chap8 chapter7.html chapter8.html chapter9.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 8. தொல்காப்பியமும் தமிழர் வாழ்வும்
பொருளடக்கம் | அத்தியாயம்-7 | அத்தியாயம்-9 | அகெடமி

முந்தைய அத்தியாயங்களில், தமிழ் இலக்கியங்களில் தமிழர்களின் திருமணங்கள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் கண்டோம். “களவியலும்”, “கற்பியலும்” அகத்திணையின் ஒரு பகுதி என்று உரையாசிரியர்கள் கூறுவர். இம்மரபு இன்பச்சுவையின் அடிப்படையில் நாட்டிய வழக்குக்கு ஏற்ப புனையப்படவேண்டும். அதைத்தான், தொல்காப்பியத்தில் “நாடகவழக்கிலும் உலகியல் வழக்கிலும்” என்னும் சூத்திரத்தால் குறிப்பிட்டார். “களவியலும்” நாட்டிய மரபைப்போலவே அமைக்கப்பட்டதுதான். திருமணத்துக்கு முன்னர் ஓர் ஆணும் பெண்ணும் காமவசப்பட்டு இணைவதை களவியல் பகுதியில் தொல்காப்பியம் கூறுகிறது. இதையும் ஒரு மணமாகவே தமிழ்மரபு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆயினும், இது இறுதியில் “கற்பு” விதிப்படி திருமணத்தில் முடிதல் வேண்டும். திருமணத்துக்கு முன்னர் ஓர் ஆணும் பெண்ணும் இணைதல் அறம் ஆகுமா? என்ற கேள்விக்கு, தொல்காப்பியம் அறமே என்று கூறுகிறது. ஆனால் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவேண்டும். “களவு” “கற்பில்” முடியவேண்டும் என்று விதிக்கிறது. இதை வேதம் ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது. “இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கில் காமக்கூட்டம் கூறும் காலை மறையோர் தேயத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே” என்பது சூத்திரம். மறையோர் தமது நூலில் எட்டுவகையான மணங்களைக் கூறியுள்ளனர். அவற்றில் “களவு மணமும்” ஒன்று. “மறையோர் தேயம் என்னில் என்ன எனில், மறையோர் இடத்து ஓதப்பட்ட” என்றும், “களவு என்று சொல்லப்படுகின்ற ஒழுக்கம் அறத்துக்கு அப்பாற்பட்ட நெறி அல்ல, வேத விதியாகிய தந்திர நெறி” என்று உரை ஆசிரியர் இளம்பூரணர் கூறுகிறார். கந்தர்வர் என்ற தெய்வப்பிறவிகள் ஆணும் பெண்ணுமாக எப்பொழுதும் இணை பிரியாது யாழேந்திச்செல்வர். அவர்போல் களவியலில் கூடியோர் செல்வர் என்பது சூத்திரத்தின் பொருள். இதை “கந்தர்வ மணம்” என்பர். களவியலுக்குப் பிறகு கற்பியலைத் தொல்காப்பியம் கூறுகிறது. கற்பு மணம் குறித்து தொல்காப்பிய சூத்திரத்தை ஏற்கெனவே கண்டுள்ளோம் இப்பகுதியில் வைதிக மரபில் குறிக்கப்பட்ட எட்டுவகையான மணங்களை தொல்காப்பியம் குறிக்கிறது எனவும் கண்டோம். மேலும் கற்பியலின் கீழ் நான்கு முக்கிய மரபுகளை தொல்காப்பியம் கூறுகிறது. மணவாழ்விலே தலைவனும் தலைவியும், செவிலித் தாயும் தோழியும் எவ்வாறு பேசவேண்டும் என்றும், எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும் விரிவாக தொல்காப்பியம் கூறுகிறது. எடுத்துக்காட்டாக தலைமகன் தெய்வத்தை வணங்கும்போது எவ்வாறு ஒழுகவேண்டும் என்றும், அந்தணர் திறத்தும், அறிஞர் திறத்தும் ஏனையோரிடத்தும் எவ்வாறு பழகவேண்டும் என்றும் தொல்காப்பியம் விதிக்கிறது. “ஏமுறு கடவுள் ஏத்திய மருங்கினும்... அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பில் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பினும்” இதுபோல் தலைவி எவ்வாறு பழகவேண்டும் என்றும் தாய், தோழி ஆகியோரிடம் பழகவேண்டிய மரபுகளும் குறிக்கப்பட்டுள்ளன. இந்த மரபுகள் இன்றும் பெரும்பாலான இல்லங்களில் பின்பற்றப் படுகின்றன. “மறையோர் என்போர் குலனும், குணமும் கல்வியும் உடையோராகிய அந்தணர்” என்கிறார் இளம்பூரணர். இவற்றை நாட்டிய மரபிலே அமைத்தல்வேண்டும் என்பவையே தமிழ் மக்களின் வாழ்வியல் எனலாம். இதுவே தொல்காப்பியர் நோக்கமாகும்.
பொருளடக்கம் | அத்தியாயம்-7 | அத்தியாயம்-9 | அகெடமி