தன்மை என்ன என்பதையும் மிகவும் தெளிவாக நாம் அறிய முடி கிறது. தஞ்சையில் இராஜராஜன் எடுப்பித்த பெருங்கோயிலில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. இவற்றில் பல இராஜராஜனால் கொடுக்கப்பட்ட தானங்களை (பரிசுகளை)க் கூறுகின்றன. பிற மற்றவர்கள் அளித்த பரிசுகளைக் குறிக்கின்றன. இராஜராஜன் அளித்த பரிசுகளை மட்டும் நாம் ஆய்ந்தால் அம்மன்னின் சிறப்பைத் தெளிவாக அறியலாம். தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை, “தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள்” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. இராஜராஜனது கொடைகள் அதில் இடம் பெற்றுள்ளன. கலன்கள் இதில் பல அன்று வழக்கிலிருந்து அடுகலன்களின் பெயர்களை நமக்குத் தெரிவிக்கின்றன. தளிகை, மண்டை, கெண்டி, தட்டம், குடம், ஒட்டு வட்டில், கலசம், படிக்கம், நெடுமடல், மானவட்டில், கறண்டிகைச் செப்பு, இலைச் செப்பு, தாரைத்தாள் வட்டில், ஈச்சொப்பிக்கை, இலைத் தட்டு, மூக்கு வட்டகை, கை வட்டகை, வட்டில், பிங்காளம், கச்சோளம், சட்டுவம், நெய்முட்டை, குறுமடல் ஆகிய கலன்களின் பெயர்கள் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை. இவற்றில் சில எவ்வாறு இருந்தன என்பதையும் இராஜராஜன் தெளிவாகக் குறித்திருக்கிறான். “தூக்கத்தில் தலையில் தைத்த பதினாறு” உட்பட பொன்னின் கொடிக்கருக்கு இரண்டு, சிங்கபாதம் இரண்டும் உட்பட தாரைத்தாள் வட்டில் (இந்த வட்டிலின் தாள்கள் சிங்கக் கால்கள் போல் செய்யப்பட்டிருந்தன) மூக்கும் அடியும் உட்பட கலசப் பானை, அடியும் மூழலும் உட்பட கறண்டிச் செப்பு. யாளிக்கால் நான்கும் மூழலும் உட்பட இலைச் செப்பு என இம்மன்னன் தான் கொடுத்த சிறு பாத்திரங்களின் உருவங்களைக்கூட தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது போற்றத் தகுந்தது. ஒரு நெய்முட்டை கூட விட்டு விடாமல் பதிவு செய்து வைத்துள்ளது எந்த அளவிற்குக் கோயில் பொருள்களைக் காக்க வேண்டும் என்று பின்வரும் சந்ததியினருக்கு எடுத்துரைப்பது போல் காண்கிறோம். இவற்றை இராஜராஜன் பரிகலன்கள் என்று கூறுகிறான். இவற்றில் மற்றொரு சிறப்பும் உண்டு. இப்பரிகலன்கள் எங்கிருந்து வந்த பொருளால் செய்யப்பட்டவை என்பதைக் கூட இராஜராஜன் குறிக்கிறான். தன்னுடைய பண்டாரங்களிலிருந்து கொடுத்தவை எவை? சேரனையும், பாண்டியர்களையும் மலை நாட்டில் தோற்கடித்தபோது கிடைத்த வெள்ளியைக் கொண்டு இங்கு செய்து அளித்த கலன்கள் எவை என்பதையும் தெளிவாகக் குறித்துள்ளது வியக்கத்தக்கது. தன்னுடைய பண்டாரத்தில் இருந்தும், மாற்றரசர்களை வெற்றி கண்டபோது கொண்ட பண்டாரங்களில் இருந்தும், கொடுத்த பொன்னாலான கலன்கள் எவை என்பதையும் தெளிவாகக் குறித்துள்ளான். இந்தக் கல்வெட்டுகளில் “தளிகை ஒன்று” என்று பல கலன்கள் திரும்பத் திரும்ப எழுதப்பட்டுள்ளதைக் காண்கிறோம். ஒரே வகையான கலன்களை ஏன் பல தடவை திரும்பத் திரும்ப எழுத வேண்டும் என்று கூட ஐயம் நமக்குத் தோன்றும். ஆனால் கல்வெட்டைச் சற்றுத் தெளிவாகப் பார்த்தால் இவ்வாறு எழுதியிருப்பதின் நோக்கம் தெரியும். ஒரே வகையைச் சார்ந்த கலமாக இருந்தாலும் அவற்றின் எடைவேறுபடுவதால் அவற்றைத் தனித் தனி யாகக் குறித்துள்ளான். அது மட்டுமல்ல! மிக அதிக எடையுள்ள கலத்திலே தொடங்கி, படிப்படியாக எடை குறைந்து வருகிற வகையில் அவற்றை வரிசைப்படுத்தி குறித்துள்ளதையும் காணலாம். உதாரணமாக ஒரு கல்வெட்டில் முப்பது தளிகைகளைக் குறித்துள்ளான். 983 கழஞ்சு எடையுள்ளதில் தொடங்கி 982, 981, 980, 978 என வரிசையாக எழுதப்பட்டுள்ளது. எவ்வளவு கவனத்துடன் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளி வாகும். இரண்டு கலன்கள் ஒரே எடை உடையவையாக இருந்தால் அவற்றை ஒரே வரியில் குறித்து விடுவதையும் காண்கிறோம். நெய் முட்டைக்குக் கூட எடை எடுத்து வைத்திருப்பது இன்னும் சிறப்பாகும். சிவபாத சேகரன் இராஜராஜன் தான் எடுப்பித்த கோயிலிலே தனது தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்து அதனுடைய வழிபாட்டிற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்துள்ளான். சிறந்த சிவபக்தனாதலின் தன் தெய்வத்திற்கு இராஜராஜேச்வரம் உடைய “பரமஸ்வாமி” எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தான். அந்தத் தெய்வத்தினுடைய புகழை, பெருமையை தான் என்றென்றும் போற்றி வணங்க வேண்டும் என்பதும் இராஜராஜனுடைய அவா. என்றென்றும் இராஜராஜேச்வரருடைய பரமஸ்வாமியின் புகழை வெளி உலகத்திற்கும் எடுத்துரைக்கும் அடியானாக தன்னை ஆட்படுத்திக் கொண்டான். அவன் பல காளங்களை இக்கோயிலுக்குக் கொடுத்திருக்கிறான். அவை தங்கத்தால் செய்யப்பட்ட காளங்கள் ஆகும். இரண்டு குழல்களை உடையவை. அவற்றில் ஒன்றில் “சிவபாத சேகரன்” என்றும், மற்றொன்றின் “ஸ்ரீ இராஜராஜன்” என்றும் பெயர் பொறித்தான். தஞ்சைப் பெருங்கோயிலில் இனிது உறைகின்ற பரம்பொருளின் நாள் அணி விழாக்களில் இக்காளங்கள் ஊதப்படும் போது, அதன் மூலமாக “இராஜராஜனும்”, “சிவபாத சேகரனும்”, அத்தெய்வத்தின் புகழை மக்களுக்கு எடுத்துரைத்தனர். அந்த அளவிற்கு இராஜராஜன் பக்திப் பெருக்கினால் சிவபிரானின் திருவடியை என்றும் மறவாத சிந்தையனாகத் திகழ்ந்தான் என்பதை இது நமக்குக் காட்டுகிறது. வெற்றி மலர் மாற்றரசர்களை வெற்றி கொண்டு தன் தலைநகருக்குத் திரும்பிய போது இராஜராஜன் செய்த முதல் பணி தன் தெய்வத்தின் முன்னிலையில் சென்று தங்கத்தினாலே பூக்களைச் செய்து தான் அடைந்த வெற்றிக்குக் காரணம் அப்பரம்பொருள் என்றும், அதுவே தன்னை வெற்றிக்கு ஊக்குவித்தது என்றும் இதயம் நெகிழ வணங்கி அதன் திருவடிகளில் பொற்பூக்களை அட்டித் தொழுதான். “சத்தியாஸ்ரனை எறிந்து எழுந்தருளி வந்து ஸ்ரீபாத புஷ்பமாக அட்டித் திருவடிதொழுதன திருபொற் பூ ஒன்று - தாமரை செயல் திரு பொற்பூ ஒன்று” என்று குறிக்கிறான். இவ்வாறு கொடுக்கப்பட்ட பூக்களும் கணக்கெடுக்கப்பட்டு எடை எடுக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. அணிகலன்கள் இராஜராஜன் பெருங்கோயிலிலே இருந்த செப்புத் திருமேனிகளுக்கும் பரம்பொருளுக்கும் அணிவிக்க ஏராளமான திரு ஆபரணங்களை அளித்திருக்கிறான். இவற்றில் திருப்பட்டிகை, முத்து வளையல், திருமாலை, ஸ்ரீசந்தம் முதலிய பல அணிகலன்கள் கொடுக்கப்பட்டன. அவற்றையும் மிகஅழகாகவும் வரிசையாகவும் இராஜராஜன் பதிவுகளில் எழுதி வைத்திருக்கிறான். இவற்றை நோக்கும்போது இவ்வணிகள் எவ்வாறு செய்யப்பட்டன. எவை எவை கொண்டு கட்டப்பட்டன என்பதையெல்லாம் அறிய முடிகிறது. இவ்வணிகலன்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப் பட்ட ஆயிரக்கணக்கான முத்துக்களை இராஜராஜன் பெரியவுடையாரின் திருவடிகளிலே மலர்களாக அர்ப்பணித்து வணங்கினான் என்றும், அவற்றைக் கொண்டு இவ்வணிகள் செய்யப்பட்டன என்றும் அறிகிறோம். “உடையார் ஸ்ரீ இராஜராஜ தேவர், ஸ்ரீ பாதபுட்பமாக அட்டித் திருவடி தொழுத” என்று ஒவ்வொரு அணியிலும் குறிக்கப் பட்டுள்ளதைக் காணலாம். வட்டம், அணுவட்டம், ஒப்புமுத்து, குறுமுத்து, நிம்பொளம், பயிட்டம், அம்பு முது, கறடு, இரட்டை , சப்பத்தி, சக்கத்து, குளிர்ந்த நீர், சிவந்த நீர் என பல்வகை முத்துக்கள் குறிக்கப்பட்டுள்ளன. அக்காலத்திலிருந்து முத்துக்களின் வகைகளை நமக்குத் தெரிவிக்கிறது. இவ்வணிகலன்கள், அவற்றின் நிறைக்கு ஏற்ப வரிசைப்படுத்தி பதிவு செய்யப்பட்டன. நிறை எடுக்கும்போது சரடும், சட்டமும் நீங்க, உள்ளே வைத்துச் செய்த அரக்கும் பிஞ்சும் சேர்த்து எவ்வளவு நிறை என்று கணக்கெடுக்கப்பட்டது. தக்ஷிண மேருவிடங்கன் என்று பெயர் பெற்ற ஒரு எடையால் (காசுக்கல்) நிறை எடுக்கப் பட்டது. நவரத்தினங்கள் இராஜராஜன் நவரத்தினங்களால் ஆன பல மோதிரங்களை அளித்திருக்கிறான். அவற்றில் முதலிலே குறிக்கப்படும் அணியில் நவரத்தினங்கள் எவை என்பதைத் தெளிவாகக் குறித்திருக்கிறான். வயிரம், நீலம், முத்து, புஷ்பராகம், கோமேதகம், பவழம், மரகதம், வைடூரியம், மாணிக்கம் ஆகிய ஒன்பதும் நவரத்தினங்கள் என்று அறிகிறோம். அடுத்துக் குறிக்கப்படும் நவரத்தின மோதிரங்களைச் சுருக்கமாக நவரத்தினம் ஒன்பது என்று கூறி முடித்து விடுகிறான். தான் குறிப்பவைகளை எவ்வளவு தெளிவாகவும், குறிப்பாகவும் இராஜராஜன் எழுதியுள்ளான் என்பதை இதிலிருந்து அறியலாம். திருப்பதியம் இக்கோயிலிலே வழிபாட்டின்போது தேவாரத் திருப்பதிகங்கள் பாடித் தெய்வத்தைப் பரவ வகை செய்தான். அதற்காக நாற்பத்தெண்மரை தேவாரம் ஓதுபவராக அமர்த்தினான். திருப்பதிகம் விண்ணப்பம் செய்தல் என்று கூறுகிறான். திருப்பதிகம் ஓதும்போது அவர்களுக்குப் பக்க வாத்தியமாக உடுக்கையும், கொட்டி மத்தளமும் வாசிக்கப் பட்டன. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூன்று குறுணி வீதம் தஞ்சாவூர் பண்டாரத்தில் இருந்து நெல் அளிக்கப் பட்டது. திருப்பதிகம் பாடுபவர்கள் திருநாவுக்கரையன், சம்பந்தன், செம்பொற்சோதி, சீருடைகழலான், சீராளன், திருஞானசம்பந்தன், எடுத்த பாதப்பிச்சன், சிவக்கொழுந்து ஆகிய எழில்மிகும் தமிழ்ப் பெயர் பூண்டு விளங்கினர். இதைத் தவிர இவர் அனைவரும் சிவதீக்கை பெற்றவர்கள். ஒவ்வொருவருடைய தீக்கைப் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டில் காண்கிறோம். இதிலிருந்து தெய்வத்தின் முன்னிலையில் தேவாரம் ஓதுவார்கள் சிவதீக்கை பெற்றவர்களாக இருத்தல் வேண்டும் என்று முன்னர் கட்டுப்பாடு இருந்தது என அறியலாம். தேவரடியாள் முற்காலத்தில் தெய்வீக வழிபாட்டின் அங்கமாக நாட்டியம் திகழ்ந்தது. பதினாறு அங்கங்களை உடைய வழிபாட்டு முறையில் கூத்து (நிருத்தம்) பதினைந்தாவது அங்கமாகக் குறிக்கப்படுகிறது. தாண்டவம் எடுத்துரைத்த தவச்செல்வர் சிவபெருமான் ஆதலின் அவர் உரைகின்ற கோயிலின் சுவர்களில் அப்பெருமான் ஆடிய 108 கரணங்களை (82 முடிவடைந்துள்ளன) சிற்பமாகச் செதுக்கி அமைத்த பெருமை இராஜராஜனையே சாரும். தில்லையிலே நடம் புரிகின்ற கூத்தப் பெருமானிடத்தில் எல்லையில்லா ஈடுபாடு கொண்ட இராஜராஜப் பெருந்தகை, தான் தோற்றுவித்த நடராஜப் பெருமானின் உருவங்களை “ஆடவல்லான்” என்று அழைத்து அகமகிழ்ந்தான். தன் நாட்டில் வழங்கிய அளவுகளுக்கும் “ஆடவல்லான்” என்ற பெயர் சூட்டி மகிழ்ந்தான். இறைவன் ஆடிய ஆடலில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்த இப்பெருந்தகை தன் நாட்டிலே ஆடலில் சிறந்து பெரும் புகழ் எய்திய நானூற்றுக்கும் மேற்பட்ட நாட்டிய மகளிர்களுக்குத் தான் தோற்றுவித்த பெருங்கோயிலில் நாட்டியப் பணி புரியும் பேறு அளித்தான். இந்நாட்டிய மகளிர்கள் பல்வேறு கோயில்களிலே நாட்டியப் பணி புரிந்து சிறந்தவர்கள். இவர்களில் பலர் ஆடவல்லாள், ஐயாறு, புகழி, பெற்ற திரு, பாவை முதலிய அழகிய பெயர்களைக் கொண்டிருந்தனர். இராஜராஜன் மீது ஆறாக் காதல் கொண்டிருந்த ஒருவள் “இராஜராஜி” என்றே பெயர் கொண்டிருந்தாள். தேவரடியாளாகத் தகுதி இவர்கள் கோயிலிலே கூத்தாடுபவர்களே ஆயினும் இவர்களது தொழிலுக்குத் தேவையான ஆடல் தகுதியை இவர்கள் பெற்றிருக்க வேண்டும். உரிய கல்வியும் பயிற்சியும் உடையவர்களே தேவரடியாளாகக் கோயிலில் பணி புரிய முடியும். இவர்களில் யாராவது இறந்து விட்டால் அல்லது வேறு நாட்டிற்குச் சென்று விட்டால் இவரது அடுத்த வாரிசுகள் (அடுத்த முறை கடவார்) இப்பணியைச் செய்யலாம் என்று குறிக்கப்பட்டது. இவர்களில் வாரிசாக இருந்தாலும் உரிய தகுதி, கல்விப் பயிற்சி இல்லாவிட்டால் (அடுத்த முறை கடவார் தாம் தாம் யோக்யர் அல்லாது விடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டு பணி செய்வித்துக் கொள்ளவும்) அவர்கள் பணி செய்ய முடியாது. ஆயினும் பணி தடைப்படாமல் இவர்களே தகுதியுடைய வேறு ஆட்களை நியமித்து இப்பணி செய்யலாம் என்று இராஜராஜன் பணித்தான். இதிலிருந்து இரண்டு செய்திகளை அறிகிறோம். ஒன்று கோயில்களில் பணிபுரிவாரின் சந்ததிகளுக்கு வருங்கால வாழ்வுக்கு வழி வகுக்கப்பட்டது. வழிவந்தவர்கள் என்ற காரணத்தினாலேயே அவர்கள் பணி செய்ய உரிமை உண்டு என்பதும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சந்ததியாக இருந்தாலும் உரிய தகுதி பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தகுதி பெறாவிட்டால் சந்ததியினரே வேறு தகுதியுடைய ஆளை அமர்த்திக் கொண்டு பணி செய்விக்கலாம். இந்த வாய்ப்பு மிகவும் இன்றியமையாதது. காரணம் சந்ததியினர் உடல் நலக் குறைவாலோ அல்லது பிறப்பிலே ஏற்பட்ட குறைகளாலோ வாழ வகையின்றி போய்விடக் கூடாது என்பதாகும். அவ்வாறு குறைபாடு உள்ளவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறை அப்பணியைச் செய்யக் கூடுமாதலின் அவர்களுக்கு இவ்வாய்ப்பை அளிக்க வேண்டும் என்று இராஜராஜன் கருதியிருக்கிறான். இதிலிருந்து அவன் எந்த அளவிற்கு பணிபுரிவாரின் வாழ்விலும், அவர்களது சந்ததியாரின் வாழ்விலும், நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்டான் என்பது தெளிவாகிறது. அவ்வாறு அடுத்த சந்ததியினர் இல்லாது போய் விட்டால், பதிலாக தகுதி உள்ளவர்களை நியமிக்க கோயில் நிர்வாகத்தினருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இவ்வாறு நாட்டியப் பணி புரியும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓர் ஆண்டிற்கு 100 கலம் நெல் கொடுக்கப்பட்டது. 400க்கும் மேற்பட்ட இந்த ஆடல் மகளிர்களுக்கு வசிப்பதற்கு என்று பல தெருக்களை அமைத்து, ஒவ்வொரு வீட்டிற்கும் எண் இட்டு, எந்த வீட்டில் யார் இருந்தார்கள் என்பதையும் இராஜராஜன் கல்வெட்டு குறிக்கிறது. இவர்களுக்கு நாயகம் செய்ய சாவூர் பரஞ்சோதி என்பவரும் கோவிந்தன் சோமநாதன் என்பவரும் நியமிக்கப்பட்டார்கள். நட்டவரும் இசைஞரும் இவை தவிர இவர்களுக்கு நட்டவம் செய்ய எழுவர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நிருத்தமாராயன், நிருத்தப்பேரையன் முதலிய பட்டம் அளித்து கௌரவிக்கப்பட்டவர்கள். இதைத் தவிர பல இசைக்கருவிகளை இசைப்பதற்கும் ஆரியம் பாடவும், தமிழ் பாடவும், கொட்டிமத்தளம் வாசிக்கவும், முத்திரைச்சங்கு ஊதவும் பலர் நியமிக்கப் பட்டனர். இவர்களில் பலர் இராஜராஜனது பல்வேறு படைகளிலே பணிபுரிந்தவர்கள். படையிலே இசைக் கருவிகள் இசைக்கக் கூடிய வல்லமை படைத்தவர்கள் இராஜராஜனது படையிலே மிகுந்திருந்தார்கள் என்பதை நோக்கும்போது எவ்வளவு சிறந்த பண்பட்ட படையாகத் திகழ்ந்தது எனக்கண்டு வியக்கிறோம். உதாரணமாக குழல் ஊதுபவன் குதிரைப் படையிலிருந்து வந்தவன், பக்க வாத்தியம் வாசிப்பவர் பலர் பல்வேறு வலங்கை வேளைக்காரர் படையைச் சேர்ந்தவர்கள். கீழ்க்கண்ட படைகளிலிருந்து இசை வல்லுநர்கள் இப்பெருங்கோயிலுக்குப் பணிபுரிய அமர்த்தப்பட்டனர். இசை மிகுந்த படை
  • நிகரிலி சோழத் தெரிந்த உடநிலை குதிரைச் சேவகர்.
  • மும்மடி சோழத் தெரிந்த யானைப் பாகர்.
  • அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • க்ஷத்திரிய சிகாமணி தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • சத்ருபுஜங்கத் தெரிந்த வலகை வேளைக்காரர்.
  • ராஜ கண்டீவத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • ராஜராஜத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • அரிதுர்க்க லங்கணத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • மூர்த்த விக்ரமாபரண தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • மும்மடி சோழத் தெரிந்த பரிக்காரர்.
  • ரணமுக பீமத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • விக்கிரமாபரணத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
  • இளைய ராஜராஜத் தெரிந்த வலங்கை வேளைக்காரர்.
இவற்றிலிருந்து இராஜராஜனிடத்தில் மூலப் படையாக இருந்த படைகளின் பெயர்களையும் அறிகிறோம். தொழிலாளியைப் போற்றிய இராஜராஜன் இதிலிருந்து வேறு சில செய்திகளும் அறிய முடிகிறது. உடுக்கை வாசிப்பவனுக்கு ஸ்ரீஹஸ்தன், சகஸ்ரபாகு என்று பெயர் இருப்பது தொழிலுக்கு ஏற்ப உள்ள பெயராகக் காணப்படுகிறது. பள்ளித் தொங்கல் பிடிப்பான், விளக்கு எடுப்பார், நீர்த் தெளிப்பார், கணக்கு, வண்ணத்தான், நாவிசம் செய்வார், அம்பட்டன் முதலிய பலர் இங்கு பணி செய்ய அமர்த்தப்பட்டுள்ளார்கள். தையான், ரத்தினத் தையான், கன்னான், தட்டான் முதலிய பல தொழிலாளிகளும் இக்கோயிலில் பணி புரிந்திருக்கிறார்கள். இக்கல்வெட்டிலிருந்து பல பெரும் சிறப்புகளை அறிகிறோம். இராஜராஜன் சிறு தொழிலாளிக்குக் கூட பெரும் பட்டங்கள் அளித்து அவர்களையும் இந்தத் திருப்பணியிலே ஈடுபடுத்தியிருப்பது அவனது பரந்த நோக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தட்டானுக்குப் “பெரும்தட்டான்” என்றும், தையானுக்குப் “பெருந்தையான்” என்றும், நாவிதனுக்கு “பெருநாவிசன்” என்றும், கணிதம் வல்லானுக்குக் “கணிதாதிராஜன்” என்றும், பள்ளித் தொங்கல் பிடிப்பானுக்கு “தொங்கல்பேரையன்” என்றும் இவன் பட்டங்கள் அளித்துள்ளது தொழிலாளி வர்க்கத்தினர் அறிந்து இன்புறத்தக்கது. பலருக்கு “மாராயன்”, “பேரையன்”, “அரையன்” முதலிய பட்டங்கள் கொடுத்துச் சிறப்பித்திருக்கிறான். அவன் கொடுத்த பட்டங்கள் அவரவர் தொழிலுக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன. அத்துடன் அரச பட்டப் பெயர் ஒன்றையும் இணைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. தொழில் புரிபவர்களை அரசன் எவ்வளவு உயர்ந்த நிலையிலே வைத்து மகிழ முடியுமோ, அந்த அளவிற்குச் சிறப்பித்திருப்பது இராஜராஜனின் தனிப் பெருந்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இராஜராஜன் அளித்த சில பட்டப் பெயர்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளன.
  • மும்முடி சோழ நிருத்தமாராயன்;
  • மும்மடி சோழ நிருத்தப் பேரையன்;
  • அருமொழி நிருத்தப் பேரையன்;
  • வகையிலி நிருத்தப் பேரையன்;
  • பஞ்சவன் மாதேவி நாடக மையன்;
  • நித்திவினோத வாத்யமாராயன்;
  • அறிஞ்சிகை காமரப் பேரையன்;
  • ராஜேந்திர தசரையன்;
  • இருமடி சோழ வாத்யமாராயன்;
  • ராஜராஜ ஸ்ரீ ஹஸ்தன்;
  • ராஜராஜ சஹஸ்ரபாகு;
  • செம்பியன் வீணை ஆதித்தன்;
  • மும்முடி சோழ தொங்கல் பேரையன் (திருத்தொங்கல் பிடிப்பான்);
  • செம்பியன் கொற்றப் பெருங்கணி;
  • ராஜராஜ கணிதாதிராஜன்;
  • ராஜராஜ ப்ரயோகத்தரையன்;
  • கேரளாந்தக பெருந்தகையான்;
  • வீர சோழ பெருந்த தைய்யான்;
  • க்ஷத்திரிய சிகாமணிபெருங் கன்னான்;
  • க்ஷத்திரிய சிகாமணி பெருந்தட்டான்;
முதலியவை ஆகும். இப்பட்டங்களின் இனிமை கண்டு இன்புறுக. தஞ்சைக் கோயிலைக் கட்டிய ஸ்தபதி இவ்வளவு சிறந்த கல்வெட்டில் இம்மாபெருங் கோயிலைத் தோற்றுவித்த சிற்பிகளின் பெயரைக் குறிக்காமலா இருப்பான்? அவர்களின் பெயர்கள் குறிக்கப்பட் டுள்ளன. சிற்பிகளின் தலைவனுக்கு தச்சாசார்யன் என்று பெயர். வீரசோழன் குஞ்சர மல்லனான இராஜராஜப் பெருந்தச்சன் என்பவன் இக்கோயிலில் தச்சாசார்யனாகக் குறிக்கப்படுகிறான். இவனுக்கு உதவியாக குணவன் மது ராந்தகனான நித்த வினோதப் பெருந்தச்சன் என்பவனும் பணி புரிந்திருக்கிறார்கள். தற்காலத்தில் கோயில்களை நிர்மாணிக்கும் சிற்பிகளை ஸ்தபதி என்கிறோம். அவர்கள் அக்காலத்தில் பெருந்தச்சன் என்று பட்டம் பெற்றுச் சிறந்தனர் என பல கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். ஆதலின் இராஜராஜனது பெயர் பூண்டு இராஜராஜப் பெருந்தச்சன் என்று அழைக்கப்பட்ட தச்சாசார்யனே வியத்தகும் தஞ்சைப் பெருங்கோயிலைத் தோற்றுவித்த தமிழகத்தின் தலையாய சிற்பி என்பதில் ஐயம் இல்லை. இராஜராஜனது இக்கல்வெட்டில் மற்றொரு சிறப்பையும் காண்கிறோம். இராஜராஜன் இக்கோயிலில் பணி புரிய சிலருக்கு ஆணையிட்டிருக்கிறான். அவர்கள் சில காலம் இங்கு பணி புரிந்திருக்கிறார்கள். ஆனால், இக்கல்வெட்டு களைப் பொறிப்பதற்குள்ளாக அவர்கள் இறந்து போய் விட்டார்கள். அப்பணியைப் பிறர் செய்தனர். ஆயினும் நிலையான கல்வெட்டில் முதலில் அமர்த்தப்பட்டவர்கள் இறந்து போன போதிலும் அவர்களது பெயரையும் குறித்து அவர்களுக்குப் பின் வந்தவர்களின் பெயரையும் கல்லிலே குறித்து வைத்துள்ள பெருமையைக் காண்கிறோம். கல் வெட்டு எழுதும்போது இறந்தவருடைய பெயரைக் குறிக்க வேண்டிய தேவை இல்லை. ஆயினும் “வீணை வாசிப் பார் இருவருக்கு சுப்ரமணியன் கூத்தனான செம்பியன் வீணை ஆதித்தனுக்கு பங்கு மூன்றரையும், இவன் செத் தமையில் இவன் மகனைக் கொண்ட அரையன் சதா சிவனுக்குக் காணியாகவும், பராந்தக கொங்கவாளில் கீர்த்தி நாதனுக்குப் பங்கு முக்காலும் இவன் செத்தமையில் இவன் தம்பி கீர்த்தி கிளை தாங்கிக்கு கணியாகவும்” என்று குறிப்பிட்டுள்ளதிலிருந்து பணி செய்தவன் இறந்த போதி லும் இராஜராஜன் அவனுக்கு எவ்வளவு பெருமை அளித் திருக்கிறான் என்று அறியலாம். இதுவும் இராஜராஜனுடைய பெருந்தன்மையின் எடுத்துக்காட்டு. கோயில் பொறுப்பு இக்காலத்தில் வங்கிகளில் பொருளாளர்(Cashier)களாக வும், கணக்காளர்களாகவும் நியமிக்கப்படுபவர்களிடத்தில் பிணைப்புப் பணம் (Security Deposit) பெற்று பிறகுதான் அவர்களை நியமிக்கிறார்கள். இராஜராஜன் தான் எடுப் பித்த கோயிலிலே பண்டாரத்தையும், கணக்கையும் வைத்துக் கொள்வார் எவ்வளவு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உள்ள கட்டுப்பாடுகளைக் கல்வெட்டில் குறித் திருக்கிறான். இப்பணிகளில் அமர்த்தப்படுபவர்களுக்கு நிலையான நிலம் (பூமி சம்பத்து) இருக்க வேண்டும். நல்ல நிலையில் உள்ள சொந்தக்காரர்கள் (பந்து சம்பத்து) இருக்க வேண்டும். பொருள் (அர்த்த சம்பத்து) உடைய வர்களாக இருக்க வேண்டும். கோயில் பொது மக்களுக் காக எடுக்கப்படும் ஒரு பொது ஸ்தாபனம். ஆதலின் அதன் செல்வத்தை நிர்வகிப்பவர்கள், அதன் கணக்கை வைத்துக் கொண்டிருப்பவர்கள், உயர்ந்த நிலையில் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அவற்றில் ஏதாவது தவறு நேருமானால், தவற்றைச் சரி செய்ய போதிய வாய்ப்பு இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடனே இராஜராஜன் மேல் குறிப்பிட் டுள்ள கட்டுப்பாடுகளை நியமித்துள்ளான். அது மட்டு மல்ல. பரிசாரகம் செய்பவர்களுக்குக் காசும், நெல்லும் பண்டாரத்தார்களும், கணக்கர்களும் உள்ளூர் பண்டாரத் தில் இருந்து கொடுக்க வேண்டும் என்றும், பண்டாரி களும், கணக்கர்களும் தங்களுடைய ஊதியத்தை நாட்டுப் பண்டாரத்தில் சென்று வேறொருவரிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் பணித்தான். கோயில் கணக்கு எந்த அளவிற்குச் சீராக இருத்தல் வேண்டும் என்று இராஜ ராஜன் நினைத்தான் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. பெரும் பணி மக்களின் பணி தன் ஆட்சிக்கு உட்பட்ட பல ஊர்கள், இக்கோயிலில் பணிபுரியும் கணக்கர்களையும், திருமெய்க்காப்பாளர்களையும், பண்டாரிகளையும், பரிசாரகர்களையும் நியமிக்க இராஜராஜன் வாய்ப்பளித்தான். இவ்வாறு நியமிக்கப்பட்ட மெய்க்காப்பாளர்களுக்கு அந்தந்த ஊர்களே ஊதியம் தர வேண் டும் என்று நியமித்தான். தங்கள் ஊரிலிருந்து கோயிலுக்குப் பணிக்குச் சென்று வரும்போது ஏற்படும் செலவுக்குப் பயணப்படிச் செலவும் கொடுக்க வேண்டும் என்று நியமித் தான். இதிலிருந்து இராஜராஜனின் இன்னும் சில சிறந்த குணங்களை அறிய முடிகிறது. அவன் ஒரு மாபெரும் பேரரசன். அவன் நினைத்தால் துங்கபத்திரை ஆற்றங்கரை யிலிருந்து ஈழம் வரையிலும் உள்ள பரந்த பகுதியிலிருந்து எவ்வளவோ ஆயிரக்கணக்கான ஆட்களை அவனே நியமிக்க முடியும். ஆயினும், அவ்வாறு செய்யாமல் தன் ஆட்சியி லிருந்த பல்வேறு ஊர்ச் சபைகளே ஆட்களை நியமிக்க வாய்ப்பளித்தான். தஞ்சைப் பெருங்கோயிலைத் தான் தோற்று வித்த போதிலும் அது அனைத்து ஊர்களுக்கும் பொது என்ற ஓர் எண்ணத்திற்கும், அனைத்து மக்களும் இக் கோயிலிலே நமக்கும் பங்கு உண்டு, இதன் நிர்வாகத்தில் நாமும் பங்கு ஏற்கிறோம் என்று பெருமை கொள்ளும் வகை யிலும் ஒவ்வொரு ஊருக்கும் வாய்ப்பளித்திருக்கிறான் என்பதை நோக்கும்போது இராஜராஜனுடைய உன்னதக் கருத்துக்கள் நமக்குத் தெளிவாகின்றன. அரசனது இறை ஆலயத்துக்கு தஞ்சையிலே தான் எடுப்பித்த இப்பெருங்கோயிலின் நடைமுறைச் செலவுகளுக்காகத் தனக்குச் சேர வேண்டிய இறையைக் கோயிலுக்கு அளிக்க ஆணையிட்டான். பல ஊர்களிலே உள்ள நிலங்களை இவ்வாறு இக்கோயிலுக்கு தேவதானமாக அளித்தான். இந்த ஊர்களையும், அளித்த நிலங்களையும் குறிக்கும்போது மிகவும் தெளிவாகக் குறித்துள்ளான். ஓர் ஊரிலே உள்ள மொத்த நிலம் எவ்வளவு? அவ்வூரில் கோயில், குளம், இருக்கை முதலிய இறை கட்டாத நிலங்கள் எவ்வளவு? மீதி இறை கட்டின நிலங்கள் எவ்வளவு? அந்த நிலங்கள் அளந்த இறை, “இராஜ ராஜதேவர் கொடுத்தார் நத்தம், கோயில், குளங்கள், அவ்வூர் நிலத்தை ஊடறுத்துப் புறவூருக்குப் போன வாய்க் கால்கள், பறைச்சேரி, கம்மாளச்சேரி, சுடுகாடு முதலிய இறையிலி நிலங்கள் நீங்க இறை கட்டிய நிலத்தால் காணிக் கடன் என ஆணையிட்டிருப்பதிலிருந்து அக்காலத் தில் வேளாண் துறை (துரவு) எவ்வளவு சிறப்பாக வகைப் படுத்தப்பட்டு நிர்வகிக்கப்பட்டது என்பது புலனாகும். ஆண்டானும் அடியானும் சமம் தஞ்சைப் பெருங்கோயிலில் விளக்கு எரிப்பதற்காக பல பொருள்களை இராஜராஜன் கொடுத்திருக்கிறான். அதைச் சில கல்வெட்டுகள் குறிக்கின்றன. இக்கல்வெட்டில் இருந்து பல சிறந்த செய்திகளை நாம் அறிகிறோம். இக்கல்வெட் டில் பல உயர் அதிகாரிகளின் பெயர் குறிக்கப்பட்டுள்ளன. அவர்களது பெயர்கள் கீழே குறிக்கப்பட்டுள்ளன. இவர் களில் பெரும்பாலானவர்கள் கோழிப் போரிலே பங்கு கொண்டவர்கள். கோழிப் போர் மிகவும் கடுமையாக நடந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். தனது படை வீரர்கள் கோழிப் போரிலே ஊனம் ஏதுமின்றி வெற்றி வாகை சூடித் திரும்ப வேண்டும் என இராஜராஜன் வேண்டி பல விளக்குகளுக்கு வகை செய்துள்ளான். அவ்வாறு விளக்குகள் எரிப்பதற்குப் பசுக்களையும், ஆடுகளையும், எருமைகளை யும் அளித்திருக்கிறான். இவற்றை வீரர்களுக்கு அளித்து அவ்வீரர்கள் அவற்றை இக்கோயிலுக்குக் கொடுத்திருக்கின்றனர். “வில்லவன் மூவேந்த வேளான் தன்னை உடையார் இராஜராஜ தேவர் கோழிப்போரில் ஊத்தை அட்டாமல் என்று கடவ திருவிளக்குக்குத் தந்த” என்று குறிக்கப்பட்டுள்ளது. இதை நமக்குத் தெரிவிக்கிறது. இதே போன்று பல வீரர் களுக்கும் குறிக்கப்பட்டுள்ளது. இராஜராஜன் விளக்குகள் எரிக்கத்தான் சில ஆடுகள் அளித்தான். அவன் படை வீரர்கள் சில அளித்தனர். ஒரு விளக்கு எரிக்க சாதாரண மாக 96 ஆடுகள் அளிக்கப்படுவது மரபு. இதற்கு இராஜ ராஜன் 48 ஆடுகளைக் கொடுத்தான். மீதி 48 ஆடுகளை தனது படை வீரன் அளிக்க வாய்ப்பளித்தான். தானும், தன் படை வீரனும் இணைந்து இவ்விளக்கு எரிக்க வகை செய் ததை, தங்கள் இருவரின் பெயரையும் குறித்துப் பெருமைப் படுவதிலிருந்து காண்கிறோம். தனது வெற்றிகளுக்குக் காரணமாக உயிர் கொடுக்க முன் வந்த பெரும் வீரர் களுக்கு எவ்வித ஊனமும் ஏற்படக் கூடாது என்ற அவனது வேண்டுதலும், அவர்களுக்குத் தன்னுடன் சமநிலை அளித்த பெருமையும் இராஜராஜன் ஒருவனிடத்தில்தான் காண்கி றோம். வியத்தகும் பரந்த மனப் பக்குவம், இச்சிறந்த மன்னன் ஒரு விளக்குக்கு அல்ல பல விளக்குகளுக்குத் தான் பொருள் கொடுத்த போது தனது படை வீரனையும் கொடுத்ததாகக் கல்வெட்டில் பொறித்துள்ள பெருமையைக் காண்கிறோம். பணிப் பெண்ணுக்கும் சம அந்தஸ்து படை வீரர் மட்டும்தானா? இல்லை. இல்லை. தன் கீழ் பணிபுரிகின்ற பணிப் பெண் கூட இது போல் விளக்கு களுக்குப் பொருள் கொடுக்கும் வாய்ப்பளித்து அவளுடைய பெயரையும் தனது பெயருடன் கல்வெட்டில் பொறித்துள்ள பெருமையைக் காண்கிறோம். “உடையார் இராஜராஜ தேவர் கொடுத்த கால்மாட்டில் அடுத்த பசு நாற்பத்து இரண்டும் உய்யக் கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளத்து பெண்டாட்டி (வேலைக்காரி) வரகுணன் எழு வத்தூர் திருவிளக்குக்கு வைத்த காசு” எனக் குறிப்பிட் டுள்ள பெருந்தன்மையை, இராஜராஜனின் அளப்பரும் அன்புச் செல்வத்தைக் காணும்போது அவனுக்கு ஈடு இணை யாக வேறு எந்தப் பேரரசனும் இருக்க முடியாது எனும் எண்ணம் மேலிடுகிறது. இராஜராஜனுக்குத் தோள் கொடுத்து உடன் நின்று பணியாற்றிய வீரர்கள்
  • பெருந்தரம் உத்தரங்குடையான் கோன் வீதி விடங்க னான வில்லவன் மூவேந்த வேளான்.
  • பெருந்தரம் மாராயன் இராஜராஜன்.
  • பெருந்தரம் கண்டராச்சசான் பட்டாலகனான நித்த பல வினோத விழுப்பரையன்.
  • பெருந்தரம் ஆலத்தூர் உடையான் காளன் கண்ணப்பனான் இராஜகேசரி மூவேந்த வேளான்.
  • பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்.
  • உடையார் இராஜராஜ தேவருக்கு நடுவிருக்கை செய்த இராஜேந்திர சிங்க வளநாட்டு மிறைக் கூற்று, காமர வல்லிச் சதுர்வேதி மங்கலத்து கொட்டையூர் பட்டன் பூவத்தன் பூவத்தனார்.
  • பெருந்தரம் நித்தவினோத வளநாட்டு ஆவூர் கூற்றத்து செம்பங்குடிச் செம்பங்குடையான் அமுதன் தேவனான இராஜ வித்யாதர விழுப்பரையன்.
  • உய்யக்கொண்டான் தெரிந்த திருமஞ்சனத்தார் வேளத்து பெண்டாட்டி வரகுணன் எழுவத்தூர்.
  • உடையார் வேண்டும் இராஜராஜ தேவர் முமடி சோழத் தெரிந்த பரிவாரத்தார்.
  • சேனாபதி குரவன் உலகளந்தானான இராஜராஜன் மஹாராஜன்.
  • மூல பரிவார விட்டேறான ஜனநாதத் தெரிந்த பரிவாரத்தார்.
  • திருமந்திர ஓலை இராஜகேசரி நல்லூர் கிழவன் காறாயில் எடுத்த பாதம்.
  • பெருந்தரம் உலோக மாராயன்.
  • சோனகன் சாவூர் பரஞ்சோதி.
  • பெருந்தரம் வைரி சங்கரன்.
  • நித்த வினோத வளநாட்டு பாம்புணி கூற்றத்து அரைசூர் உடையான் ஈராயிரவன் பல்லவயனான மும்மடி பட சோழ பேரையன்.
  • பெருந்தரம் நம்பன் கூத்தாடியான ஜெயங்கொண்ட சோழ பிரும்ம மஹாராஜன்.
  • பெருந்தரம் வயலூர்க் கிழவன் திருமலை வெண்காடன்.
  • பெருந்தரம் அருமொழி பல்லவரையன்.
  • பெருந்தரம் நித்தவினோத வளநாட்டு மஹாராஜன்.
  • பெருந்தரம் வயிரி அருமொழியான கரிகால கர்ணப்பல்லவரையன்.
  • பெருந்தரம் கோன் சூற்றியான அருமொழிப் பல்லவரையன்.
தஞ்சாவூர் புறம்படியில் இருந்த தெருக்களும், குடியிருக்கைகளும் தெருக்கள் 1. கந்தர்வத் தெரு, 2. மடைப்பள்ளித் தெரு, 3. வில்லிகள் தெரு, 4. ஆனையாட்கள் தெரு, 5. ஆனைக் கடுவார் தெரு, 6. பன்மையார் தெரு. பெருந்தெருக்கள் 1. இராஜவித்யாதரப் பெருந்தெரு, 2. வீர சோழப் பெருந்தெரு, 3. ஜயங்கொண்ட சோழப் பெருந்தெரு சூரசிகாமணிப் பெருந்தெரு. - அங்காடிகள் 1. கொங்கவாளார் அங்காடி, 2. இராஜராஜ பிரும்ம மஹாராஜன் அங்காடி. பேரங்காடி 1. திரிபுவன மாதேவிப் பேரங்காடி. வேளம் 1. உத்தமசீலியார் வேளம், 2. அபிமான பூஷணத் தெரிந்த வேளம், 3. உய்யக் கொண்டார் தெரிஞ்ச திருமஞ்சனத் தார் வேளம், 4. இராஜராஜத் தெரிந்த பாண்டித் திரு மஞ்சனத்தார் வேளம். 5. அருமொழிதேவத் தெரிந்த திருப் பரிகலத்தார் வேளம். படை வீடு பிற 1. சிவதாஸன் சோலையான இராஜராஜ பிரம்ம மஹாராஜன் படை வீடு, 2. ரௌத்தர மஹாகாளத்து மடவிளாகம். 3. பிரம குட்டம். தஞ்சாவூர் உள்ளாலையில் இருந்த தெருக்களும், குடியிருக்கைகளும் 1. சாலியத் தெரு, 2. பாண்டி வேளம். இராஜராஜன் ஏராளமான செப்புத் திருமேனிகளைச் செய்து அளித்திருக்கிறான். அவற்றினுடைய உருவ அமைதியை, அவை கரங்களிலே கொண்டுள்ள சின்னங் களை, அவற்றின் எடையைக் குறித்துள்ள சிறப்பு அளப் பரும் சிறப்பாகும். “இராஜராஜப் பெருந்தகையே, தமிழகத்தின் தவச் செல்வமே, சிந்தனைத் தெளிவில், செயலாற்றும் திறனில், வெற்றிச் சிறப்பில், மக்கள்பால் கொண்ட பேரன்பில், கலை ஆர்வத்தில், அனைத்திற்கும் மேலாகப் பக்திப் பெருக்கில் உனக்கு ஈடு யார்? இணை யார்?” என வியந்து மகிழ் கிறோம். அவனது புகழ் கூறுவதிலே இன்பம் பெறுகி றோம். இது எங்கும் நிலைக்கு இறை அருளை இறைஞ்சுகிறோம்.
பொருளடக்கம் | இராஜராஜ சோழன் முடிசூடிய திருநாள்