chap31 chapter30.html chapter31.html chapter32.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 31. வேலூர் சிப்பாய் எழுச்சி
பொருளடக்கம் | அத்தியாயம்-30 | அத்தியாயம்-32 | அகெடமி

வேலூர் கோட்டை தமிழகத்தில் உள்ள கோட்டைகளில் மிக அழகு வாய்ந்தது. இங்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக் கோட்டையிலிருந்த கிழக்கிந்திய கும்பினியார் ஒரு படையை நிறுத்தி வைத்திருந்தனர். அதாவது 1750 வாக்கில் ஆங்கிலேயர் மிகவும் குறைந்த இடங்களில்தான் வியாபாரத்திற்காக அக்காலத்தில் தமிழகத்தின் வடபகுதியான சென்னை, செங்கல்பட்டு, வேலூர், கடலூர், ஆகிய இடங்கள் எல்லாம் ஹைதராபாத் நைஜாமின் கீழ் படிந்த ஆற்காடு நவாப்புகளின் கீழ் இருந்தன. இங்கு வியாபாரம் செய்வதற்காக ஆண்டுக்கு ஆங்கிலேயர்கள் 50,000 ஆங்கில பவுண்டுகள் வாடகையாக பணம் கொடுத்து வந்தனர். அக்காலக் கட்டத்தில்தான் மைசூரில் ஹைதர் அலிகானும், திப்புசுல்தானும் ஆண்டு வந்தனர். அவர்கள் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு துரத்திவிட வேண்டும் என்ற எண்ணமும், அதற்கு வேண்டிய படைகளையும் உருவாக்கிவந்தனர். அதனால் ஆங்கிலேயரும் கும்பினியார் தங்களுக்கெனப் படைகளை வைத்துக்கொண்டனர். அச்சமயம்தான் தாமஸ் மன்றோ என்பவன், சென்னையில் ஆங்கில படைகளுக்கு வேண்டிய பொருள்களை வாங்கும் அதிகாரியாக வந்தான். பின்னர் அப்படையில் உயர் அதிகாரியாகவும் துணை தலைவனாகவும் முன்னேறினான் அவன். ஹைதர், திப்புவிற்கும் ஆங்கில கும்பினியாருக்கும் பல சண்டைகள் நடந்தன. அதில் ஒரு போரில் ஹைதர் சென்னை மீதெல்லாம் படையெடுத்து படுதோல்வியடையச் செய்து சென்னைக் கோட்டையில் வெள்ளையனை வைத்து தான் சொன்னபடி ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் செய்தான். அந்த சம்பவம், மன்றோவை கலக்கி ஆங்கிலேயருக்கு ஏற்பட்ட அவமானம் என்று எழுதினான். ஹைதருக்குப்பின் திப்பு 1783ல் அரியணை ஏறினான். திப்புவுடன் நடந்த போரில் மாறி மாறி வெற்றியும் தோல்வியும் அடைந்த நிலையில் இறுதியில் 1799ல் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்பு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். அதிலிருந்து கும்பினியார் வெள்ளைக்கார குதிரைப்படையும் இந்திய சிப்பாய்களை உடைய படைகளையும் வைத்திருந்தனர். அந்த வெற்றியின்போது ஆங்கிலேயர் தமிழகத்தின் வட பகுதிகளை தங்களுடையதாக கைப்பற்றியிருந்தனர். அந்தப் பின்னணியில்தான் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயப்படை நிறுத்தப்பட்டிருந்தது. அங்கு இந்திய சிப்பாய்களும் இருந்தனர். வேலூர் கோட்டைக்குள் திப்புவின் உறவினர்கள் சிலர் இறந்துபோக அவர்கள் உடல்களை அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் இருந்தன. ஆங்கிலேயரின் 69 அரசுப்படை ஒன்றும் பல இந்திய சிப்பாய்களைக் கொண்ட படைகளும் அக்கோட்டையில் இருந்தன. 1806ஆம் ஆண்டு அதாவது திப்பு கொல்லப்பட்ட ஐந்து ஆண்டுகள் முடிந்திருந்தபோது ஜூலை மாதம், 10ம் தேதி விடியற்காலையில், இந்திய சிப்பாய்கள் எழுந்து ஆங்கிலேய படையினர்மீது பாய்ந்து 13 ஆங்கிலேயர்களையும் அவருக்குத் துணை நின்ற பல இந்திய சிப்பாய்களையும் கொன்று வீழ்த்தினர். இந்த சம்பவத்தை வெள்ளைக் காரர்கள் “வேலூர் சிப்பாய்க் கலகம்” என்று பெயரிட்டனர். வேலூருக்கு அருகில் இருந்த ஆற்காட்டில் இருந்த வெள்ளைக்காரப் படைத் தலைவனுக்கு செய்தி சென்றது. அந்த படையின் தலைவன் லெப்டினன்ட் கிள்ளப்ஸ் என்பவன், தன்னுடைய குதிரைப்படையும் ஏந்தி வேலூர்மீது பாய்ந்தான். வேலூர் கோட்டையை மீட்டுக்கொண்டான். அங்கிருந்த நானூறு இந்திய சிப்பாய்களை கண்டதுண்டமாக வெட்டிச்சாய்த்தான். இந்த சம்பவம் ஒரு பெரும் போராகவே நடைபெற்றிருக்கிறது. ஏதோ ஒரு சில சிப்பாய்கள் மட்டும் முதலில் எதிர்த்து எழுந்தனர் என்று செய்தி வெளியாயிற்று. ஆனால் இதை ஒரு சிறு கலகம் எனக்கூறி, வெள்ளைக்காரர்களை எதிர்த்தார்கள் என்று சொல்லி நானூறுக்கும் மேற்பட்ட இந்திய சிப்பாய்களை வெட்டிக் கொன்றான். இதைப்பற்றி தாமஸ் மன்றோ எழுதியிருக்கிறான். இப்போர் எதனால் ஏற்பட்டது என்பதுபற்றி அக்காலத்தவர்க்கே தெரிய வில்லை என்றும் இது குறித்து பல கருத்துகளும் நிலவுகின்றன என்று மன்றோ கூறுகிறான். அப்போது சென்னையில் கவர்னராய் இருந்தவர் கருத்துப்படி அக்காலத்தில் பரவலாக வெள்ளைக்காரர்களை அடியோடு ஒழித்து கட்டி மீண்டும் முகமத்திய ராஜ்யத்தையும் நிலை நிறுத்தவேண்டும் என்ற எதிர்ப்பு மனப்பான்மை மிகவும் பரவலாக இருந்தது என்று மன்றோ குறிக்கிறான். இதற்கு இப்பகுதியிலிருந்து பாளையக்காரர்களும் உதவியாக இருந்திருக்கிறார்கள் என்றும் கவர்னர் கருதினான். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அச்சமயம் வெள்ளைக்காரன் போட்ட ஒரு சட்டம். அதாவது இந்திய சிப்பாய்கள் தங்களது நெற்றியில் தங்கள் சமயக் குறிகளை விபூதி, நாமம் போட்டுக் கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருந்தனர். அதுதான் காரணம் என்று கவர்னர் கருதினான் என்று மன்றோ குறிக்கிறான். மற்றும் சிப்பாய்கள் தாடி வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஆணையிட்டான். இதற்குக் காரணம், இந்திய சிப்பாய்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றவே வெள்ளையர் இவ்வாறு செய்ததாக மக்கள் நம்ப ஆரம்பித்தனர் என்றும், இதுதான் வேலூர் சிப்பாய்களின் எழுச்சிக்குக் காரணம் என்று நான் கருதுகிறேன் என்றும் மன்றோ எழுதி தன் வில்லியம் பெண்டிங் என்ற கவர்னருக்கு கடிதம் எழுதினான். மேலும் அக்கடிதத்தில் — சுல்தானின் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்தத் தோன்றிய எழுச்சி என இதைக் கருதமுடியாது. ஏனெனில் இதை இந்து சிப்பாய்கள் யாரும் செய்திருக்க மாட்டார்கள். காரணம் பெரும்பாலான ஆங்கிலேயர் கீழிருந்த இந்திய சிப்பாய்களில் இந்துக்கள் மிகவும் குறைவானவர்கள்தான். முஸல்மான்களும் படையில் இருந்தனர். இங்கு மிகவும் அறிவாளிகளாகவும் படித்தவர்களாகவும் உள்ள இந்நாட்டு மக்கள், சிப்பாய்கள் அத்தனை பேரையும் கிறுஸ்தவர்களாக்க ஆங்கிலேயர் எடுத்த முயற்சி என்பதால்தான் இவ்வெழுச்சி என்றும் கருதுகிறார்கள் என்று மன்றோ தன் கடிதத்தில் கூறியுள்ளான். இங்கிலாந்தில் இருந்த அரசும் இந்த கிருஸ்தவ மயமாக்கும் முயற்சிதான் இதற்குக் காரணம் என்று ஒப்புக்கொண்டு வில்லியம்ஸ் பெண்டிங்கை உடனடியாக இங்கிலாந்துக்கு திரும்ப வர உத்தரவிட்டது. (தாமஸ் மன்றோவின் வாழ்க்கை; ஆசிரியர் அலேக்சாந்து சடப்புத்நாட், லண்டனில் 1889ல் வெளியிடப்பட்டது பக்கம் 93-94). இதிலிருந்து வேலூர் சிப்பாய்களின் எழுச்சி 400க்கும் மேற்பட்ட சிப்பாய்களை வெட்டி வீழ்த்திய நிகழ்ச்சி சுதந்திரத் தாகத்தினால் ஏற்பட்டது என்பதில் ஐயமில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளாக ஆண்டவர்கள் 1974ல் “செக்குலரிசம்” என்ற சொல்லை நமது அரசியல் சட்டத்தில் புகுத்தி, நூறு கோடிமக்களை இழிவுபடுத்தி வந்ததன் பயன் இன்றைய தேர்தலில், சோனியா காந்தி, ராகுல்காந்தி, திக்விஜய்சிங் என்போர்கள் யாகம் செய்யவும், நெற்றியில் பட்டையாகக் குங்குமம் சார்த்திக்கொள்ளவும், நானும் இந்து என்று கூறிக்கொண்டு கோயில் கோயிலாக ஏறினால்தான் நாம் ஜெயிக்க முடியும் என்று நினைக்கப்பட்டது என்பதும் — ஆனால் அது உண்மையானது அல்ல — ஏமாற்றும் கருத்து என்பதை மக்கள் நம்பிவிடாமல் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும் தேர்தலின் படிப்பினையாகும்.
பொருளடக்கம் | அத்தியாயம்-30 | அத்தியாயம்-32 | அகெடமி