<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="prabandam.xsl"?>

<thirumozi>

<heading>
<author>ஸ்ரீ திருமழிசைப்பிரான் அருளிச்செய்த</author>
<title>திவ்யப் பிரபந்தம் (4/14)</title>
<number>4</number>
<total>2</total>
</heading>

<padiyam>

<number>1</number>

<title> திருச்சந்த விருத்தம்</title>

<verse>
<line>பூ நிலாய ஐந்துமாய், புனற்கண் நின்ற நான்குமாய்,</line>
<line>தீ நிலாய மூன்றுமாய், சிறந்த கால் இரண்டுமாய்,</line>
<line>மீ நிலாயது ஒன்றும் ஆகி, வேறு வேறு தன்மையாய்,</line>
<line>நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே?</line>
<number>1</number>
</verse>

<verse>
<line>ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,</line>
<line>ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்,</line>
<line>வேறு வேறு ஞானம் ஆகி, மெய்யினோடு பொய்யுமாய்,</line>
<line>ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே!</line>
<number>2</number>
</verse>

<verse>
<line>ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, அல்லவற்று உளாயுமாய்,</line>
<line>ஐந்து மூன்றும் ஒன்றும் ஆகி, நின்ற ஆதிதேவனே!</line>
<line>ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, அந்தரத்து அணைந்து நின்று,</line>
<line>ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை யாவர் காண வல்லரே?</line>
<number>3</number>
</verse>

<verse>
<line>மூன்று முப்பது ஆறினோடு ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்,</line>
<line>மூன்று மூர்த்தி ஆகி, மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்,</line>
<line>தோன்று சோதி மூன்றுமாய், துளக்கம் இல் விளக்கமாய்,</line>
<line>ஏன்று என் ஆவியுள்புகுந்தது என் கொலோ? எம் ஈசனே!</line>
<number>4</number>
</verse>

<verse>
<line>நின்று இயங்கும் ஒன்று அலா உருக்கள் தோறும் ஆவியாய்</line>
<line>ஒன்றி, உள்கலந்து நின்ற நின்ன தன்மை இன்னது என்று</line>
<line>என்றும் யார்க்கும் எண் இறந்த ஆதியாய்! நின் உந்திவாய்</line>
<line>அன்று நான்முகற் பயந்த ஆதிதேவன் அல்லையே?</line>
<number>5</number>
</verse>

<verse>
<line>நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை</line>
<line>நாகம் ஏந்தும் ஆக! மாகம் மாகம் ஏந்து வார்புனல்</line>
<line>மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து, காத்து,</line>
<line>ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின்கணே இயன்றதே.</line>
<number>6</number>
</verse>

<verse>
<line>ஒன்று இரண்டு மூர்த்தியாய், உறக்கமோடு உணர்ச்சியாய்,</line>
<line>ஒன்று இரண்டு காலம் ஆகி, வேலை ஞாலம் ஆயினாய்!</line>
<line>ஒன்று இரண்டு தீயும் ஆகி ஆயன் ஆய மாயனே!</line>
<line>ஒன்று இரண்டு கண்ணினானும் உன்னை ஏத்த வல்லனே?</line>
<number>7</number>
</verse>

<verse>
<line>ஆதி ஆன வானவர்க்கும் அண்டம் ஆய அப்புறத்து</line>
<line>ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ;</line>
<line>ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி;</line>
<line>ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே!</line>
<number>8</number>
</verse>

<verse>
<line>தாது உலாவு கொன்றை மாலை துன்னு செஞ்சடைச் சிவன்</line>
<line>நீதியால் வணங்கு பாத! நின்மலா! நிலாய சீர்</line>
<line>வேத வாணர் கீத வேள்வி நீதியான கேள்வியார்</line>
<line>நீதியால் வணங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே.</line>
<number>9</number>
</verse>

<verse>
<line>தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடங்கடல்</line>
<line>தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்,</line>
<line>நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்</line>
<line>நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே.</line>
<number>10</number>
</verse>

<verse>
<line>சொல்லினால் தொடர்ச்சி நீ, சொலப்படும் பொருளும் நீ,</line>
<line>சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ;</line>
<line>சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்</line>
<line>சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே?</line>
<number>11</number>
</verse>

<verse>
<line>உலகுதன்னை நீ படைத்தி, உள் ஒடுக்கி வைத்தி, மீண்டு</line>
<line>உலகுதன்னுளே பிறத்தி, ஓரிடத்தை அல்லையால்;</line>
<line>உலகு நின்னொடு ஒன்றி நிற்க வேறு நிற்றி; ஆதலால்</line>
<line>உலகில் நின்னை உள்ள சூழல் யாவர் உள்ள வல்லரே?</line>
<number>12</number>
</verse>

<verse>
<line>இன்னை என்று சொல்லல் ஆவது இல்லை யாதும், இட்டிடைப்</line>
<line>பின்னை கேள்வன் என்பர் உன் பிணக்கு உணர்ந்த பெற்றியோர்;</line>
<line>பின்னை ஆய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும்</line>
<line>நின்னை யார் நினைக்க வல்லர் நீர்மையால் நினைக்கிலே?</line>
<number>13</number>
</verse>

<verse>
<line>தூய்மை யோகம் ஆயினாய்! துழாய்-அலங்கல் மாலையாய்!</line>
<line>ஆமை ஆகி ஆழ்கடற் துயின்ற அதிதேவ! நின்</line>
<line>நாமதேயம் இன்னது என்ன வல்லம் அல்ல; ஆகிலும்</line>
<line>சாம வேத கீதனாய சக்ரபாணி அல்லையே?</line>
<number>14</number>
</verse>

<verse>
<line>அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஆகி நின்று அவற்றுளே</line>
<line>தங்குகின்ற தன்மையை! தடங்கடற் பணத்தலை</line>
<line>செங்கண் நாகணைக் கிடந்த செல்வம் மல்கு சீரினாய்!</line>
<line>சங்க வண்ணம் அன்ன மேனி சார்ங்கபாணி அல்லையே?</line>
<number>15</number>
</verse>

<verse>
<line>தலைக் கணம் துகள் குழம்பு-சாதி சோதி தோற்றமாய்</line>
<line>நிலைக் கணங்கள் காண வந்து நிற்றியேலும், நீடு இரும்</line>
<line>கலைக் கணங்கள் சொற் பொருள் கருத்தினால் நினைக்கொணா</line>
<line>மலைக் கணங்கள் போல் உணர்த்தும் மாட்சி நிந்தன் மாட்சியே.</line>
<number>16</number>
</verse>

<verse>
<line>ஏக மூர்த்தி, மூன்று மூர்த்தி, நாலு மூர்த்தி, நன்மை சேர்</line>
<line>போக மூர்த்தி, புண்ணியத்தின் மூர்த்தி, எண் இல் மூர்த்தியாய்,</line>
<line>நாக மூர்த்தி சயனமாய், நலங் கடற் கிடந்து, மேல்</line>
<line>ஆக மூர்த்தி ஆய வண்ணம் என் கொல்? ஆதிதேவனே!</line>
<number>17</number>
</verse>

<verse>
<line>விடத்த வாய் ஒர் ஆயிரம், இராயிரம் கண், வெந்தழல்</line>
<line>விடுத்து, வீழ்வு இலாத போகம் மிக்க சோதி தொக்க சீர்</line>
<line>தொடுத்து, மேல் விதானமாய பௌளவ-நீ அராவணைப்</line>
<line>படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல்! வேலைவண்ணனே!</line>
<number>18</number>
</verse>

<verse>
<line>புள்ளது ஆகி வேதம் நான்கும் ஓதினாய், அது அன்றியும்</line>
<line>புள்ளின்வாய் பிளந்து புட் கொடிப் பிடித்த பின்னரும்</line>
<line>புள்ளை ஊர்தி; ஆதலால், அது என்கொல், மின் கொள் நேமியாய்!</line>
<line>புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தல் காதலித்ததே?</line>
<number>19</number>
</verse>

<verse>
<line>கூசம் ஒன்றும் இன்றி மாசுணம் படுத்து, வேலை-நீர்</line>
<line>பேச நின்ற தேவர் வந்து பாட முன் கிடந்ததும்,</line>
<line>பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா!</line>
<line>ஏச அன்று நீ கிடந்தவாறு கூறு தேறவே.</line>
<number>20</number>
</verse>

<verse>
<line>அரங்கனே! தரங்க நீர் கலங்க அன்று, குன்று சூழ்</line>
<line>மரங்கள் தேய, மாநிலம் குலுங்க, மாசுணம் சுலாய்</line>
<line>நெருங்க, நீ கடைந்தபோது, நின்ற சூரர் என் செய்தார்?</line>
<line>குரங்கை ஆள் உகந்த எந்தை! கூறு தேற வேறு இதே.</line>
<number>21</number>
</verse>

<verse>
<line>பண்டும் இன்றும் மேலுமாய் ஒர் பாலனாகி ஞாலம் ஏழ்</line>
<line>உண்டு மண்டி ஆலிலைத் துயின்ற ஆதிதேவனே!</line>
<line>வண்டு கிண்டு தண் துழாய்-அலங்கலாய்! கலந்த சீர்ப்</line>
<line>புண்டரீகப் பாவை சேரும் மார்ப! பூமிநாதனே!</line>
<number>22</number>
</verse>

<verse>
<line>வால் நிறத்து ஓர் சீயமாய் வளைந்த வாள்-எயிற்றவன்</line>
<line>ஊன் நிறத்து உகிர்த்தலம் அழுத்தினாய்! உலாய சீர்</line>
<line>நால்-நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு</line>
<line>பால்-நிறக் கடற்கிடந்த பற்பநாபன் அல்லையே?</line>
<number>23</number>
</verse>

<verse>
<line>கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே!</line>
<line>அங்கை ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்!</line>
<line>சிங்கமாய தேவதேவ! தேன் உலாவு மென் மலர்-</line>
<line>மங்கை மன்னி வாழும் மார்ப! ஆழி மேனி மாயனே!</line>
<number>24</number>
</verse>

<verse>
<line>வரத்தினிற் சிரத்தை மிக்க வாள்-எயிற்று மற்றவன்</line>
<line>உரத்தினிற் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்;</line>
<line>இரத்தி நீ--இது என்ன பொய்?--இரந்த மண் வயிற்றுளே</line>
<line>கரத்தி, உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே!</line>
<number>25</number>
</verse>

<verse>
<line>ஆணினோடு பெண்ணும் ஆகி, அல்லவோடு நல்லவாய்,</line>
<line>ஊணொடு ஓசை ஊறும் ஆகி, ஒன்று அலாத மாயையாய்,</line>
<line>பூணி பேணும் ஆயன் ஆகி, பொய்யினோடு மெய்யுமாய்,</line>
<line>காணி பேணும் மாணியாய்க் கரந்து சென்ற கள்வனே!</line>
<number>26</number>
</verse>

<verse>
<line>விண் கடந்த சோதியாய்! விளங்கு ஞான மூர்த்தியாய்!</line>
<line>பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே!</line>
<line>எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்,</line>
<line>மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே?</line>
<number>27</number>
</verse>

<verse>
<line>படைத்த பார் இடந்து, அளந்து, அது உண்டு உமிழ்ந்து, பௌளவ நீர்</line>
<line>படைத்து அடைத்து, அதிற் கிடந்து, முன் கடைந்த பெற்றியோய்!</line>
<line>மிடைத்த மாலி மாலிமான் விலங்கு காலநூர் புகப்</line>
<line>படைக்கலம் விடுத்த பல் படைத் தடக்கை மாயனே!</line>
<number>28</number>
</verse>

<verse>
<line>பரத்திலும் பரத்தை ஆதில் பௌளவ நீர் அணைக் கிடந்து,</line>
<line>உரத்திலும் ஒருத்திதன்னை வைத்து உகந்து, அது அன்றியும்</line>
<line>நரத்திலும் பிறத்தி; நாத! ஞானமூர்த்தி ஆயினாய்!</line>
<line>ஒருத்தரும் நினாது தன்மை இன்னது என்ன வல்லரே?</line>
<number>29</number>
</verse>

<verse>
<line>வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும்</line>
<line>போனகம் செய்து, ஆலிலைத் துயின்ற புண்டர்கனே!</line>
<line>தேன் அகஞ்செய் தண் நறும் மலர்த் துழாய் நன் மாலையாய்!</line>
<line>கூன் அகம் புகத் தெறித்த கொற்ற வில்லி அல்லையே?</line>
<number>30</number>
</verse>

<verse>
<line>காலநேமி காலனே! கணக்கு இலாத கீர்த்தியாய்!</line>
<line>ஞாலம் ஏழும் உண்டு பண்டு ஒர் பாலன் ஆய பண்பனே!</line>
<line>வேலை வேவ வில் வளைத்த வெல் சினத்த வீர! நின்</line>
<line>பாலர் ஆய பத்தர் சித்தம் முத்தி செய்யும் மூர்த்தியே!</line>
<number>31</number>
</verse>

<verse>
<line>குரக்கினப் படை கொடு, குரை கடலின் மீது போய்,</line>
<line>அரக்கர் அங்கு அரங்க, வெஞ்சரம் துரந்த ஆதி நீ;</line>
<line>இரக்க மண் கொடுத்தவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே.</line>
<line>பரக்க வைத்து அளந்து கொண்ட பெற்பபாதன் அல்லையே?</line>
<number>32</number>
</verse>

<verse>
<line>மின் நிறத்து எயிற்று அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து,</line>
<line>பின்னவற்கு அருள் புரிந்து அரசு-அளித்த பெற்றியோய்!</line>
<line>நன்னிறத்து ஒர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ! மன்னு சீர்ப்</line>
<line>பொன் நிறத்த வண்ணன் ஆய புண்டரீகன் அல்லையே?</line>
<number>33</number>
</verse>

<verse>
<line>ஆதி ஆதி ஆதி நீ; ஒர் அண்டம் ஆதி; ஆதலால்,</line>
<line>சோதியாத சோதி நீ; அது உண்மையில் விளங்கினாய்;</line>
<line>வேதம் ஆகி வேள்வி ஆகி விண்ணினோடு மண்ணுமாய்</line>
<line>ஆதி ஆகி, ஆயன் ஆய் மாயம் என்ன மாயமே?</line>
<number>34</number>
</verse>

<verse>
<line>அம்பு உலாவு மீனும் ஆகி, ஆமை ஆகி, ஆழியார்</line>
<line>தம்பிரனும் ஆகி மிக்கது, அன்பு மிக்கு; அது அன்றியும்</line>
<line>கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர்-மாதர் பிள்ளையாய்,</line>
<line>எம்பிரானும் ஆய வண்ணம் என்கொலோ? எம் ஈசனே!</line>
<number>35</number>
</verse>

<verse>
<line>ஆடகத்த பூண்-முலை யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்,</line>
<line>சாடு உதைத்து, ஓர் புள்ளது ஆவி கள்ள தாய பேய்மகள்</line>
<line>வீட வைத்த வெய்ய கொங்கை ஐய பா அமுதுசெய்து</line>
<line>ஆடகக் கை மாதர் வாய்-அமுதம் உண்டது என்கொலோ?</line>
<number>36</number>
</verse>

<verse>
<line>காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து, எதிர்ந்த பூங் குருந்தம்</line>
<line>சாய்த்து, மா பிளந்த கைத் தலத்த கண்ணன் என்பரால்:</line>
<line>ஆய்ச்சி பாலை உண்டு, மண்ணை உண்டு, வெண்ணெய் உண்டு, பின்</line>
<line>பேய்ச்சி பாலை உண்டு, பண்டு ஓர் ஏனம் ஆய வாமனா!</line>
<number>37</number>
</verse>

<verse>
<line>கடம் கலந்த வன்கரி மருப்பு ஒசித்து, ஒர் பொய்கைவாப்</line>
<line>விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே!</line>
<line>குடம் கலந்த கூத்தன் ஆய கொண்டல்வண்ண! தண்நுழாய்</line>
<line>வடம் கலந்த மாலை மார்ப! காலநேமி காலனே!</line>
<number>38</number>
</verse>

<verse>
<line>வெற்பு எடுத்து வேலை-நீர் கலக்கினாய்; அது அன்றியும்,</line>
<line>வெற்பு எடுத்து வேலை-நீர் வரம்பு கட்டி, வேலை சூழ்</line>
<line>வெற்பு எடுத்த இஞ்சி சூழ் இலங்கை கட்டழித்த நீ</line>
<line>வெற்பு எடுத்து மாரி காத்த மேகவண்ணன் அல்லையே?</line>
<number>39</number>
</verse>

<verse>
<line>ஆனை காத்து, ஒர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர்-பிள்ளையாய்</line>
<line>ஆனை மேய்த்தி; ஆனெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால்</line>
<line>ஆனை காத்து, மை-அரிக் கண் மாதரார் திறத்து முன்</line>
<line>ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே!</line>
<number>40</number>
</verse>

<verse>
<line>ஆயன் ஆகி ஆயர்-மங்கை வேய தோள் விரும்பினாய்;</line>
<line>ஆய, நின்னை யாவர் வல்லர் அம்பரத்தொடு இம்பராய்?</line>
<line>மாய! மாய மாயை கொல்? அது அன்றி நீ வகுத்தலும்</line>
<line>மாய மாயம் ஆக்கினாய்; உன் மாயம் முற்றும் மாயமே!</line>
<number>41</number>
</verse>

<verse>
<line>வேறு இசைந்த செக்கர் மேனி நீறு அணிந்த புன்சடைக்</line>
<line>கீறு திங்கள் வைத்தவன் கை வைத்த வன்கபால் மிசை</line>
<line>ஊறு செங் குருதியால் நிறைத்த காரணந்தனை,</line>
<line>ஏறு சென்று அடர்த்த ஈச! பேசு, கூசம் இன்றியே.</line>
<number>42</number>
</verse>

<verse>
<line>வெஞ்சினத்த வேழ வெண் மருப்பு ஒசித்து, உருத்த மா</line>
<line>கஞ்சனைக் கடிந்து, மண் அளந்துகொண்ட காலனே!</line>
<line>வஞ்சனத்து வந்த பேய்ச்சி ஆவி பாலுள் வாங்கினாய்!</line>
<line>அஞ்சனத்த வண்ணன் ஆய ஆதிதேவன் அல்லையே?</line>
<number>43</number>
</verse>

<verse>
<line>பாலின் நீர்மை, செம்பொன் நீர்மை, பாசியின் பசு புறம்</line>
<line>போலும் நீர்மை, பொற்பு உடைத் தடத்து வண்டு விண்டு உலாம்</line>
<line>நீல நீர்மை: என்று இவை நிறைந்த காலம் நான்குமாய்,</line>
<line>மாலின் நீர்மை வையகம் மறைத்தது என்ன நீர்மையே?</line>
<number>44</number>
</verse>

<verse>
<line>மண்ணுளாய் கொல்? விண்ணுளாய் கொல்? மண்ணுளே மயங்கி நின்று</line>
<line>எண்ணும் எண் அகப்படாய் கொல்? என்ன மாயை! நின் தமர்</line>
<line>கண்ணுளாய் கொல்? சேயை கொல்? அனந்தன்மேல் கிடந்த எம்</line>
<line>புண்ணியா! புனந்துழாய்-அலங்கல் அம் புனிதனே!</line>
<number>45</number>
</verse>

<verse>
<line>தோடு பெற்ற தண் துழாய்-அலங்கல் ஆடு சென்னியாய்!</line>
<line>கோடு பற்றி ஆழி ஏந்தி அஞ்சிறைப் புள் ஊர்தியால்;</line>
<line>நாடு பெற்ற நன்மை நண்ணம் இல்லையேனும், நாயினேன்</line>
<line>வீடு பெற்று, இறப்பொடும் பிறப்பு அறுக்குமோ சொலே.</line>
<number>46</number>
</verse>

<verse>
<line>காரொடு ஒத்த மேனி நங்கள் கண்ண! விண்ணின் நாதனே!</line>
<line>நீர் இடத்து, அராவணைக் கிடத்தி என்பர்; அன்றியும்</line>
<line>ஓர் இடத்தை அல்லை, எல்லை இல்லை என்பர்; ஆதலால்,</line>
<line>சேர்வு-இடத்தை நாயினேன் தெரிந்து, இறைஞ்சுமா சொலே.</line>
<number>47</number>
</verse>

<verse>
<line>குன்றில் நின்று, வான் இருந்து, நீள் கடற் கிடந்து, மண்</line>
<line>ஒன்று சென்று, அது ஒன்றை உண்டு, அது ஒன்று இடந்து, பன்றியாய்</line>
<line>நன்று சென்ற நாளவற்றுள் நல் உயிர் படைத்து, அவர்க்கு</line>
<line>அன்று தேவு அமைத்து, அளித்த ஆதிதேவன் அல்லையே?</line>
<number>48</number>
</verse>

<verse>
<line>கொண்டை கொண்ட கோதை மீது தேன் உலாவு கூனி கூன்</line>
<line>உண்டை கொண்டு அரங்க ஓட்டி உள் மகிழ்ந்த நாதன் ஊர்:</line>
<line>நண்டை உண்டு நாரை பேர, வாளை பாய, நீலமே</line>
<line>அண்டை கொண்டு கெண்டை மேயும் அந் தண் நீர் அரங்கமே.</line>
<number>49</number>
</verse>

<verse>
<line>வெண் திரைக் கருங் கடல் சிவந்து வேவ, முன் ஒர் நாள்</line>
<line>திண் திறற் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்:</line>
<line>எண் திசைக் கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்,</line>
<line>வண்டு இரைத்த சோலை வேலி, மன்னு சீர் அரங்கமே.</line>
<number>50</number>
</verse>

<verse>
<line>சரங்களைத் துரந்து வில் வளைத்து, இலங்கை மன்னவன்</line>
<line>சிரங்கள் பத்து அறுத்து உதிர்த்த செல்வர் மன்னு பொநிடம்:</line>
<line>பரந்து பொன் நிரந்து நுந்தி வந்து அலைக்கும் வார் புனல்</line>
<line>அரங்கம் என்பர் நான்முகத்து அயன் பணிந்த கோயிலே.</line>
<number>51</number>
</verse>

<verse>
<line>பொற்றை உற்ற முற்றல் யானை போர் எதிர்ந்து வந்ததைப்</line>
<line>பற்றி உற்று மற்று அதன் மருப்பு ஒசித்த பாகன் ஊர்:</line>
<line>சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர்,</line>
<line>அற்ற பற்றர், சுற்றி வாழும் அந்தண் நீர் அரங்கமே.</line>
<number>52</number>
</verse>

<verse>
<line>மோடியோடு இலச்சையாய சாபம் எய்தி, முக்கணான்</line>
<line>கூடு சேனை மக்களோடு கொண்டு மண்டி வெஞ்சமத்து</line>
<line>ஓட, வாணன் ஆயிரம் கரங் கழித்த ஆதி மால்</line>
<line>பீடு கோயில், கூடு நீர் அரங்கம் என்ற பேரதே.</line>
<number>53</number>
</verse>

<verse>
<line>இலைத் தலைச் சரம் துரந்து இலங்கை கட்டழித்தவன்:</line>
<line>மலைத் தலைப் பிறந்து இழிந்து வந்து நுந்து சந்தனம்</line>
<line>குலைத்து அலைத்து இறுத்து எறிந்த குங்குமக் குழம்பினோடு</line>
<line>அலைத்து ஒழுகு காவிரி அரங்கம் மேய அண்ணலே.</line>
<number>54</number>
</verse>

<verse>
<line>மன்னு மா மலர்க் கிழத்தி வைய மங்கை மைந்தனாய்,</line>
<line>பின்னும் ஆயர் பின்னை தோள் மணம் புணர்ந்து, அது அன்றியும்,</line>
<line>உன்ன பாதம் என்ன சிந்தை மன்ன வைத்து நல்கினாய்;</line>
<line>பொன்னி சூழ் அரங்கம் மேய புண்டரீகன் அல்லையே?</line>
<number>55</number>
</verse>

<verse>
<line>இலங்கை மன்னன் ஐந்தொடு ஐந்து பைந்தலை நிலத்து உக,</line>
<line>கலங்க அன்று சென்று கொன்று, வென்றி கொண்ட வீரனே!</line>
<line>விலங்கு நூலர் வேத நாவர் நீதியான கேள்வியார்</line>
<line>வலங் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?</line>
<number>56</number>
</verse>

<verse>
<line>சங்கு தங்கு முன் கை நங்கை கொங்கை தங்கல் உற்றவன்,</line>
<line>அங்கம் மங்க, அன்று சென்று அடர்த்து எறிந்த ஆழியான்;</line>
<line>கொங்கு தங்கு வார் குழல் மடந்தைமார் குடைந்த நீர்</line>
<line>பொங்கு தண் குடந்தையுள் கிடந்த புண்டரீகனே.</line>
<number>57</number>
</verse>

<verse>
<line>மரம் கெட நடந்து அடர்த்து, மத்த யானை மத்தகத்து</line>
<line>உரம் கெடப் புடைத்து, ஒர் கொம்பு ஒசித்து உகந்த உத்தமா!</line>
<line>துரங்கம் வாய் பிளந்து மண் அளந்த பாத! வேதியர்</line>
<line>வரம் கொளக் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?</line>
<number>58</number>
</verse>

<verse>
<line>சாலி வேலி தண் வயல் தடங்கிடங்கு பூம்பொழில்</line>
<line>கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா!</line>
<line>காலநேமி வக்கரன் கரன் முரன் சிரம் அவை</line>
<line>காலனோடு கூட விற்குனித்த வில்-கை வீரனே!</line>
<number>59</number>
</verse>

<verse>
<line>செழுங் கொழும் பெரும்பணி பொழிந்திட உயர்ந்த வேய்</line>
<line>விழுந்து உலர்ந்து எழுந்து விண் புடைக்கும் வேங்கடத்துள் நின்று,</line>
<line>எழுந்திருந்து தேன் பொருந்து பூம்பொழில் தழைக் கொழும்</line>
<line>செழுந் தடங் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே?</line>
<number>60</number>
</verse>

<verse>
<line>நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலம் ஏனமாய்</line>
<line>இடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச் சுரம்</line>
<line>கடந்த கால் பரந்த காவிரிக் கரைக் குடந்தையுள்</line>
<line>கிடந்தவாறு எழுந்திருந்து பேசு; வாழி, கேசனே!</line>
<number>61</number>
</verse>

<verse>
<line>கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்</line>
<line>புரண்டு வீழ வாளை பாய் குறுங்கொடி நெடுந்தகாய்!</line>
<line>திரண்ட தோள்-இரணியன் சினங் கொள் ஆகம் ஒன்றையும்</line>
<line>இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே!</line>
<number>62</number>
</verse>

<verse>
<line>நன்று இருந்து யோக நீதி நண்ணுவார்கள் சிந்தையுள்</line>
<line>சென்று இருந்து, தீவினைகள் தீர்த்த தேவதேவனே!</line>
<line>குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும்</line>
<line>நின்று இருந்து, வெஃகணைக் கிடந்தது என்ன நீர்மையே?</line>
<number>63</number>
</verse>

<verse>
<line>நின்றது எந்தை ஊரகத்து, இருந்தது எந்தை பாடகத்து,</line>
<line>அன்று வெஃகணைக் கிடந்தது, என் இலாத முன்னெலாம்;</line>
<line>அன்று நான் பிறந்திலேன்; பிறந்த பின் மறந்திலேன்;</line>
<line>நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே.</line>
<number>64</number>
</verse>

<verse>
<line>நிற்பதும் ஒர் வெற்பகத்து; இருப்பும் விண்; கிடப்பதும்</line>
<line>நற்பெருந் திரைக் கடலுள், நான் இலாத முன்னெலாம்;</line>
<line>அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்</line>
<line>நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே.</line>
<number>65</number>
</verse>

<verse>
<line>இன்று சாதல், நின்று சாதல், அன்றி யாரும் வையகத்து,</line>
<line>ஒன்றி நின்று வாழ்தல் இன்மை கண்டும், நீசர் என்கொலோ</line>
<line>அன்று பார் அளந்த பாத-போதை உன்னி வானின்மேல்</line>
<line>சென்று சென்று தேவராய் இருக்கிலாத வண்ணமே?</line>
<number>66</number>
</verse>

<verse>
<line>சண்ட மண்டலத்தின் ஊடு சென்று, வீடு பெற்று, மேல்</line>
<line>கண்டு வீடு இலாத காதல்-இன்பம் நாளும் எய்துவீர்!</line>
<line>புண்டரீக-பாத புண்ய-கீர்த்தி நும் செவி மடுத்து</line>
<line>உண்டு, நும் உறுவினைத் துயருள் நீங்கி உய்ம்மினோ.</line>
<number>67</number>
</verse>

<verse>
<line>முத்திறத்து வாணியத்து இரண்டில் ஒன்றும் நீசர்கள்</line>
<line>மத்தராய் மயங்குகின்றது, இட்டு அதில் இறந்து போந்து;</line>
<line>எத்திறத்தும் உய்வது ஓர் உபாயம் இல்லை, உய்குறில்:</line>
<line>தொத்து இறுத்த தண் துழாய் நன் மாலை வாழ்த்தி வாழ்மினோ.</line>
<number>68</number>
</verse>

<verse>
<line>காணிலும் உருப் பொலார் செவிக்கு இனாத கீர்த்தியார்</line>
<line>பேணிலும் வரந்தர மிடுக்கு இலாத தேவரை</line>
<line>ஆணம் என்று அடைந்து வாழும் ஆதர்காள்! எம் ஆதிபாற்</line>
<line>பேணி நும் பிறப்பு எனும் பிணக்கு அறுக்ககிற்றிரே.</line>
<number>69</number>
</verse>

<verse>
<line>குந்தமோடு சூலம் வேல்கள் தோமரங்கள் தண்டு வாள்</line>
<line>பந்தமான தேவர்கள் பரந்து வானகம் உற,</line>
<line>வந்த வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்</line>
<line>அந்த அந்த ஆகுலம் அமரரே அறிவரே.</line>
<number>70</number>
</verse>

<verse>
<line>வண்டு உலாவு கோதை மாதர் காரணத்தினால் வெகுண்டு,</line>
<line>இண்ட வாணன் ஈரைஞ்ஞூறு தோள்களைத் துணித்த நாள்,</line>
<line>முண்டன் நீறன் மக்கள் வெப்பு மோடி அங்கி ஓடிடக்</line>
<line>கண்டு நாணி, வாணனுக்கு இரங்கினான் எம் மாயனே.</line>
<number>71</number>
</verse>

<verse>
<line>போதில் மங்கை பூதலக் கிழத்தி தேவி; அன்றியும்</line>
<line>போது தங்கு நான்முகன் மகன்; அவன் மகன் சொலில்,</line>
<line>மாது தங்கு கூறன் ஏறது ஊர்தி: என்று வேத நூல்</line>
<line>ஓதுகின்றது உண்மை, அல்லது இல்லை மற்று உரைக்கிலே.</line>
<number>72</number>
</verse>

<verse>
<line>மரம் பொதச் சரம் துரந்து, வாலி வீழ முன் ஒர் நாள்</line>
<line>உரம் பொதச் சரம் துரந்த உம்பர்-ஆளி எம்பிரான்</line>
<line>வரம் குறிப்பில் வைத்தவர்க்கு அலாது, வானம் ஆளிலும்</line>
<line>நிரம்பு நீடு போகம் எத்திறத்தும் யார்க்கும் இல்லையே.</line>
<number>73</number>
</verse>

<verse>
<line>அறிந்து அறிந்து வாமனன் அடியிணை வணங்கினால்,</line>
<line>செறிந்து எழுந்த ஞானமோடு செல்வமும் சிறந்திடும்;</line>
<line>மறிந்து எழுந்த தெண் திரையுள் மன்னு மாலை வாழ்த்தினால்,</line>
<line>பறிந்து எழுந்து தீவினைகள் பற்று அறுதல் பான்மையே.</line>
<number>74</number>
</verse>

<verse>
<line>ஒன்றி நின்று, நற்றவம் செய்து ஊழி ஊழிதோறு எலாம்,</line>
<line>நின்று நின்று அவன் குணங்கள் உள்ளி, உள்ளம் துயராய்ச்</line>
<line>சென்று சென்று, தேவதேவர் உம்பர் உம்பர் உம்பராய்</line>
<line>அன்றி, எங்கள் செங்கண் மாலை யாவர் காண வல்லரே?</line>
<number>75</number>
</verse>

<verse>
<line>புன் புல வழி அடைத்து அரக்கு-இலச்சினை செய்து,</line>
<line>நன் புல வழி திறந்து, ஞான நற் சுடர்கொளீஇ,</line>
<line>என்பு இல் எள்கி, நெஞ்சு உருகி, உள் கனிந்து எழுந்தது ஓர்</line>
<line>அன்பில் அன்றி, ஆழியானை யாவர் காண வல்லரே?</line>
<number>76</number>
</verse>

<verse>
<line>எட்டும் எட்டும் எட்டுமாய், ஒர் ஏழும் ஏழும் ஏழுமாய்,</line>
<line>எட்டும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதிதேவனை</line>
<line>எட்டின் ஆய பேதமோடு இறைஞ்சி நின்று, அவன் பெயர்</line>
<line>எட்டு எழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே.</line>
<number>77</number>
</verse>

<verse>
<line>சோர்வு இலாத காதலால் தொடக்கு அறா மனத்தராய்,</line>
<line>நீர் அராவணைக் கிடந்த நின்மலன் நலங் கழல்</line>
<line>ஆர்வமோடு இறைஞ்சி நின்று, அவன் பேர் எட்டு எழுத்துமே</line>
<line>வாரம் ஆக ஓதுவார்கள் வல்லர் வானம் ஆளவே.</line>
<number>78</number>
</verse>

<verse>
<line>பத்தினோடு பத்துமாய், ஒர் ஏழினோடு ஒர் ஒன்பதாய்,</line>
<line>பத்து-நால் திசைக்கண் நின்ற நாடு பெற்ற நன்மையாய்,</line>
<line>பத்தின் ஆய தோற்றமோடு ஒர் ஆற்றல் மிக்க ஆதிபால்</line>
<line>பத்தராம் அவர்க்கு அலாது, முத்தி முற்றல் ஆகுமே?</line>
<number>79</number>
</verse>

<verse>
<line>வாசி ஆகி, நேசம் இன்றி வந்து எதிர்ந்த தேனுகன்</line>
<line>நாசம் ஆகி நாள் உலப்ப, நன்மை சேர் பனங்கனிக்கு</line>
<line>வீசி மேல் நிமிர்ந்த தோளின் இல்லை ஆக்கினாய்; கழற்கு</line>
<line>ஆசை ஆம் அவர்க்கு அலால் அமரர் ஆகல் ஆகுமே?</line>
<number>80</number>
</verse>

<verse>
<line>கடைந்த பாற்கடற் கிடந்த, காலநேமியைக் கடிந்து,</line>
<line>உடைந்த வாலி தன் தனக்கு உதவ வந்து, இராமனாய்</line>
<line>மிடைந்த ஏழ் மரங்களும் அடங்க எய்து, வேங்கடம்</line>
<line>அடைந்த மால பாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ.</line>
<number>81</number>
</verse>

<verse>
<line>எத்திறத்தும் ஒத்து நின்று உயர்ந்து உயர்ந்த பெற்றியோய்!</line>
<line>முத்திறத்து மூரி நீர் அராவணைத் துயின்ற நின்</line>
<line>பத்து உறுத்த சிந்தையோடு நின்று பாசம் விட்டவர்க்கு</line>
<line>எத்திறத்தும் இன்பம் இங்கும் அங்கும் எங்கும் ஆகுமே.</line>
<number>82</number>
</verse>

<verse>
<line>மட்டு உலாவு தண் துழாய்-அலங்கலாய்! பொலன் கழல்</line>
<line>விட்டு வீழ்வு இலாத போகம் விண்ணில் நண்ணி ஏறினும்,</line>
<line>எட்டினோடு இரண்டு எனும் கயிற்றினால் மனந்தனைக்</line>
<line>கட்டி, வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே.</line>
<number>83</number>
</verse>

<verse>
<line>பின் பிறக்க வைத்தனன் கொல்? அன்றி நின்று தன் கழற்கு</line>
<line>அன்பு உறைக்க வைத்த நாள் அறிந்தனன் கொல், ஆழியான்?</line>
<line>தன் திறத்து ஒர் அன்பிலா அறிவு இலாத நாயினேன்</line>
<line>என் திறத்தில் என்கொல் எம்பிரான் குறிப்பில் வைத்ததே?</line>
<number>84</number>
</verse>

<verse>
<line>நச்சு-அரா அணைக்கிடந்த நாத! பாத-போதினில்</line>
<line>வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீ இனம்</line>
<line>மெய்த்தன் வல்லை; ஆதலால், அறிந்தனன்; நின் மாயமே</line>
<line>உய்த்து, நின் மயக்கினில் மயக்கல் என்னை, மாயனே!</line>
<number>85</number>
</verse>

<verse>
<line>சாடு சாடு பாதனே! சலம் கலந்த பொய்கைவாய்</line>
<line>ஆடு அராவின் வன்பிடர் நடம் பயின்ற நாதனே!</line>
<line>கோடு நீடு கைய! செய்ய பாதம் நாளும் உள்ளினால்</line>
<line>வீடனாக மெய் செயாத வண்ணம் என்கொல்? கண்ணனே!</line>
<number>86</number>
</verse>

<verse>
<line>நெற்றி பெற்ற கண்ணன் விண்ணின் நாதனோடு போதின்மேல்</line>
<line>நற்றவத்து நாதனோடு மற்றும் உள்ள வானவர்</line>
<line>கற்ற பெற்றியால் வணங்கு பாத! நாத! வேத! நின்</line>
<line>பற்று அலால் ஒர் பற்று மற்றது உற்றிலேன், உரைக்கிலே.</line>
<number>87</number>
</verse>

<verse>
<line>வெள்ளை வேலை வெற்பு நாட்டி வெள் எயிற்று அராவு அளாய்</line>
<line>அள்ளலாக் கடைந்த அன்று அருவரைக்கு ஓர் ஆமையாய்,</line>
<line>உள்ள நோய்கள் தீர் மருந்து வானவர்க்கு அளித்த எம்</line>
<line>வள்ளலாரை அன்றி, மற்று ஒர் தெய்வம் நான் மதிப்பனே?</line>
<number>88</number>
</verse>

<verse>
<line>பார் மிகுத்த பாரம் முன் ஒழிச்சுவான் அசுர்ருனன்</line>
<line>தேர் மிகுத்து மாயம் ஆக்கி நின்று கொன்று, வென்றிசேர்</line>
<line>மாரதர்க்கு வான் கொடுத்து, வையம் ஐவர் பாலதாம்</line>
<line>சீர் மிகுத்த நின் அலால் ஒர் தெய்வம் நான் மதிப்பனே?</line>
<number>89</number>
</verse>

<verse>
<line>குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன்;</line>
<line>நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன்;</line>
<line>புலன்கள் ஐந்தும் வென்றிலேன், பொறியிலேன், புனித! நின்</line>
<line>இலங்கு பாதம் அன்றி மற்று ஒர் பற்று இலேன் எம் ஈசனே!</line>
<number>90</number>
</verse>

<verse>
<line>பண் உலாவு மென் மொழிப் படைத் தடங்கணாள் பொருட்டு</line>
<line>எண் இலாத அரக்கரை நெருப்பினால் நெருக்கினாய்;</line>
<line>கண் அலால் ஒர் கண் இலேன்; கலந்த சுற்றம் மற்று இலேன்;</line>
<line>எண் இலாத மாய! நின்னை என்னுள் நீக்கல் என்றுமே.</line>
<number>91</number>
</verse>

<verse>
<line>விடைக் குலங்கள் ஏழ் அடர்த்து வென்றி வேற்-கண் மாதரார்</line>
<line>கடிக் கலந்த தோள் புணர்ந்த காலி ஆய! வேலை-நீர்</line>
<line>படைத்து அடைத்து அதில் கிடந்து முன் கடைந்த நிந்தனக்கு</line>
<line>அடைக்கலம் புகுந்த என்னை அஞ்சல் என்ன வேண்டுமே.</line>
<number>92</number>
</verse>

<verse>
<line>சுரும்பு அரங்கு தண் துழாய் துதைந்து அலர்ந்த பாதமே</line>
<line>விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு இரங்கு, அரங்கவாணனே!</line>
<line>கரும்பு இருந்த கட்டியே! கடல் கிடந்த கண்ணனே!</line>
<line>இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த வில் இராமனே!</line>
<number>93</number>
</verse>

<verse>
<line>ஊனில் மேய ஆவி நீ; உறக்கமோடு உணர்ச்சி நீ;</line>
<line>ஆனில் மேய ஐந்தும் நீ; அவற்றுள் நின்ர தூய்மை நீ;</line>
<line>வானினோடு மண்ணும் நீ; வளங் கடற் பயனும் நீ;</line>
<line>யானும் நீ; அது அன்றி எம்பிரானும் நீ; இராமனே!</line>
<number>94</number>
</verse>

<verse>
<line>அடக்கு அரும் புலன்கள் ஐந்து அடக்கி ஆசையாம் அவை</line>
<line>தொடக்கு அறுத்து வந்து நின் தொழிற்கண் நின்ற என்னை நீ</line>
<line>விடக் கருதி மெய்செயாது மிக்கு ஒர் ஆசை ஆக்கிலும்,</line>
<line>கடற் கிடந்த நின் அலால் ஒர் கண்ணிலேன், எம் அண்ணலே!</line>
<number>95</number>
</verse>

<verse>
<line>வரம்பு இலாத மாய மாய! வையம் ஏழும் மெய்ம்மையே</line>
<line>வரம்பு இல் ஊழி ஏத்திலும் வரம்பு இலாத கீர்த்தியாய்!</line>
<line>வரம்பு இலாத பல் பிறப்பு அறுத்து வந்து நின்கழல்</line>
<line>பொந்துமா திருந்த நீ வரம்செய், புண்டரீகனே!</line>
<number>96</number>
</verse>

<verse>
<line>வெய்ய ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்து சீர்க்</line>
<line>கைய! செய்ய போதில் மாது சேரும் மார்ப! நாதனே!</line>
<line>ஐயில் ஆய ஆக்கை-நோய் அறுத்து வந்து நின் அடைந்து</line>
<line>உய்வது ஓர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே.</line>
<number>97</number>
</verse>

<verse>
<line>மறம் துறந்து வஞ்சம் மாற்றி ஐம்புலன்கள் ஆசையும்</line>
<line>துறந்து, நின்கண் ஆசையே தொடர்ந்துநின்ற நாயினேன்;</line>
<line>பிறந்து இறந்து பேரிடர்ச் சுழிக்கணின்று நீங்குமா</line>
<line>மறந்திடாது மற்று எனக்கு மாய! நல்க வேண்டுமே.</line>
<number>98</number>
</verse>

<verse>
<line>காட்டி நான் செய் வல்வினைப் பயந்தனால் மனந்தனை</line>
<line>நாட்டி வைத்து, நல்ல-அல்ல செய்ய எண்ணினார் எனக்</line>
<line>கேட்டது அன்றி, என்னது ஆவி, பின்னை கேள்வ! நின்னொடும்</line>
<line>பூட்டி வைத்த என்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே!</line>
<number>99</number>
</verse>

<verse>
<line>பிறப்பினோடு பேரிடர்ச் சுழிக்கண் நின்றும் நீங்கும் அஃது</line>
<line>இறப்ப வைத்த ஞான நீசரைக் கரைக்கொடு ஏற்றுமா</line>
<line>பெறற்கு அரிய நின்ன பாத-பத்தி ஆன பாசனம்</line>
<line>பெறற்கு அரிய மாயனே! எனக்கு நல்க வேண்டுமே.</line>
<number>100</number>
</verse>

<verse>
<line>இரந்து உரைப்பது உண்டு, வாழி! ஏம நீர் நிறத்து அமா!</line>
<line>வரம் தரும் திருக்குறிப்பில் வைத்தது ஆகில், மன்னு சீர்</line>
<line>பரந்த சிந்தை ஒன்றிநின்று நின்ன பாத-பங்கயம்</line>
<line>நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே.</line>
<number>101</number>
</verse>

<verse>
<line>விள்வு இலாத காதலால் விளங்கு பாத-போதில் வைத்து</line>
<line>உள்ளுவேனது ஊன நோய் ஒழிக்குமா தெழிக்கு நீர்ப்</line>
<line>பள்ளி மாய! பன்றி ஆய வென்றி வீர! குன்றினால்</line>
<line>துள்ளுநீர் வரம்பு செய்த தோன்றல்! ஒன்று சொல்லிடே.</line>
<number>102</number>
</verse>

<verse>
<line>திருக் கலந்து சேரும் மார்ப! தேவதேவ தேவனே!</line>
<line>இருக் கலந்த வேத நீதி ஆகி நின்ற நின்மலா!</line>
<line>கருக் கலந்த காளமேக மேனி ஆய! நின் பெயர்</line>
<line>உருக் கலந்து ஒழிவிலாது உரைக்குமாறு உரைசெயே.</line>
<number>103</number>
</verse>

<verse>
<line>கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை</line>
<line>இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே!</line>
<line>கிடந்து இருந்து நின்று இயங்கு போதும், நின்ன பொற்கழல்</line>
<line>தொடர்ந்து மீள்வு இலாதது ஒர் தொடர்ச்சி நல்க வேண்டுமே.</line>
<number>104</number>
</verse>

<verse>
<line>மண்ணை உண்டு உமிழ்ந்து, பின் இரந்து கொண்டு அளந்து, மண்</line>
<line>கண்ணுள் அல்லது இல்லை என்று வென்ற காலம் ஆயினாய்!</line>
<line>பண்ணை வென்ற இன்சொல் மங்கை கொங்கை தங்கு பங்கயக்</line>
<line>கண்ண! நின்ன வண்ணம் அல்லது இல்லை எண்ணும் வண்ணமே.</line>
<number>105</number>
</verse>

<verse>
<line>கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட, அன்று</line>
<line>அறுத்த ஆழி சங்கு தண்டு வில்லும் வாளும் ஏந்தினாய்!</line>
<line>தொறுக் கலந்த ஊனம் அஃது ஒழிக்க, அன்று, குன்றம் முன்</line>
<line>பொறுத்த நின் புகழ்க்கு அலால், ஒர் நேசம் இல்லை, நெஞ்சமே!</line>
<number>106</number>
</verse>

<verse>
<line>காய் சினத்த காசி மன்னன், வக்கரன், பவுண்டிரன்,</line>
<line>மாசினத்த மாலி, மான் சுமாலி, கேசி, தேனுகன்:</line>
<line>நாசம் உற்று வீழ, நாள் கவர்ந்த நின் கழற்கு அலால்,</line>
<line>நேச பாசம் எத் திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே!</line>
<number>107</number>
</verse>

<verse>
<line>கேடு இல் சீர் வரத்தினாய்க் கெடும் வரத்து அயன் அரன்</line>
<line>நாடினோடு நாட்டம்-ஆயிரத்தன் நாடு நண்ணினும்,</line>
<line>வீடது ஆன போகம் எய்தி வீற்றிருந்த போதிலும்,</line>
<line>கூடும் ஆசை அல்லது ஒன்று கொள்வனோ குறிப்பிலே?</line>
<number>108</number>
</verse>

<verse>
<line>சுருக்குவாரை இன்றியே சுருங்கினாய், சுருக்கியும்</line>
<line>பெருக்குவாரை இன்றியே பெருக்க மெய்து பெற்றியோய்!</line>
<line>செருக்குவார்கள் தீக்குணங்கள் தீர்த்த தேவதேவன் என்று</line>
<line>இருக்கு வாய் முனிக் கணங்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.</line>
<number>109</number>
</verse>

<verse>
<line>தூயனாயும் அன்றியும், சுரும்பு உலாவு தண் துழாய்</line>
<line>மாய! நின்னை நாயினேன் வணங்கி வாழ்த்தும் ஈதெலாம்</line>
<line>நீயும் நின் குறிப்பினிற் பொறுத்து நல்கு, வேலை-நீர்ப்</line>
<line>பாயலோடு பத்தர் சித்தம் மேய வேலை வண்ணனே!</line>
<number>110</number>
</verse>

<verse>
<line>வைது நின்னை வல்லவா பழித்தவர்க்கும், மாறில் போர்</line>
<line>செய்து நின்ன செற்றத் தீயில் வெந்தவர்க்கும், வந்து உனை</line>
<line>எய்தல் ஆகும் என்பர்; ஆதலால், எம் மாய! நாயினேன்</line>
<line>செய்த குற்றம் நற்றமாகவே கொள், ஞால-நாதனே!</line>
<number>111</number>
</verse>

<verse>
<line>வாள்கள் ஆகி நாள்கள் செல்ல நோய்மை குன்றி மூப்பு எய்தி</line>
<line>மாளும் நாள் அது: ஆதலால், வணங்கி வாழ்த்து, என் நெஞ்சமே!</line>
<line>ஆளது ஆகும் நன்மை என்று நன்குணர்ந்து, அது அன்றியும்</line>
<line>மீள்வு இலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே.</line>
<number>112</number>
</verse>

<verse>
<line>சலம் கலந்த செஞ்சடைக் கறுத்த கண்டன் வெண்தலைப்</line>
<line>புலன் கலங்க உண்ட பாதகத்தன் வன் துயர் கெட,</line>
<line>அலங்கல் மார்வில் வாச நீர் கொடுத்தவன் அடுத்த சீர்</line>
<line>நலங்கொள் மாலை நண்ணும் வண்ணம் எண்ணு; வாழி; நெஞ்சமே.</line>
<number>113</number>
</verse>

<verse>
<line>ஈனமாய எட்டும் நீக்கி, ஏதம் இன்றி மீதுபோய்</line>
<line>வானம் ஆள வல்லையேல், வணங்கி வாழ்த்து, என் நெஞ்சமே!</line>
<line>ஞானம் ஆகி, ஞாயிறு ஆகி, ஞால முற்றும், ஓர் எயிற்று</line>
<line>ஏனமாய் இடந்த மூர்த்தி எந்தை பாதம் எண்ணியே.</line>
<number>114</number>
</verse>

<verse>
<line>அத்தன் ஆகி, அன்னை ஆகி, ஆளும் எம் பிரானுமாய்,</line>
<line>ஒத்து ஒவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்,</line>
<line>முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினர்;</line>
<line>எத்தினால் இடர்க்கடற் கிடத்தி ஏழை நெஞ்சமே?</line>
<number>115</number>
</verse>

<verse>
<line>மாறு செய்த வாள்-அரக்கன் நாள் உலப்ப, அன்று இலங்கை</line>
<line>நீறு செய்து, சென்று கொன்று, வென்றி கொண்ட வீரனார்</line>
<line>வேறு செய்து தம்முள் என்னை வைத்திடாமையால், நமன்</line>
<line>கூறுசெய்து கொண்டு இறந்த குற்றம் எண்ண வல்லனே?</line>
<number>116</number>
</verse>

<verse>
<line>அச்சம் நோயொடு அல்லல் பல் பிறப்பு அவாய மூப்பு இவை:</line>
<line>வைத்த சிந்தை, வைத்த ஆக்கை மாற்றி, வானில் ஏற்றுவான்:</line>
<line>அச்சுதன் அனந்த கீர்த்தி; ஆதி அந்தம் இல்லவன்;</line>
<line>நச்சு நாகனைக் கிடந்த நாதன்; வேத கீதனே.</line>
<number>117</number>
</verse>

<verse>
<line>சொல்லினும் தொழிற்கணும் தொடக்கு அறாத அன்பினும்</line>
<line>அல்லும் நன் பகலினோடும் ஆன மாலை காலையும்</line>
<line>அல்லி நாள்-மலர்க் கிழத்தி நாத! பாத-போதினைப்</line>
<line>புல்லி உள்ளம் விளவு இலாது பூண்டு மீண்டது இல்லையே.</line>
<number>118</number>
</verse>

<verse>
<line>பொன்னி சூழ் அரங்கம் மேய பூவை-வண்ண! மாய! கேள்:</line>
<line>என்னது ஆவி என்னும் வல்வினையினுட் கொழுந்து எழுந்து</line>
<line>உன்ன பாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்</line>
<line>மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே.</line>
<number>119</number>
</verse>

<verse>
<line>இயக்கு அறாத பல் பிறப்பில் என்னை மாற்றி, இன்று வந்து</line>
<line>உயக்கொள் மேகவண்ணன் நண்ணி என்னிலாய தன்னுளே</line>
<line>மயக்கினான் தன் மன்னு சோதி; ஆதலால், என் ஆவி தான்</line>
<line>இயக்கு எலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே.</line>
<number>120</number>
<title> திருச்சந்த விருத்தம் முற்றும்.</title>
</verse>

</padiyam>


</thirumozi>

