nUlAciriyar
nUl.html
nUlAciriyar.html
pAyiram.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
நூலாசிரியர்.
இந்நூலை இயற்றியவர் கம்பரென்பர். இந்நூல் ஏரைப் பற்றிய எழுபது செய்யுட்களையுடையதாயினும், கம்பராமாயணத்திற் போலச் சொல்வளம் பொருள்வளமின்றி விசித்திரப்பட்ட வருணனைகளை யுடையதுமாகாமல் பெரும்பாலும் “அலப்படை யின்றி உலகநில்லாது, உழவினால்தான் உலகத்தில் திரு நிற்கும்: யாவரும் வேளாளரால்தான் பிழைக்கின்றனர்” என்று இவ்வாறான கருத்துப்படத் திருப்பித் திருப்பிக் கூறுதலாலும், சைவப்பற் றுடைமை தோன்றக் கூறுவதாலும் கம்பர் செய்ததல்ல என்று ஒரு சாரார் கூறுகின்றனர்: மற்றொரு சாரார் கம்பரென்பவர் முதலிற் சைவராயிருந்த நிலையில் இந்நூலைப் பாடினரென்றும், பெரும் புலவராகிக் கம்பராமாயணம் பாடத்தொடங்கிய பின்னர் வைண வப்பற்றுடையராயினரென்றுங் கூறுகின்றனர்.
கம்பர் ஏரெழுபதுபாடியதைப்பற்றிச் சிலர் வழங்குவதொரு வரலாறு வருமாறு:— கம்பர் தமதுமகனான அம்பிகாபதிக்கு விவாகம் நடத்தியபோது சகலமகாஜனங்களும் வந்துநிறைந்திருக்கும் மணப்பந்தலில் சடையப்பவள்ளல் சிறிது காலந்தாழ்த்து வந்ததனால் இருக்க இடம்பெறாது ஜலதாரை யோரத்தில் ஒதுங்கி நிற்க, அதுகண்டு வருந்திய தம்மனைவியை நோக்கி “இவரை நாம் வைக்கவேண்டியவிடத்தில் மேலாக வைப்போம்; அதனைக் குறிததுச் சிந்தனைகொள்ளவேண்டா” எனக் கூறியிருந்தபடி தமது நன்றி மறவாக்குணத்தால் இராமாயணத்திற் பத்துஇடங்களில் அவரைப் பாராட்டிக்கூறியதன்றி, அச்சடையப்பப் பிரபுவின் குலப்பெருமையை வெளிப்படுத்துபவராய் இந்நூலைச் செய்து முடித்தனர். பிறகு, இதனை அரங்கேற்றுகையில், முதலியார் இடையிலே வெளியிற் சென்றிருந்தபோது விடநாகமொன்று அவரைத் தீண்ட, அவர் நூலரங்கேறுதல் தடைப்படாதிருக்கும் பொருட்டு அதனை ஒருவர்க்குந் தெரியப்படுத்தாது மறைத்துச் சபையில் வந்திருந்து விஷவேகத்தால் மூர்ச்சையடைந்தனராக, சரசுவதீகடாட்சம்பெற்ற கம்பரும் அதனையறிந்து “ஆழியான் பள்ளியணையே யவன் கடைந்த, வாழிவரையின் மணித்தாம்பே — யூழியான், பூணே புரமெரித்த பொற்சிலையிற் பூட்டுகின்ற, நாணே யகல நட,” “மங்கையொருபாகன் மணிமார்பிலாரமே, பொங்குகடல்கடைந்த பொற்கயிறே — திங்களையும், சீறியதன் மேலூருந் தெய்வத் திருநாணே, ஏறிய பாம்பே யிறங்கு,” “பாரைச்சுமந்த படவரவே பங்கயக்கண், வீரன் கிடந்துறங்கு மெல்லணையே — ஈரமதிச், செஞ்சடையான்பூணுந் திருவாபரணமே, நஞ்சுடையாய் தூர நட” என்று மூன்று வெண்பாக்களைப் பாடி, அஷ்டமகாநாகம் முதலான சகலசர்ப்பங்கட்கும் அதிபதியாகிய ஆதிசேஷனைப் பிரார்த்தித்தவுடனே, அங்கு ஒருபுற்றிலிருந்து ஒருசர்ப்பம் வெளிப்பட்டுவந்து யாவரும் அதிசயிக்கும்படி முதலியாரைக்கிட்டி முன்பு கடித்தவாயிலே மறுபடிகடித்துத் தலைக்கேறின விஷத்தை மீட்டுக்கொண்டு செல்ல, சடையப்பமுதலியாரும் மூர்ச்சைதெளிந்து அறிவுபெற்றெழுந்தனராக, கம்பர் இந்நூலையரங்கேற்றி, பின்பு, உடனே இயற்றிய திருக்கைவழக்கமென்ற நூலில் “பாவலர்தாம், ஏரெழுபதோதி யரங்கேற்றுங் களரியிலே, காரிவிடநாகங்கடிக்குங்கை” என்று இவ்விஷயத்தைப் பாராட்டிக் கூறினரென்பதாம்.
ஏரெழுபது அரங்கேறிய சபையைக்குறித்து,
குணங்கொள்சடையன் புதுச்சேரிக்கொடையான் சேதிராயன்முதல்
கணங்கொள் பெரியோர்பலர்கூடிக் கம்பநாடன்களிகூர
இணங்கும்பரிசிலீந்துபுவியேழும் புகழேரெழுபதுடன்
மணங்கொள்திருக்கைவழக்க நூல்வைத்தார் சோழமண்டலமே.
என்று ஒருபாடல் வழங்குகின்றது.