pATal48 pATal47.html pATal48.html pATal49.html ஏரெழுபது மகாகவி கம்பர் 48. பசுங்கதிர்ச் சிறப்பு.
பொருளடக்கம் | 47. ஈற்றேறுஞ் சிறப்பு. | 49. நெற்குலை வளைதற்சிறப்பு. | அகெடமி

48. பசுங்கதிர்ச் சிறப்பு. முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும் கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிரும் கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே. (இ—ள்.) முதிராத பருவத்தும் — வயசுமுற்றாத காலத்திலும் [இளமைப்பருவத்திலும்], முற்றிய நல் பருவத்தும் — வயசு முதிர்ந்த முதுமைப்பருவத்தும், உயிர் — பிராணிகளை, கதிர் ஆகி வளர்ப்பது — கதிரென்று சொல்லப்படுவதாகி வளரச்செய்வது, இவர் — இவ்வேளாளர், வளர்க்கும் — வளரச்செய்கின்ற, கதிர் அன்றோ — கதிரல்லவா? எதிர்ஆக — (கண்ணுக்குத் தோன்றுமாறு) பிரதியட்சமாக, வருகின்ற — (ஆகாயத்திலே) சஞ்சரிக்கின்ற, எரி கதிரும் — எரிக்குந்தன்மையுள்ள சூரியனும், குளிர் கதிரும் — குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரனும். கதிர் ஆகி — கதிரென்று சொல்லப்பட்டு, உயிர் — பிராணிகளை, வளர்ப்பது—, உண்டாயின்—, காட்டீர் — (உலகத்தவரே! நீங்களே) காட்டுங்கள்; (எ - று.) தன்னுடைய உதயாஸ்தமனங்களாற் பகலிரவை யுண்டாக்கி வெம்மையும் குளிர்ச்சியும் தந்து உலகத்தைச் சூரியசந்திரர் காக்கின்றன ரென்று சிலர் கூறுகின்றனரே; அத்தேவர்களின் கதிர்கள் சாலிக்கதிர்போல உலகத்துயிர்களைத் தாமே நேரே பாதுகாக்கின்றனவா? நீங்களே நிரூபித்துக் காட்டுங்களென்று வினாவுகின்றன ரென்க. இதனாற் சூரியசந்திரர்களின் கதிர்களினும் நேரே உலகத் துயிர்களைத் தாங்குந் தன்மை யுள்ளதெனச் சாலிக்கதிரின் மேன்மையைக் கூறினார். பிராணிகளை எந்நிலையிலுங் காப்பது சாலிக்கதி ரென்பது, முன்னிரண்டடிகளிற் கூறிய பொருள். எரிகதிர், குளிர் கதிர்பண்புத்தொகைப்புறத்துப்பிறந்த அன்மொழித் தொகைகளாகிச் சூரிய சந்திரரைக் காட்டின. — (48)
பொருளடக்கம் | 47. ஈற்றேறுஞ் சிறப்பு. | 49. நெற்குலை வளைதற்சிறப்பு. | அகெடமி