﻿<?xml version="1.0" encoding="utf-8"?>
<?xml-stylesheet type="text/xsl" href="article.xsl"?>

<article>
<author>இரா.நாகசாமி</author>
<book>தமிழ் மாலை</book>

<title><line>கூற்றாய்</line></title>

<para>
<text>
அப்பர் பெருமான் திருவதிகைக்கு அமண்குழாம் தவிர்த்து வந்து திலகவதியாரிடம் திருநீறு பெற்று ஐந்தெழுத்தை ஓதி வீரட்டானத்துள் நுழைந்து பாடிய முதல் தேவாரப் பதிகம் "கூற்றாயினவாறு" என்பதாம்,
</text>
</para>

<para>
<verse>
<line>கூற்றாயினவாறு விலக்ககிலீர்</line>
<line indend='y'>  கொடுமை பல செய்தன நானறியேன்</line>
<line>ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்</line>
<line indend='y'>  பிரியாது வணங்குவன் எப்பொழுதும்</line>
<line>தோற்றாதென் வயிற்றினகம் படியே</line> 
<line indend='y'>  குடரோடு துடக்கி முடக்கியிட</line>
<line>ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில</line>
<line indend='y'>  வீரட்டானத் துறை அம்மானே</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பாடுகிறார். அப்பர் பெருமானின் இம்முதல் பாட்டில் "கூற்றாயினவாறு விலக்ககிலீர்" எனில் என் வயிற்று சூலை நோய் கொடுங் கூற்றுப்போல் என்னை வாட்டுகிறது. அதனை பெருமானே! தாங்கள் இன்னம் அகற்றவில்லை. அது என்னால் தாங்கொணாததாய் உள்ளது. கெடிலநதியின் கரையில் உள்ள வீரட்டானத்து உரைகின்ற ஏறு ஊறும் பெருமானே, என்னால் தாங்க இயலவில்லை என வேண்டுகிறார் என, "சூலை நோய் நீக்கப் பாடிய பதிகம்" எனக் கூறுவர் அல்லவா!
</text>
</para>

<para>
<text>
இங்கு ஒரு மரபைக் காண்போம். ஞானசம்பந்தர் சீர்காழிப்பதியில் "தோடுடைய செவியன்" எனத்தனது முதல் தேவாரத்தைத் தொடங்குகிறார். இதில் "தோடு" எனில் பெண் உருவாம் அன்னையையும், "செவியன்" என்பதால் அத்தனையும் பாடி, சிவபெருமானை உமையோடு பாடுகிறார் என ஆன்றோர் கூறுவர். சைவ சித்தாந்தத்தின் உயிர் நாடி சிவபெருமான், அருள்வடிவாம் உமையோடு உடன் போந்தே உய்விப்பார் என்னும் கருத்துடன், பரம் பொருளைத்தான் தமது தொடக்கத்தில் பாடுகிறார். அதே போன்று சுந்தரமூர்த்தியும் "பித்தா" எனப் பரமனையே முதலில் விளித்து தமது முதல் தேவாரத்தில் பாடுகிறார் அல்லவா. அதன் பின்னணியில் "கூற்றாய்" என்னும் பாடலின் பொருளையும் கொள்ள முடியுமா. கொண்டால் சிறக்கும் அன்றோ?  ஆதலின் அப்பர் பெருமானின் கூற்றாயினவாறு என்னும் முதல் அடியைப் பின் வருமாறு பிரித்துப் பார்ப்போம்.
</text>
</para>

<para>
<text>
"கூற்றாய் இன ஆறு விலக்க+கில்+ஈர்" எனக்கொண்டால் பின் வரும் பொருள் பெறுகிறோம். கூற்று என்றால் எனபது "சிவபெருமான்" எனப்பொருள். சம்ஹார காரணன் ஆனதினாலே சிவனுக்கே "கூற்று" எனப்பெயர் உண்டு. புறநானூற்றுப் பாடலில் நான்கு தெய்வங்கள் கூறப்பட்டுள்ளன. கூற்று = சிவபெருமான், வாலியோன் = பலராமன், புகழ் = கண்ணன், முருகு = முருகப்பெருமான் என நால்வர் வருவதைப் காண்கிறோம். இப்பாடலில் "கூற்று" என்பது சிவபெருமானைக் குறிக்கிறது என்று அப்பாடல் வாயிலாகவே அறியலாம்.
</text>
</para>

<para>
<verse>
<line>"ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை</line>
<line>மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்</line>
<line>கடல்வளர் புரிவளை புரையும் மேனி</line>
<line>அடல்வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்</line>
<line>மண்ணுறு திருமணி புரையும் மேனி</line>
<line>விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்</line>
<line>மணி மயில் உயரிய மாறா வென்றிப்</line>
<line>பிணிமுக ஊர்தி ஒண்செய்யோனும்</line>
<line>என ஞாலம் காக்கும் கால முன்பின்</line>
<line>தோலா நல்லிசை நால்வர் உள்ளும்</line>
<line>"கூற்று" ஒத்தீயே மாற்றரும் சீற்றம்</line>
<line>வலி ஒத்தீயே வாலியோனை</line>
<line>புகழ் ஒத்தீயே இகழுநர் அடுனனை</line>
<line>முருகு ஒத்தீயே எண்ணியது முடித்தலின்"  -- புறம் 56</line>
</verse>
</para>

<para>
<text>
என நல்வரையும் தெளிவாகவே கூறுகிறது. ஆதலின் கூற்று என்பது சிவ பெருமானைக் குறிக்கும். ஆதலின் அப்பர் பெருமான் "கூற்று ஆயினவாறு" எனக் கொள்ளாமல் "கூற்றாய்" என பரமனையே விளித்து அழைக்கிறார் எனக்கொள்ளுதலே பொருந்தும். "கூற்றாய்" எனப்பிரித்த பின் உள்ளது "இன ஆறு" என்பதாம். இன ஆறு என்பது சந்தி பெற்று இனவாறு என வரும். இன ஆறு எனில் என்ன பொருள்? "இனம்" எனில் கூட்டம் என்பது பொருள்.  "ஆறு" எனில் "வழி" என்பது பொருள். அப்பர் பெருமான் சமணர் கூட்டத்தில் இருந்து அவர்வழி பின்பற்றி அதில் இருந்து விடுபட திருவதிகை வந்துள்ளார். சமணத்துறவியர் கூட்டம் கூட்டமாக அழைக்கப்படுவர். அவர்கள் கூட்டத்தை "கணம்" என்று அழைப்பர். நந்தி கணம், சிம்ஹ கணம், என்ற கணம் அவர்களின் சமய வழி. "இன+ஆறு" எனில் சமணமார்க்கம் என்பது பொருள். "விலக்ககிலீர்" என்பதில் "கில்" என்ற ஒரு இடைச்சொல் உள்ளது. "விலக்க+கில்+ஈர்" என்பது சொல் ஆக்கம். "கில்" என்ற இடைச் சொல்லுக்கு ஆற்றல், வல்லமை  என்பது பொருள்.  ஆதலின் அப்பர் பெருமான் இங்கு கூறுவது "சிபெருமானே நீரே சமணர் கூட்டத்தின் வழியிலிருந்து என்னை விலக்க ஆற்றல் உடையவர்" என வேண்டுகிறார். 
</text>
</para>

<para>
<text>
"கூற்றாய் சிவனே, நீரே என்னை சமண் மார்க்கத்திலிருந்து விலக்க வல்லீர்" எனப்பொருள் கொள்ள வேண்டும் எனத் தோன்றுகிறது. இதனால் அப்பர் பெருமானும் முதலில் சிவபெருமானைத்தான் விளிக்கிறார். ஞானசம்பந்தர் போலும், சுந்தரர் போலும் அப்பரும் முதலில் பரமனையே கூறுகிறார் எனப்பெறுகிறோம்..
</text>
</para>

<para>
<text>
இப்பாடலுக்கு பொருள் கூறும்போது, அப்பர் பெருமான் இப்பாடல் பாடிய இடத்தை சேக்கிழார் எவ்வாறு சித்தரிக்கிறார் என்றும் அறிதல் வேண்டும். திருநாவுக்கரசு சுவாமிகள் சரிதத்தில் 60 முதல் 70 வரையுள்ள பாடல்கள் இந்நிகழ்ச்சியைக் குறிக்கின்றன. அவற்றில் சில முக்கிய பகுதிகளை மட்டும் காண்போம். 
</text>
</para>

<para>
<text>
அப்பர் திருவதிகை வந்து திலகவதியாரை வணங்கி கூறுவது கீழ் வருமாறு அமைகிறது கொடுஞ்சூலை நோய் என்னை வந்தடைந்தது. இனி மயங்காது உய்ந்து கரையேறும் நெறி உரைத்தருளும் என்று கேட்கிறார். அப்பர் உய்ந்து கரை ஏறும் நெறியைக் கேட்கிறாரே ஒழிய சூலை நோயைப் போக்க வழி கேட்கவில்லை. திலகவதியார் என்ன கூறினார். சேக்கிழார் கூறுவதைப்பாருங்கள்.
</text>
</para>

<para>
<verse>
<line>கோனில் பரசமய நெறிக்குழி விழுந்து அறியாது</line>
<line>மூளும் வருந்துயர் உழந்தீர் எழுந்திரீர்</line>
</verse>
</para>

<para>
<text>
என்று தான் திலகவதியார் கூறினார்். பரசமயநெறிக் குழிவிழுந்து மூளும் துயர் உழந்தீர், எழுந்திரும் என்கிறாரே ஒழிய "சூலை நோய் உற்றனையோ அது போக பரமனை பாடு" எனக் கூறவில்லை. 
</text>
</para>

<para>
<text>
இறுதியில் அப்பர் கூற்றாயினவாறு பாடியபோது நடந்ததையும் சேக்கிழார் கூறுகிறார். அப்பாட்டைப் பாருங்கள்.
</text>
</para>

<para>
<verse>
<line>"நீற்றான் நிறைவாகிய மேனியுடன்</line>
<line indend='y'>  நிறை அன்புறு சிந்தையில் நேசம் மிக</line>
<line>ஆற்றாது மாற்றார் புரம் மாற்றிய வேதியரை</line>
<line indend='y'> மருளும் பிணி மாயை அறுத்திடுவான்</line>
<line>கூற்றாயினவாறு விலக்ககிலீர் என</line>
<line indend='y'>  நீடிய கோதில் திருப்பதிகம்</line>
<line>போற்றால் உலகேழின் வரும் துயர்</line>
<line indend='y'>  போமாறு எதிர் நின்று புகன்றனரால்"</line>
</verse>
</para>

<para>
<text>
என்று பாடுகிறார். இங்கும் தமது சூலை நோய் அகல வேண்டி அப்பர் பெருமான் பாடியதாக சேக்கிழார் கூறவில்லை. ஆனால் "மாற்றார் புரம் மாற்றிய வேதியரை" எனக் குறிப்பால் கூறி, இவர் மாற்றார் பால் இருந்து மாற்றவே வேண்டினார் என சேக்கிழார்உணர்த்தி அருளினார். இதன் பின் நடந்த நிகழ்ச்சி சூலை நீங்கியது. 
</text>
</para>

<para>
<text>
அதலின் அப்பர் "கூற்றாயின வாறு" என்ற பதிக்கத்தில் முதலிலேயே எடுத்ததும் தமது சூலை நோயின் கொடுமையைக் கூறி தம்மை காப்பாற்ற கேட்டதாக சொல்வதைக் காட்டிலும் பரமனையே பாடினார் என்று கொள்வதே அப்பரின் பக்திக்கு சிகரம் போல் அமையும் என்பதில் ஐயமில்லை. அவருக்காக மட்டும் அப்பர் கேட்டுக்கொள்ள வில்லை. ஏழு உலகின் துயர் நீங்க வேண்டினார் என சேக்கிழார் குறிப்பது இந்த மாபெரும் உண்மையையே என்பதில் சந்தேகம் இல்லை. ஆதலின் அப்பர் பெருமான் "கூற்றாய்" என்று விளித்து அமண் கூட்டத்தின் மார்க்கத்தை தவிர்த்து உலகுய்ய வேண்டிப் பாடினார் எனக்கொள்வது சிறப்பபாக அமையும் எனக் கருதுகிறேன். 
</text>
</para>

<para>
<text>
இவ்வாறு பொருள் கூறுவது மரபுக்கு ஏற்க்காதே எனக்கேட்கலாம். இப்பாடலுக்கு மிகபபழைமையான உரை எது? சேக்கிழார் பெருமான் எடுத்துரைத்தது தாமே மரபு! 
</text>
</para>

</article>

