﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>தவம் செய்த தவம்</book>

<title><line>ஒலியில் உதித்த ஒளி</line></title>

<para>
<image display="half" float="floatleft" caption="அப்பர்சுவாமிகள்">images/appar.jpg</image>
<text>
எங்கும் கார் இருள். இரவின் பின் யாமம். உலகே இருண்டு எல்லா உணர்வுகளும் அடங்கி உயிர்துடிப்பு மட்டும் கேட்டுக்கொண்டிருப்பது போல் பிரமை. அந்த நிசப்தமான நிலையில் மெல்லமெல்ல அடிகள் எடுத்துவைக்கும் ஒலி. இனம் தெரியாத ஓர் உணர்வு அலை எழுந்தது. அந்த அலையை அதிகரிக்கச் செய்வது போன்ற ராகத்தில், ராகம் என்று சொல்வதைக் காட்டிலும் மெல்லிய பண்ணில்  "உன்னடிக்கே போதுகின்றேன்" என்ற பாடல் ஒலி மெல்லத் தேய்ந்து உள்ளே செல்கின்றது. அவ்வொலி திடீரென நின்றதை உணர்ந்தேன். அதே சமயம் ஒரு பேரொளி வெளிப்பட்டது. இருளை ஒளி மயமாக்கும் அவ்வொளி உள்ளத்துள் வெளிப்பட்டது. என் மனத்தில் மட்டும்தான் இப்படித் தோன்றியதோ எனச் சுற்றிப் பார்த்தேன். என்போல் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு நின்று கொண்டிருப்பதை கண்டேன். அங்கு ஆண்கள் இருந்தனர். ஏராளமான பெண்கள் இருந்தனர். இளம் சிறார்கள் இருந்தனர். அத்துணை பேரும் கூப்பிய கையராய் அதே உணர்வில் அவ்வொளியைக் காண்பதைக் கண்டேன்.
</text>
</para>

<para>
<p-title>திருப்புகலூர் ஆலயத்தில்</p-title>
<text>
சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று தஞ்சை மாவட்டம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் ஆலயத்தில் அப்பர் பெருமான் முக்தியடைந்ததைக் காட்டும் திருவிழாவில் தான் இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. "புண்ணியா! உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே" என்று அப்பர் பெருமான் பாடிக்கொண்டே சிவமாகிய பெருவொளியில் ஐக்கியமானதைச் சித்தரிக்கும் காட்சி. அப்பர் திருவுருவப் படிமத்தை அலங்கரித்து அவர் பாடிய பத்து இறுதிப் பாடல்களைப் பாடிக்கொண்டே கர்ப்பக்கிருஹத்துக்குள் சென்று பரமனுடன் ஒன்றாவதைத் தீபாராதனையால் பின்னிரவு 3.30 மணியளவில் காட்டும் இந்த விழா அண்டுதோரும் மிகச் சிறப்பாக நடத்தப்படுகிறது. இக் காட்சியைச் சொல்லால் வடிக்கவொண்ணாது. அந்த நேரத்தில் திருப்புகலூர் கோயிலின் உள்ளிருந்து காண வேண்டும். வாழ்கையில் ஒவ்வொரு கணமும் நம்முணர்வில் அக்காட்சி நிலைத்து நிற்கும். பக்தியின் உன்னத சிகரம் அப்பர் பெருமானின் விழாவை ஒவ்வொருவரும் சித்திரை மாதம் சதையத்தன்று அங்கு சென்று காணுதல் வேண்டும்.
</text>
</para>

<para>
<p-title>அப்பர் திருமேனி</p-title>
<text>
எவ்வளவு காலமாக இவ்விழா இங்கு நடைபெறுகிறது. என எண்ணத் தோன்றியது. வரலாற்றில் ஈடுபாடு கொண்ட நான் கல்வெட்டைத் தேடினேன். சிவபக்தியில் சிறந்தவனாக "சிவபாதசேகரன்" என்று மக்களால் போற்றபட்டு உலகமே வியக்கும் ஒப்பரும் கோயிலைத் தோற்றிவித்தானே! இராஜராஜ சோழப் பெருமன்னன், அவன் காலத்துக்கும் முன்பிருந்தே திருப்புகலூர்க் கோயிலில் சித்திரை சதைய விழா நடைபெற்று வருகிறது என்று அவ்வூர் கல்வெட்டிலிருந்து அறிந்தேன். ஆம் இப்பொழுதும் திருவிழாவில் எடுத்து வரப்படும் அப்பர் சுவாமிகளின் செப்புத்திருமேனி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆண்டாண்டுதோறும் உலாவாக வந்த திருமேனி என்று அறிந்த போது மனம் மகிழ்ந்தது. அங்கு இராஜராஜன் காலத்தில் பொற்கோயில் சண்டேஸ்வரயோகி என்ற பெரியவர் இருந்திருக்கிறார். அவருக்கு அக்னிகுமார கிரமவித்தன் என்பது இயற்பெயர். அவர் அந்தணர் குலத்தவர். அவர் கி.பி. 1004ல் திருநாவுக்கரசு தேவருக்கு ஒவ்வொரு ஸந்தியிலும் திருவமுது படைக்கப் பொற்காசு கொடுத்ததை ஒரு கல்வெட்டு கூறுகிறது.
</text>
</para>

<para>
<p-title>இருவரும் சதய நட்சத்திரம்</p-title>
<text>
அதே முதலாம் இராஜராஜ சோழனது மற்றொரு கல்வெட்டும் எனக்கு வியப்பை அளித்தது. இராஜராஜன் பிறந்த நட்சத்திரம் சதயம். ஐப்பசி மாதம் பிறந்தான். அவனுக்கு தில்லையழகி என்று ஒரு தேவி இருந்தாள். பஞ்சவன் மஹாதேவி என்பது அவளது பட்டப்பெயர். அவள் பிறந்ததும் சதய நட்சத்திரத்தன்றுதான். அதாவது கணவன் மனைவி இருவரும் பிறந்தது சதய நட்சத்திரம் அந்த தேவி தானும் தன் கணவரும் பிறந்த சதய நட்சத்திரத்தன்று மாதந்தோறும் விசேஷ உத்ஸவமாகக் கொண்டாட விரும்பினாள். அதை ஒரு நாள் விழாவாகக் "ஏகாஹம்" கொண்டாட எட்டரை வேலி நிலம் விலைக்கு வாங்கி கோயிலுக்குக் கொடுத்தாள். அதன் வருவாயைக் கொண்டு அவ்விழா நடத்தப்பட வேண்டும் என்று ஏற்பாடு செய்தாள்.
</text>
</para>

<para>
<text>
ஏற்கெனவே இத் திருக்கோயிலில் அப்பர் சுவாமிகள் முக்தியடைந்த சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று பெரிய திருவிழா நடை பெற்று வந்தது. அந்தத் திருவிழா தவிர மற்ற மாதங்களில் தாங்கள் இருவரும் பிறந்த சதய நட்சத்திரத்தன்று விழா நடத்த வேண்டும் என்று எழுதிவைத்தாள். அதை கல்வெட்டு எப்படி கூறுகிறது பாருங்கள்.
</text>
</para>

<para>
<inscription>
<line>ராஜராஜ தேவர் மஹாதேவியார் நம்பிராட்டியார் நக்கன்</line>
<line>தில்லையழகியாரான பஞ்சவன் மாதேவியார் தாமும் ராஜராஜ</line>
<line>தேவரும் பிறந்த திருநாள் சதயந்தோறும் திருவிழா</line> 
<line>எழுந்தருளி தீர்த்தமாடி அருள வைத்து முன் சதயம் </line>
<line>தீர்த்தமாடி வரும் பெருந்திருவிழாவுக்கு இந்நம்பிராட்டியாரே</line>
<line>குடுத்த எயினங்குடி.......... சித்திரைச் சதயம் நீக்கி, நின்ற</line> 
<line>திங்களில் வந்த சதயந்தொறும் ஏகாஹம் திருவிழா</line>
<line>எழுந்தருளி தீர்த்தமாடியருள</line>
</inscription>
</para>

<para>
<text>
என்று கல்வெட்டுக் கூறுகிறது. தாங்கள் பிறந்த நட்சத்திரத்தில் மட்டுமல்லாது அப்பர் முக்தியடைந்த அதே நட்சத்திரத்தன்றும் சித்திரை மாதம் விழா சிறப்பாக நடக்கவும் அவள் வகை செய்துள்ளாள்.
</text>
</para>

<para>
<p-title>விரிவான பட்டியல்</p-title>
<text>
அந்த சதய விழாவில் என்னென்ன செய்யவேண்டும், ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்ற விரிவான ஒரு பட்டியலை போட்டு பதிவு செய்தே வைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றையாவது பார்போம். திருவிழாவுக்கு ஊர்பலிக்கு ஆறு நாழி அரிசி; இரண்டு தேங்கா; ஒரு நாழி தயிர்; எனத் தயிர்சாதம் ஊர்ப்பலியாகப் படைத்திருக்கிறார்கள். திருவிழா எழுந்தருளும் அஸ்திரதேவருக்கும், உத்ஸவதிருமேனிக்கும் அபிஷேகத்துக்கு 18 கலசம் பஞ்சகவ்யம், திருச்சுண்ணம் முதலியவற்றிற்கும் திருசுண்ணமிடிக்கும் மக்கள், "புண்யாஹம்" செய்யும் பிராமணர் ஆகியோருக்கும் பொருள் வைக்கப்பட்டது. திருவாசிகை கட்டுவானுக்கு நெல்லும் கொடுத்துள்ளனர். இதுபோல் "அஷ்டமங்கலம்" பிடிப்போருக்கும் இருந்தது. இதுபோலப் பலவற்றிற்கும் கொடுத்த அந்த சோழதேவி இந்த விழா சந்திரனும், சூரியனும் உள்ளவரையும் நடக்க வேண்டும் என்று நம்பித்தான் அந்த நிலத்தைக் கொடுத்தாள் அதை அவளே சொல்கிறாள்.
</text>
</para>

<para>
<text>
"இப்படி சதயத் திருநாள்தொறும் சந்திராதித்தவர் திருவிழா எழுந்தருளி தீர்த்தமாடியருளுவதற்கு செய்தது" என்று எழுதியே வைத்திருக்கிறாள். பாவம் இதுபோலப் பக்தியோடு தனக்குப் பின்வரும் மக்கள் காப்பாற்றுவார்கள் என்று நம்பி ஒரு டிரஸ்டாக கொடுத்ததுதான் கோயில் நிலங்கள் எல்லாம். இப்பொழுது யார் யாரோ சாப்பிடுகிறார்கள். இராஜராஜன் நினைவாகவோ அவன் தேவி நினைவாகவோ கிடையாது.
</text>
</para>

<para>
<text>
</text>
</para>

<para>
<p-title>நல்லவேளையாக நடந்துவரும் விழா</p-title>
<text>
நல்லவேளையாக அப்பர் சுவாமிகளின் திருவிழா மட்டும் எப்படியோ நடந்து வருகிறது. குலோத்துங்கச் சோழன் காலத்திலும் இவ்விழா நடந்துள்ளது. இதிலும் ஒரு குறிப்பு உள்ளது. திருப்புகலூர் அருகில் முடிகொண்ட சோழச்சதுர்வேதிமங்கலம் என்று ஒரு பகுதி இருந்தது. அவ்வூர் சபைக்குக் கணக்கு எழுதுபவர் ஒருவர் இருந்தார். அழகிய மணவாளன் என்பது அவர் பெயர். அவர் அவ்வூருக்கு கணக்கு எழுதி எழுதி கண்ணே போய்விட்டது. பாவம் அவ்வளவு வேலை. அவருக்கு நன்மை உண்டாக ஊர் ஜனங்கள் எல்லாம் சித்திரைத் திருவிழாவில் ஐந்தாம் நாள் திருவிழா சிறப்பாக அவர் பெயரால் நடக்க நிலம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு "ஒளிவளர்மடப்புறம்" என்று பெயர் வைத்தார்கள். அதை கல்வெட்டு
</text>
</para>

<para>
<inscription>
<line>அழகிய மணவாளன் எங்களூர் கணக்கெழுதி எங்களுக்காக கண் ஹானி பட்டமையில் இவனுக்கு நன்றாக என்று சித்திரை திருநாள் ஐஞ்சா நாள் திருவிழாப்புறமாக</line>
</inscription>
</para>

<para>
<text>
என்கிறது. எவ்வளவு உயர்ந்த பண்புள்ள மக்கள் அன்றிருந்தவர்கள்!
</text>
</para>

<para>
<text>
இதுபோல் எவ்வளவோ வரலாற்றுச் செய்திகளைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஒராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் ஒரு விழாவையும் அன்றிருந்த அதே திருமேனி இன்னும் உலாவாக வருவதையும் சித்திரை சதயத்தன்று பார்க்கும்போது தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி சங்கர ஜயஜய போற்றி எனக் கூறத் தோன்றியது.
</text>
</para>

</article>
