﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<border>#6B8E23</border>

<title>
<line>பரமேச்சுர மஹாவராஹ விஷ்ணு கிருஹம்</line>
</title>

<author>இரா.நாகசாமி</author>
<book>மாமல்லை</book>

<para>
<text>
மாமல்லபுரம், மஹாமல்லபுரம், கடல்மல்லை, ஜனநாதபுரம், மல்லாபுரி, மஹாபலிபுரம், மாவேலிவரம், மாவலிபுரம், என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவ்வூரில் தமிழ் மக்களின் தலையாய கலைப்படைப்புகள் இருக்கின்றன. உலகின் பல பாகங்களிலிருந்தும் திரள் திரளாக மக்கள் இங்கு வந்து இக்கலைச் செல்வங்களைப் போற்றுகின்றனர். "திறனான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்ற மாக்கவி பாரதியின், அமரவாக்கின் பெருமையை, இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இவ்வூர் அமைந்துள்ள சூழ்நிலை, பார்ப்பவர்கள் மனதைப் பரவசப் படுத்தும் எழில் வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்நகரம், தொன்றுதொட்டே சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தது.
</text>
</para>

<para>
<p-title>பரமேச்சுர மஹாவராஹ விஷ்ணு கிருஹம்</p-title>
<text>
மகிஷாசுரமர்த்தினி குகையிலிருந்து தென் மேற்கில் ஆதிவராஹக் குகைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் இப்போது வழிபாடு நடந்து வருகிறது. இக்குகையின் முன்புறத்தில் பிற்காலத்தே மண்டபங்கள் எழுப்பப்பட்டுள்ளன. வழிபாட்டு நேரம் தவிர மற்றைய நேரங்களில் வாயிற்கதவு பூட்டப்பட்டிருக்கும். வெளியிலிருந்து பார்த்தால் குகைக் கோயில் என்று கூடத் தெரியாது. வழிபாடு செய்வோர் மாமல்லபுரத்திலேயே இருக்கின்றனர். அவர்களைக் கேட்டால் மனமுவந்து கோயிலைத் திறந்து காட்டுவர். உள்ளே சென்றால், குகைக் கோயில் இரண்டு அங்கணமாகக் குடைவிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். குகை, மேற்குப்புறம் பார்த்தது. நடுவிலுள்ள கருவறையில் ஆதிவராஹமூர்த்தி உள்ளது. எனவே இதை ஆதிவராஹர் கோயில் என்றழைக்கின்றனர். கல்வெட்டுகளில் "பரமேச்சுர மகாவராஹ விஷ்ணு கிருஹம்" என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளது.
</text>
</para>

<para>
<text>
இச்சிறப்பு வாய்ந்த கோயிலில் வடப்புறச் சுவரில், முன் அங்கணத்தில் சிவபிரான் கங்கைவார் சடை கரந்தாராகக் கங்காதர மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். ஆகாயத்திலிருந்து கங்கை மேலே கைகூப்பி இறங்குகிறாள். அண்ணல் நான்கு கரங்களுடன் காணப்படுகிறார். மேல் கையில் சடையைப் பிடித்துக் கங்கையைத் தாங்குகிறார். மேலிடது கரத்தில் அக்ஷமாலை உள்ளது. கீழ் வலது கரம் அபயமளிக்கிறது. இடது கரம் தொடைமீதமர்ந்து காணப்படுகிறது. வலது புறம் பாம்பு காணப்படுகிறது. இவ்வரலாற்றையே பரிபாடல்,
</text>
</para>

<para>
<verse>
<line>எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி</line>
<line>விரிசடைப் பொறை ஊழ்த்து, விழுநிகர் மலர் ஏய்ப்ப,</line>
<line>தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி</line>
<line>மணி மிடற்று, அண்ணற்கு, மதி ஆரல் பிறந்தோய்! நீ.</line>
</verse>
</para>

<para>
<text>
என்று கூறுகிறது. 
</text>
</para>

<para>
<text>
கருவறையின் முன்புறம் அடுத்துக் காணப்படுவது நாகராஜர் உருவம். தலையில் ஐந்துதலை நாகத்தோடும் இருகரங்களோடும் இது காணப்படுகிறது. அடுத்துத் திருமால் ஆழியும், சங்கமும் ஏந்தி, அபயக் கரமும், குரக்கம் சேர்த்திய கையுமாக, வழிபடுவோர் இருபுறமும் சூழக் காணப்படுகிறார். 
</text>
</para>

<para>
<text>
கருவறையின் உள்ளே ஆதிவராஹமூர்த்தி வலப்புறம் நிலமகளைத் தாங்கி நிற்கிறார்.
</text>
</para>

<para>
<verse>
<line>ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்</line>
<line>வானத்தில் அவர் முறையால் மகிழ்ந்தேத்தி வலங்கொள்ள</line>
<line>கானத்தின் கடல்மல்லை தலைசயனத் துறைகின்ற</line>
<line>ஞானத்தின் ஒளியுருவை நினைவாரென் நாயகரே.</line>
</verse>
</para>

<para>
<text>
என்று திருமங்கை மன்னன் பாடியிருப்பது இப்பெருமானையே இன்றும், வைணவர்கள், இப்பெருமானின் முன்பு, இப்பதியத்தை ஓதல் சிறந்தது எனக்கொள்வர். இப்பெருமானுக்கு இதனால் "ஞானப்பிரான்" என்ற பெயரும் ஏற்பட்டுள்ளது.
</text>
</para>

<para>
<text>
கருவறையை அடுத்து அரியரனின் சிற்பம் உள்ளது. அரியரனாகக் காட்சியளிக்கும் உருவம் நான்கு கரம் பூண்டு, அபயகரமும் தொடை மீதமர்த்திய கையுமாக விளங்குகிறார். 
</text>
</para>

<para>
<text>
அரியரன் சிற்பத்தின் மேல் பல்லவக் கிரந்த எழுத்தில்
</text>
</para>

<para>
<verse>
<line>மத்சய கூர்ம வராஹஸ்ச நாரசிம்மஸ்ச வாமணஹ</line>
<line>ராமோ ராமஸ்ச ராமாஸ்ச புத்தக் கல்கீ தசாஸ்மிருதா:</line>
</verse>
</para>

<para>
<text>
என்ற வடமொழிச் செய்யுள் ஒன்று உள்ளது. இதில் திருமாலின் பத்து அவதாரங்களும் குறிக்கப்பட்டுள்ளன. 
</text>
</para>

<para>
<verse>
<line>தேவுடை மீனமாய் ஆமையாய்</line>
<line>ஏனமாய் அரியாய்க் குறளாய்,</line>
<line>மூவுருவில் இராமனாய்க் கண்ணனாய்க்</line>
<line>கற்கியாய் முடிப்பான் கோயில்</line>
</verse>
<text>என்று பெரியாழ்வார் திருமொழி ஈண்டு நினைவிற் கொளல் தகும்.</text>
</para>

<para>
<text>
திருமாலின் பத்து அவதாரங்களில் புத்தரும் ஒருவராக இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பாகும். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், தேவாரத் திருப்பதிகங்களின் தோற்றத்தின் பின்னர் பொளத்தமதம் குன்றத் தொடங்கியது என்று சில வரலாற்று ஆசிரியர் குறிப்பர். ஆனால் இங்கு புத்தரும் திருமாலின் அவதாரமாகவே கருதப்படுவதிலிருந்து அக்காலத்து மக்களின் பெரும் பண்பு புலனாகிறது. அதற்கு எதிரில் தரையில் பல்லவக் கிரந்த எழுத்தில் சிவபிரானின் புகழ்பாடும் செய்யுள் உள்ளது.  
</text>

<!--
<sanskrit-verse>
<line>धिक्तेषां धिक्तेषां पुनरपि धिक् धिक् धिगस्तु धिक्तेषां ।</line>
<line>येषां वसति हृदये कुपथगतिविमोक्षको रुद्रः ॥</line>
</sanskrit-verse>
-->

</para>

<para>
<text>
அடுத்துள்ள கீழைச் சுவற்றில் கொற்றவையின் உருவைக் காண்கிறோம். எண்கரம் பூண்டு எழில் மேனியாய் விளங்கும் இமயக் குமரியின் வலது கரங்களில், ஆழி, கத்தி, மணி,கபாலம் என்ற படைகள் காணப்படுகின்றன. இடது கரங்களில் சங்கம், கேடயம்,வில், கிளி ஆகியவை காணப்படுகின்றன.தேவி கானத்தெருமை கருந்தலை மேல் நிற்கிறாள். திருமாலுக்கு இளையவளாகிய கொற்றவையை இளங்கோவடிகள்;
</text>
</para>

<para>
<verse>
<line>மதியின் வெண்தோடு சூடுஞ்சென்னி</line>
<line>நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்</line>
<line>பவள வாய்ச்சி தவளவாய் நகைச்சி</line>
<line>நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து </line>
<line>அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்</line>
<line>துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி</line>
<line>வளையுடைக் கையிற் சூல மேந்தி</line>
<line>கரியின் உரிவை போர்த்தணங்காகிய</line>
<line>அரியின் உரிவை மேகலை யாட்டி</line>
<line>சிலம்பும் கழலும் புலம்புஞ்சீரடி</line>
<line>வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை</line>
<line>இரண்டு வேறுருவில் திரண்டதோள் அவுணன்</line>
<line>தலைமிசை நின்ற தையல்............"</line>
</verse>
</para>

<para>
<text>
எனப் போற்றுகிறார். காலடியில் இருபுறமும் வீரர் இருவர் வெற்றித் தெய்வமாம் கொற்றவையை வழிபட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு அப்பால் காவற்பெண்கள் காணப்படுகின்றனர். தேவியின் வலப்புறமுள்ள பெண் கையில் கத்தியும், இடக்கையில் கேடயமும் கொண்டு விளங்குகிறாள். இடப்புறம் உள்ளவள் நீண்ட வில்லைக் கையில் தாங்கி நிற்கிறாள். மேலே இருபுறமும் கணங்கள் உள்ளன. அப்பால் செங்கண் அரியும், கரியதிரிக் கோட்டு கலையும் காணப்படுகின்றன. இவை இரண்டும் கொற்றவையின் சின்னங்களாகச் சங்ககாலத்தில் இருந்தே தமிழகத்தில் சிறப்புற்றிருந்தன. 
</text>
</para>

<para>
<text>
கொற்றவையின் அழகையும், ஏற்றத்தையும் கண்டு, அடுத்துத் தென்புறச் சுவரில் மஹேந்திரனின் உருவைக் காணலாம். அவரின் இரு பெண்டுகளும் இடப்புறம் நிற்கின்றனர். தன் தேவியை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையினால் ஆலயத்தைச் சுட்டிக்காட்டும் மஹேந்திர பல்லவனின் தோற்றமும், அவனுடைய ஆடை அணிகலன்களின் அழகும் ஒப்பற்ற பேரரசன் என்ற நிலையை எடுத்துக் காட்டும் வகையில் உள்ளன. இதன் மேல் "மஹேந்திரப் போத்ராதிராஜன்"
 என்று பல்லவக் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்து நான்முகனின் சிற்பம் உள்ளது.
</text>
</para>

<para>
<text>
இக்கோயிலின் சிறப்பான அம்சங்களை சுருங்கச்சொன்னால்:  மாமல்லபுரத்தில் பல்லவர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட பல குகைக் கோயில்களில்,  இக்கோயில் ஒன்றில்தான் இன்னும் வழிபாடு நடைபெறுகிறது. திருமாலுக்கு ஏற்பட்டது இக்கோயில், இங்கு கங்காதரமூர்த்தி, அரியரன், கொற்றவை, நான்முகன்,  முதலிய சிற்பங்கள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  சிவபிரானின் புகழைப் போற்றும் கல்வெட்டுள்ளது.  திருமாலின் பத்து அவதாரங்களையும் குறிக்கும் கல்வெட்டு இங்குள்ளது. அதில் புத்தர்பிரானும் பத்து அவதாரங்களில் ஒருவராகக் குறிக்கப்பட்டுள்ளார். கி.பி.8-ஆம் நூற்றாண்டிலேயே புத்தர்,  திருமாலின் அவதாரமாகக் கருதப்படுவது சிறப்பாகும்.
</text>
</para>

<para>

<text>
ஆழ்வார்களும், நாயன்மார்களும் அருளிய அர்புதமான பாடல்களின் மூலம் உண்மை அரிந்து உய்வோம். "ஓம் நமோ ஹரி-ஹராய நமஹ".
</text>

<verse>
<line>அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி</line>
<line>உரைநூல் மறை உறையும் கோயில் வரைநீர்</line>
<line>கருமம் அழிப்பளிப்புக் கையது வேல் நேமி</line>
<line>உருவம் எரி கார் மேனி ஒன்று.</line>
<author>பொய்கை ஆழ்வார் அருளியது</author>
</verse>


<verse>
<line>பொன்திகழு மேனி புரிசடை அம்புண்ணியனும்</line>
<line>நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்</line>
<line>இருவரங்கத்தால் திரிவரேனும் ஒருவன்</line>
<line>ஒருவன் அங்கத்து உளன்.</line>
</verse>

<verse>
<line>தீக் கூரும் திருமேனி, ஒரு பால், மற்றை,</line>
<line> ஒரு பாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்</line>
<line>ஆக்கூரில்-தான் தோன்றி புகுவார் போல,</line>
<line>அருவினையேன் செல்வதுமே, அப்பால் எங்கும்</line>
<line>நோக்கார், ஒரு இடத்தும்; நூலும் தோலும்</line>
<line> துதைந்து இலங்கும் திருமேனி வெண்நீறு ஆடி</line>
<line>வாக்கால் மரை விரித்து, மாயம் பேசி</line>
<line> வலம்புரமே புக்கு, அங்கே மன்னினாரே</line>
<author>அப்பர் சுவாமிகள் அருளியது 6-58</author>
<number>3</number>
</verse>

<verse>
<line>சிவன் ஆகி, திசைமுகனாய், திருமால் ஆகி</line>
<line> செழுஞ் சுடர் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி,</line>
<line>புவன் ஆகி, புவனங்கள் அனைத்தும் ஆகி</line>
<line> பொன் ஆகி, மணி ஆகி, முத்தும் ஆகி,</line>
<line>பவன் ஆகி, பவனங்கள் அனைத்தும் ஆகி,</line>
<line> பசு ஏறி, திரிவான் ஓர் பவனாய், நின்ற</line>
<line>தவன் ஆய, தலையாலங்காடன்தன்னை,</line>
<line> சாராதே சால நாள் போக்கினேனே!  </line>
<author>அப்பர் சுவாமிகள் அருளியது 6-79</author>
<number>4</number>
</verse>

<verse>
<line>"ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற</line>
<line>நன்றெழில் நாரணன், நான்முகன், அரன் என்னும் இவரை</line>
<line>ஒன்றனும் மனத்து வைத்து உள்ளலும் இருபசை அறுத்து</line>
<line>நன்றென நலம் செய்வது அவனிடை நம்முடை நாளே!"</line>
<author>நம்மாழ்வார் அருளியது</author>
</verse>

</para>

</article>
