﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>டாக்டர். இரா.நாகசாமி</author>
<title>
<line>சூரியனார் கோயில்</line>
</title>
<note>
An article from Dinamalar - Pongal Malar 
http://www.dinamalar.com/pongal2002/p1.asp 
</note>

<para>
<text>
[ இந்த கட்டுரை 2002ஆம் ஆண்டு தினமலர் பொங்கல் மலரில் வெளியிடப்பட்டது ]
</text>
</para>

<para>
<image align="left" height="200">pongal-01.gif</image>
</para>

<para>
<text>
சோழ நாட்டில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டத்தில் திருவிடைமருதூர் என்ற சிறந்த தலம் உள்ளது. இங்கு சூரியனுக்கு எடுக்கப்பட்ட கோயில் மிகப் புகழ் வாய்ந்தது. சீர்மிகு திருவாவடுதுறை மடம் ஆதீனகர்த்தாரின் கீழ் உள்ள இக்கோயிலில் வழிபாடும், திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன. சிறப்பாக கர்நாடக தேசத்திலிருந்தும், ஆந்திர தேசத்திலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.
</text>
</para> 

<para>
<text>
தை மாதம் பொங்கல் திருவிழாவை ஒட்டி, ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா, கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. சங்கராந்திப் பெருவிழா (தைப் பொங்கல்) ஆதலின் பத்து நாட்கள் அமோகமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக சூரியனார் பார்வை அளிக்கும் தெய்வம் ஆகையால் பார்வை குன்றியோரும், கண்நோய் உடையோரும் சூரியனை வேண்டி இங்கு வந்து வழிப்பட்டு உய்கின்றன. அதுமட்டுமல்ல. முழுமுதற் கடவுளாக சூரியன் இங்கே கருவறையில் அருள் பாலிக்க, இது ஒரு நவகிரக கோயிலாகவே மலர்ந்துள்ளது. மற்ற எட்டு கிரகங்களாகிய சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் (வெள்ளி), சனி, ராகு, கேது என்னும் இரு பாம்புகள் ஆகிய கிரகங்கள் சுற்றாலயங்களாக பாங்குற உள்ளன. சூரியனின் எதிரில் மண்டபத்தில் குதிரை, நிற்கிறது. பிரகஸ்பதி என்று அழைக்கப்பெறும் குரு தனியாக சிற்றாலயத்தில் இல்லாமல், சூரியனின் எதிரில் குதிரை வாகனத்தின் பின் நிற்கிறார். சுக்கிரதசை, குருதசை, சனி தசை, ராகுதசை, கேதுதசை என்றெல்லாம் பெற்றவர்கள், அந்தந்த தெய்வங்களை வேண்டி, விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து வழிபடுகின்றனர். 
</text>
</para> 

<para>
<text>
ஜோதிடத்தில் திடமான நம்பிக்கை பெரும்பாலான மக்களுக்கு இருப்பதால், அவர்கள் திரளாக இங்கு வந்து வணங்குகின்றனர். சனிபகவான் க்ஷேத்திரம், குருவின் க்ஷேத்திரம் என்றெல்லாம் தமிழ் நாட்டில் ஒன்பது க்ஷேத்திரங்கள் தனித்தனியாக உள்ளன. அங்கு மக்கள் சென்று வணங்குகின்றனர். ஆயினும் அத்தனை க்ஷேத்திரங்களையும் வழிபட்ட பயன் சூரியனார் கோயிலை வணங்கினாலே கிட்டுகிறது என மக்கள் நம்புவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் குழுமுகின்றனர். கர்ப்ப கிருகத்தில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் திகழ்கிறார். அவற்றில் தாமரை மலரை ஏந்தி நிற்கிறார். உஷா, சாயா (பிரத்யுஷா) என்ற இரு தேவியார், இருமருங்கும் நிற்கின்றனர். பெருமிதமான கோலங்கள், மூலவர் கற்சிலையாக விளங்க, வீதி உலாவாக எழுந்தருள உத்சவ மூர்த்தியும் இங்கு உள்ளது. திருவிழாக் காலங்களில், சாயை உஷை இருபுறமும் துலங்க சிறப்பாக பவனி வரும் சூரியனின் செம்மேனி திருவுருவம் மிகவும் அற்புதக் கோலமாக துலங்குகிறது. இங்கு பள்ளியறை நாச்சியாராகத் திகழ்பவள் சாயாதேவியே. உஷை என்பவர் காலை உதிப்பவள் ஆதலின் அவள் பள்ளியறை நாச்சியாக இடம் பெறவில்லை. ஒவ்வொரு கிரகங்களும் விழாத் திருமேனிகள் உண்டு. 
</text>
</para> 

<para>
<image align="right">pongal-01a.gif</image>
</para>

<para>
<text>
இச்சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு தனிப்பெரும் வரலாறே உண்டு. இக்கோயிலை கி.பி. 1110ம் ஆண்டளவில் முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான். அப்பொழுது இதை குலோத்துங்க சோழமார்தாண்ட ஆலயம் என்றே அழைத்து மகிழ்ந்தான். குலோத்துங்க சோழனின் 1110வது ஆண்டில் இக்கோயிலுக்கு நிலம் கொடுத்த செய்தியை ஒரு கல்வெட்டும், 49வது (1120)ல் மற்றொரு கல்வெட்டும் குறிக்கின்றன. இவற்றிலிருந்து இக்கோயிலைக் குலோத்துங்கன் 1110ல் கட்டினான் என்று அறியலாம். அப்போது இங்கு பிரதிஷ்டை செய்த சூரியபகவானை மார்த்தாண்டன் என்று கூறுகிறான். சூரியனை மார்த்தாண்டன் என்றும், மார்த்தாண்ட பைரவன் என்றும் கூறும் மரபு உண்டு. மார்த்தாண்ட பைரவரை எப்படி வணங்க வேண்டும்? ஏன் வணங்க வேண்டும் என்றெல்லாம் ஆகம நூல்கள் கூறுகின்றன. பெரும்போரிலோ கடுமையான எதிரிகளை வெற்றி பெறவோ விரும்புவோர் மார்த்தாண்ட பைரவரை வணங்க வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. வணங்கினால் வெற்றி நிச்சயம் என்று கூறுகின்றன. ஆதலின் இவ்வழிபாட்டுக்கு சங்கிராம விஜய வழிபாடு என்று பெயர் உள்ளது. 
</text>
</para> 

<para>
<text>
குலோத்துங்கன் இக்கோயிலை கட்டிய ஆண்டு ஒரு பெரும் போர் புரிந்தான். ஒரிசா மாநிலம் என்று நாம் இப்போது அழைக்கும் மாநிலத்தை பண்டுகலிங்கம் என்று கூறுவர். அக்கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தனது தானைத் தலைவன் கருணாகரத் தொண்டமானை ஏவி போர் புரிந்தான். குலோத்துங்கன் தான் காஞ்சியில் இருந்துகொண்டே இம்மாபெரும் வெற்றியை அடைந்ததால் கச்சி இருக்க கலிங்கம் வென்றவன் என்ற பட்டம் பெற்றான். கலிங்கப் பெரும் போரில் வெற்றி பெற வேண்டி சூரியனார் கோயிலை அவன் மார்த்தாண்டர் கோயிலாக எடுத்திருக்க வேண்டும். 
</text>
</para> 

<para>
<text>
குலோத்துங்கனின் கலிங்க வெற்றியை ஜயங்கொண்டார் கலிங்கத்துப்பரணி என்ற நூலில் பாடி இருக்கிறார். தமிழக வரலாற்றில் இந்நூல் பெரும் புகழ் பெற்றது. குலோத்துங்கனுக்கு ஒப்பரும் வெற்றியை தந்தது இச்சூரியனார் கோயில். குலோத்துங்கனின் முதல் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் தர்மமான சதுர்வேதிமங்கலம் என்றும் கோயிலின் பெயர் குலோத்துங்க சோழ மார்த்தாண்ட ஆலயம் என்றும் குறிக்கப்படுகின்றன. 
இக்கோயிலுக்கும் இக்கோயிலைச் சார்ந்த தேவஸ்தான நிலங்களுக்கும் கணக்குக் காணியை ஒரு தனிப்பட்டவருக்கு கொடுத்ததை கல்வெட்டுக் கூறுகிறது. விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயனும் கலிங்கத்தை வெற்றி கண்டான். அதன் நினைவாக சோழ மண்டலத்தில் இருந்த பல ஆலயங்களுக்கும் தானம் அளித்தான். தன்னுடைய அரண்மனைக்கு வரவேண்டிய வாரிப்பணத்தை கோயில்களுக்கு கொடுத்துவிடும்படி அவன் ஆணையிட்டான். இதைக் குறிக்கும் கல்வெட்டு பல கோயில்களில் சோழ மண்டலத்தில் இன்றும் உள்ளது. 
</text>
</para> 

<para>
<text>
அவன் இச்சூரியனாரை வணங்கி இக்கோயிலுக்கும் தானம் கொடுத்திருக்கிறான். அக்கல்வெட்டில் தான் தன்மதானச் சதுர்வேதிமங்கலம் என்று பெயர் பெற்றிருந்த இவ்வூரின் முதன் முதலில் பெயர் சூரியனார் கோயில் என்று அழைக்கப்படுவதைக் காண்கிறோம். அன்றிலிருந்து இவ்வூர் சூரியனார் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு கிருஷ்ணதேவராயாரின் பிரதானி ஒருவர் இவ்வூருக்கு நேராக வந்து, கிருஷ்ணதேவராயாரின் சார்பில், அவரது சிறப்புக்கும், வெற்றிக்குமாக சூரிய பகவானை வேண்டி நிலம் தானம் கொடுத்திருக்கிறார். இரு பெரும் பேரரசர்களான குலோத்துங்கனும், கிருஷ்ணதேவராயரும் சூரியனாகிய மார்த்தாண்டனை வணங்கி வெற்றியும் புகழும் பெற்றிருக்கின்றனர் என்றால் இதன் பெருமை கூறவும் வேண்டுமோ! இவ்வாண்டு ஜனவாரி மாதம் 11ம் தேதியன்று சூரியனாருக்கு மகோத்சவத்திற்கு கொடி ஏற்றப்படுகிறது. 17ம் தேதியன்று சூரியனாரின் திருக்கல்யாணத் திருவிழா. இப்பெரும் விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான திருவாவடுதுறை ஆதீனம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 
</text>
</para> 

<para>
<text>
கண் கொடுக்கும் கதிரவனே! நீயன்றோ புற இருளை அகற்றுபவன்! அதுபோன்று எமது அக இருளையும் அகற்றுவோனே! அஞ்சலிக்கின்றோம்! அனைத்துலகும் துயர் நீங்கி ஒளிபெறவே! என வரும் அடியார்களை கண்டு மெய்சிலிக்காதார் யாருளர்! அங்கு செல்ல இயலாதோர் மனத்தகத்தேயாகிலும் இக்கோயிலை நினைந்து வணங்கினால் வெற்றிகளும் சாந்தியும் கிட்டும் என்பதில் ஐய்யமில்லை. சங்கிராந்தியன்று இதைக் காட்டிலும் வேறென்ன வேண்டும் 
</text>
</para> 


</article>
  