pATal46
pATal45.html
pATal46.html
pATal47.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
46. கருப்பிடித்தற் சிறப்பு.
பயிர்க்கதிரில் பால்பிடித்தல் கருப்பிடித்தலெனப்படும்.
46. கருப்பிடித்தற் சிறப்பு.
திருவடையும் திறலடையும் சீரடையும் செறிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையிற் பூதலத்திற் கலியடைய மாட்டாதே.
(இ—ள்.) தரு அடையும் — கற்பகமரத்தை யொத்த, கொடை — கொடைத்தொழிலை, ஆளர் — மேற்கொண்ட வேளாளர், தண் வயலில் — குளிர்ந்த வயலிலே, செஞ்சாலி — செந்நெற்பயிர், கரு அடையின் — கருவைக் கொள்ளுமாயின், (யாவர்க்கும்), திரு — செல்வங்கள், அடையும் — தோன்றும், திறல் — வெற்றி, அடையும்—; சீர் அடையும் — புகழும் உண்டாம்; செறிவு அடையும் — தேகவலிமையும் உண்டாம்; உரு அடையும் — வடிவழகு உண்டாம்; உயர்வு அடையும் — மேன்மையுண்டாம்; உலகு எலாம் — உலகத் துயிர்களெல்லாம், உயர்ந்து ஓங்கும் — மேன்மைபெற்று நிற்கும்; பூதலத்தில் — இப்பூமியில், கலி — தரித்திரமென்பது, அடையமாட்டாது; (எ - று.)
பயிர் கருவையடைந்து தானியம் விளைந்தால் யாவரும் பசியாமலுண்ணலாமாகலான், அப்போது திருமுதலியன அடையு மென்றவாறு. இச்செய்யுள் ஒழித்துக்காட்டணியின்பாற்படும். பசியினால் வாடும்போது உருவமும் பொலிவழியு மாதலால், பசியின்றி வயிறாரப்புசிக்கும் பருவத்து “உருவடையும்” என்றாரென்க. தரு — தற்சமவடசொல்; மரப்பொதுப்பெயராகிய இது, சிறப்பாய்த் தேவதருவெனப்படுங் கற்பக தருவை யுணர்த்திற்று. — (46)