chap2 chapter1.html chapter2.html chapter3.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 2. களவும் கற்பும்
பொருளடக்கம் | அத்தியாயம்-1 | அத்தியாயம்-3 | அகெடமி

தொல்காப்பியத்தில் தமிழ் மக்களின் “களவு”, “கற்பு” என்ற மணவினை மரபுகளைப்பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இவ்விரு பிரிவுகளில் களவை முதலில் ஆய்ந்துவிட்டுப் பின்னர் கற்பியல் என்பதை ஆராய்ந்துள்ளார். இப்பகுதியில், தமிழ் மக்களின் வாழ்க்கைக் குறிக்கோள் என்ன என்பதை முதல் சூத்திரத்திலேயே கூறுகிறார். இன்பமும் பொருளும் அறனும் என்று ஆங்கு அன்போடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் காமக் கூட்டம் காணுங்காலை மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள் உறை அமை நல்லியாழ் துணையமையோர் இயல்பே (தொல்காப்பியம் — களவியல் சூத்திரம் — 1) முதலில் அறம், பொருள், இன்பம் என்பதால் தமிழர்களது கொள்கை அறம், பொருள், இன்பம் என்னும் வேத மரபுதான். ஆதலால் தொல்காப்பியர் காலத்திலேயே தர்ம, அர்த்த, காமம் என்ற மூன்று புருஷார்த்தங்கள்தாம் தமிழர் வாழ்க்கை என்பது தெளிவு. இந்தப் பாகம் களவியல் என்னும் பொருள் பற்றியது. ஆகையால், தொல்காப்பியர், இன்பமும், பொருளும், அறனும் என்று இன்பத்தை முதலில் வைத்தார். தருமம், அர்த்தம், காமம் என்பதை “திரிவருக்கம்” என்று கூறுவர். அதனால் திருவள்ளுவர் திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூவகை அத்தியாயத்தில் எழுதியுள்ளார். இம்மரபு தெரியாதோர் வள்ளுவர் இன்பத்துப் பாலை இயற்றவில்லை. வேறு ஒருவர் இயற்றியது என்று கூறுவர். அது ஏற்புடையது அல்ல. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று புருஷார்த்தங்களும் தமிழர்களின் மரபே என்பதில் இனி ஐயம் இருக்க முடியாது. இவ்வாறு இன்பத்தைக் கூற வந்த தொல்காப்பியர், வேதமரபை பின்பற்றும் வழியில் எட்டுவகையான மணவினைகளைக் கூறுவர். இதை தொல்காப்பியர், “எட்டுவகை மணங்களை வேதம் கூறிற்று என்றும் அவற்றில் களவு என்று கூறப்படுவது காந்தர்வம் என்ற வகையினுள் படும். இதை யாழை வாசிக்கும் கந்தர்வர்கள் எவ்வாறு இணைந்திருப்பார்களோ, அதுபோல் களவின்பால் தலைவனும் தலைவியும் இருப்பர்” என்று கூறுகிறார். எட்டுவகையான மணங்கள் யாவை என்று நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருக்கிறார். அவை பிரமம், ப்ராசாபத்யம், ஆர்ஷம், தெய்வம், ஆசுரம், இராக்கதம், பைசாசம் என்று எட்டு என்கிறார். பூப்பெய்திய கன்னியை இரண்டாம் மாதவிடாய் முன்னர் அணிகலன்களால் அலங்கரித்து பிரம்மச்சரியம் காத்த ஒருவனுக்கு தானமாகக் கொடுப்பது “பிரமம்” எனப்படும். பிரம்மச்சரியம் காத்தவனுக்கு மணம் செய்து கொடுப்பதுதான் “பிரமம்” என்பதாகும். ஆதலால் மறுமணமோ, இரண்டாம் தாரமோ மணந்து கொள்வது “பிரமம்” ஆகாது. குழந்தைகள் இல்லாதவருக்கு குழந்தை வேண்டி மணம் செய்து கொடுத்தல் அவன் வழி வளரவேண்டும் என்பதால், இம்மணத்தை “ப்ராஜபத்யம்” என்பர். இது இரண்டாவது மணவகை என்பர். பெரியோர்கள் கொடுப்பதற்கு முன்னர், ஒருவனுக்கும், ஒருத்திக்கும் கண்ணும் மனமும் இணைவதை “காந்தர்வம்” என்று வேதம் கூறிற்று என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். இதை வேதம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதை அறியாத சிலர், “களவு” என்பதுதான் தமிழர் மரபு என்றும், இது ஆரியர் மரபில் இல்லை என்றும், இதை பின்னர் ஆரியர் கெடுத்து, “கற்பு மணம்” என்பதை புகுத்தி விட்டனர் என்பர். இது அவர்களுடைய அறியாமைக்கு எடுத்துக்காட்டு எனலாம். இது இருவர் மனமும் ஒன்றல் இன்ப வாழ்வுக்கு இன்றியமையாதது. அதனால் “களவியல்” என்ற படலத்தை தொல்காப்பியர் முதலில் குறித்தார். மனு தமது தர்ம சாத்திரத்தில் எட்டு விதமான மணங்களைக் கீழ்வருமாறு குறிக்கிறார். பிராமம் தைவம் ததைவ ஆர்ஷம் ப்ராஜாபத்யம் ததா ஆஸுர: காந்தர்வ: ராக்ஷஸஶ்சைவ பைஶாச: அஷ்டமோ அதம: (மனு — 3-21) அதேபோல் மனு ஒவ்வொருவகை மணவினையையும் விவரித்துள்ளார். அவற்றில் காந்தர்வ விவாஹத்தை மட்டும் காண்போம். இச்சயா அன்யோன்ய ஸம்யோக꞉ கந்யாயாஶ்ச வரஸ்ய ச . காந்தர்வ꞉ ஸ து விஜ்ஞேயோ மைதுன்ய꞉ காமஸம்பவ꞉ (மனு — 3.32) கன்னியும் தலைமகனும் ஒருவரோடு ஒருவர் இச்சையால் இணைந்தால் அது காமத்தால் தோன்றிய இணைதல். அதுதான் “காந்தர்வம்” என்றழைக்கப்படுகிறது என்று குறித்துள்ளார். இதையே “களவு” என்று தமிழ் மரபு கூறுகிறது. (மனு — 3.32). இதை தொல்காப்பியர் “காமப்புணர்ச்சி” என்பர். அதனால் “களவியல்” என்னும் துறை தமிழ் மரபுக்கும், வேதமரபுக்கும் இரண்டுக்கும் பொருந்தும். அடுத்து கற்பியல் என்ற படலத்தில் தொல்காப்பியர் கற்புபற்றிக் கூறுகிறார். அதில் மணவினைகளில் “கற்பு” என்ற துறையைக் கூறுமிடத்து “கற்பு” என்பது “கல்பிதம்” என்பதின் தமிழாக்கம் என்று நச்சினார்க்கினியர் சுட்டிக் காட்டுகிறார். “பிரம்மவிவாஹம்” என்பதை மனு தமது தர்மசாத்திரத்தில் ஒரு சுலோகத்தால் (3-97) கன்னிப் பெண்ணை நன்கு உயர்ந்த வஸ்திரங்களால் அலங்கரித்து அணிகலன்கள் பூட்டி நல்ல ஒழுக்கமுடைய வரனுக்கு மணம் செய்து கொடுத்தல் “பிரம்ம விவாஹம்” அல்லது “கைக்கோள்” ஆதலால், தொல்காப்பியம் “கற்பியல்” என்னும் படலம் “பாணிக்கிரஹனம்” (கைப்பிடித்தல்) என்பதாம். தொல்காப்பியர் இதை ஒரு சட்ட விதியாகவே வர்ணிக்கிறார். “கற்பெனப்படுவது கரண மொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியை கொடைக் குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே” இந்த சூத்திரத்துக்கு உரை எழுதுகையில் நச்சினார்க்கினியர் “களவு”, “கற்பு”, என்ற இருவகை மணமும் “கைக்கோள்” என்கிறார். “களவு” என்பது “காந்தர்வ” மணம் என்று கண்டோம். ஆதலின், இது சடங்குகள் இல்லாவிட்டாலும், தலைவன் தலைவியின் கையைப் பிடிப்பதால் இதுவும் “கைக்கோளின்” கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும் “களவு” என்பது பெரியோர் அனுமதியின் முன்னர் நடந்தாலும், பின்னர் உலகறிய மணத்தில் முறைப்படி நடத்தல் வேண்டுமாதலால் இதுவும் “கைக்கோள்” என்பதின் கொண்டு வரப்பட்டது. “கற்பியலில்” பல சட்ட நுணுக்கமான சொற்கள் உள்ளன. “கரணம்” என்ற சொல்லை இவ்வாறு காணலாம். “கரணம்” என்றால் எழுத்து மூலம் பதிவு செய்யப்பட்ட சான்று. இதன்படி ஒரு தலைவன் ஒரு பெண்ணுடன் இணைய வேண்டும் என்றால் அவன், “தான் உள்ளளவும் அப்பெண்ணைக் காப்பாற்றுவேன்” என்று ஒரு சான்று மூலம் ஒப்புதல் கொடுக்கவேண்டும். இது பெண்களுக்கு பாதுகாப்பு குறித்தது. இதைத்தான் இன்றும் “மணஓலை” என்று கூறுகின்றனர். அதனால் இன்று “ரெஜிஸ்டிரார்” ஆபீசில் பதிவு செய்கிறார்கள் அல்லவா, அது இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கு இருந்து வரும் மரபுதான். ஒரு பெண்ணை அடையவேண்டுபவன் “கரணம்” எழுதிக் கொடுத்தால்தான் மணக்கமுடியும். அதைத்தான் “கற்பு” என்று கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மரபு. இதைத்தான் தொல்காப்பிய சூத்திரம், “கற்பு எனப்படுவது கரணமொடு புணர்” என்று கூறுகிறது. அடுத்து ஒரு பெண்ணை மணக்க விரும்புபவன் அந்தப் பெண்ணை கொள்ளக்கூடிய மரபுடையவனாக இருத்தல்வேண்டும். ஒன்றுக் கொன்று ஒவ்வா மரபு — அவர்கள் மண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தலாம். அதனால் கொளற்குரி மரபில் “கிழவன்” என்பது “மாப்பிள்ளையான தலைவன்” என்று பொருள். வயது முதிர்ந்தவன் என்று பொருள் அல்ல. “கிழவன்” என்பது “உரிமை பெற்றவன்” என்ற பொருளில் வரும். அதேபோல் “கிழவியைக் கொடுத்தற்குரிய மரபினோர் கொடுக்க” என்று கூறினார். மணப்பெண்ணின் தந்தை, உடன்பிறந்தான், மாமன் முதலிய ஒருவர். அதிலும் யாருக்கு உரிமை உண்டோ அவர்தான் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு உரிமையுடையோர் கொடுத்தால்தான் அப்பெண்ணை மணக்க முடியும். இம்மரபுகள் எல்லாம் கற்பிக்கப்பட்ட சட்ட மரபு. அதனால் இது “கற்பு” என்றழைக்கப்பட்டது. தொல்காப்பியர் எந்த அளவு அறநூல்களைக் கற்று இவ்விலக்கணத்தை இயற்றினார் என்பது இதனால் வெளிப்படும். அடுத்த சூத்திரத்தில் பெண்களைக் கொடுக்கக்கூடியவர் இல்லை என்பதால் மணம் இல்லை என்று ஆகி விடக்கூடாது என்பதால் அவளை அறிந்த பெரியோர் இருந்தாலும் அவர் அப்பெண்ணைக் கொடுக்கலாம் என்பது சட்டம். இது எல்லா வருணத்தாருக்கும் பொருந்தும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதை, “கொடுப்போரின்றியும் கரணம் உண்டே புணர்ந்து உடன் போகிய காலயான” என்ற சூத்திரத்தாலும் “மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்காகிய காலமும் உண்டே” என்ற சூத்திரத்தாலும் குறிக்கிறார். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர், “இது புணர்ந்து உடன் போயினார் ஆண்டு கொடுப்போரின்றியும் வேள்வி ஆசான் காட்டிய சடங்கின் வழியால் கற்பு பூண்டு வருவதும் ஆம் என்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டு வந்து கொடுப்ப கோடல் உளதேல் அது மேல் கூறியதின் அடங்கும்” என்றார். அடுத்துள்ள சூத்திரத்தில் இது நான்கு வருணத்தாரின் மணவினைக்கும் பொருந்தும் என்று கூறுபவர், சில காலத்தில் நான்காம் வருணத்தார்க்கு இல்லாதிருந்தது என்றும், ஆனால் தொல்காப்பியர் காலத்தில் நால்வருக்கும் கரணம் உண்டு என்றார். இதை விரித்துரைத்த நச்சினார்க்கினியர், “வேத நூல்தான் அந்தணர், அரசர், வணிகர் என்ற மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம், அந்தணர் முதலியோர்க்கும் மகட்கொண்ட வேளாண்மாந்தருக்கும் மந்திர தந்திர வகையால் உரித்தாகிய காலமும் உள” என்று கூறுகிறார். இப்பொருள்பற்றி மேலும் ஆராயும்முன், அடுத்த தொல்காப்பிய சூத்திரத்தையும் படித்தல் வேண்டும்.
பொருளடக்கம் | அத்தியாயம்-1 | அத்தியாயம்-3 | அகெடமி