chap34 chapter33.html chapter34.html chapter35.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 34. வள்ளுவரும் பதஞ்சலி முனிவரும்
பொருளடக்கம் | அத்தியாயம்-33 | அத்தியாயம்-35 | அகெடமி

திருக்குறளில் இல்லறத்துக்குப் பின் துறவறம் என்பதை வள்ளுவர் அமைத்துள்ளார். தர்ம சாஸ்திரத்திலும் இல்லறத்துக்கு அடுத்து துறவறம்தான் வைக்கப்பட்டுள்ளது. அடுத்து, துறவறத்தை வள்ளுவர் இரண்டாகப் பிரித்து, விரதம் என்றும் ஞானம் என்றும் தமது நூலை அமைத்துள்ளார். வேதமரபில் இதனை கர்ம காண்டம், ஞான காண்டம் என்று பிரித்துள்ளனர். தவம் என்பது கூடாத செயல்களை ஒதுக்கி நல்ல நெறிகளை மேற்கொண்டு கட்டுப்பாடுடன் வாழும் வாழ்க்கையாகும். இதை வடமொழியில் வானப்பிரஸ்தன் என்கிறார்கள். அதாவது, காட்டுக்குச் சென்று, கடும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து தவம் மேற்கொள்வது என்பதாகும். தவம் என்பது என்ன? சிலவற்றைச் செய்யாது ஒதுக்குதல். அதாவது, புலால் உணவு கூடாது, பொய் சொல்லக்கூடாது, சினம் கொள்ளுதல் கூடாது, இன்னா செய்தல் கூடாது, கொல்லக்கூடாது என பலவற்றையும் ஒதுக்கி, அருள் பூண்டு, தனக்கு வரும் பல இன்னல்களைப் பொறுத்து வாழ்தல் தவம் என்பதாகும். உற்றநோய் நோன்றல் பிற உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு என்கிறார் வள்ளுவர். இவை அனைத்தும் தவத்தின் மரபு ஆகும். வள்ளுவர் விரதம் என்ற பகுதியில் 9 அத்தியாயங்களாக இவற்றைக் குறித்துள்ளார். இரண்டாவதாக யோக மார்க்கம். இயமம், நியமம், ஆசனம், வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, நினைதல், சமாதி என 8 வகையாகச் சொல்லப்படும் அட்டாங்க யோக மார்க்கத்தை மனோ தத்துவ நூலாகக் கொடுத்தவர் பதஞ்சலி முனிவர். பதஞ்சலி முனிவர் கௌதம புத்தரின் காலத்துக்கும் பல நூற்றாண்டுகள் முற்பட்டவர். 2ம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு கல்வெட்டில், அஷ்டாங்கயோக தரும சக்கர பிரவர்த்தகாய நமக என்று குறிப்பிடப்பட்டிருப்பது, புத்தர் யோக மார்க்கத்தை பின்பற்றினார் என்று அறிய என்று அறிய உதவுகிறது. இக்கல்வெட்டு நாகார்ஜுன கொண்டாவில் கிடைத்த கல்வெட்டாகும். இந்திய நாட்டில் தோன்றிய எல்லா சமயங்களும் யோக மார்க்கத்தை தங்கள் சமயத்தின் அங்கமாக மேற்கொண்டுள்ளன. சைவம், வைணவம், சாக்தம், பௌத்தம், ஜைனம், சாங்கியம், மீமாம்சம், வேதாந்தம் என அத்தனை சமயங்களும் யோக மார்க்கத்தை தமது சமயத்தின் அங்கமாகக் கொண்டுள்ளன. அத்வைத மதத்தை ஸ்தாபித்த ஆதிசங்கரர் தமது சமயத்தின் அடிப்படை குறிக்கோளாக யோக மார்க்கத்தைக் கொண்டுள்ளார். அவர், தான் எழுதிய ஸ்வேதாஸ்வதர உபநிஷத்தின் பாஷ்யத்தில் பதஞ்சலி யோக மார்க்கத்தை விரித்து எழுதியுள்ளார். பொருள்கள்மீது செல்லும் ஆசையை எப்படி படிப்படியாகத் தவிர்ப்பது; ஓர் உருவில் கவனத்தை நிலை நிறுத்துதல் எவ்வாறு; அப்படியாக நிலை நிறுத்தும்போது என்னென்ன தோற்றங்கள் அகக்கண் முன் தோன்றுகின்றன; அவை எவ்வாறு படிப்படியாக மறைந்து, சிறந்த ஒளியாக, தீபம் போன்று அகக்கண்ணைத் திறக்கும் என்பதை சங்கரர் விவரிக்கிறார். அந்த நிலையே தியானம் என்றும் சமாதி என்றும் கூறுவர். அந்த நிலையில் ஆசை முற்றிலுமாக ஒழிந்து, ஆன்மா தனது இயல்பான ஆனந்த நிலையை அடைகிறது. வள்ளுவரும் தனது குறளில், ஆராஇயற்கை அவா நீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் என்கிறார். யோகம் என்பது ஏதோ ஆசனங்களில் அமர்ந்துகொண்டு மூச்சுப் பயிற்சி செய்வது மட்டுமே அல்ல. அது ஒவ்வொரு அங்கங்களையும் தூய்மை செய்து, மனதில் அவாவினை ஒழித்து தூய்மையாக்கி, அறிவை தெளிவாக்கி, மெய்யுணர்வை அறிவதே யோகம் ஆகும். யோக மார்க்கத்தைப் பின்பற்றுவோர், தெய்வங்களை புறத் தோற்றங்களிலே வழிபாடு செய்பவர்கள் அல்ல. அகத்திலே தன் இயல்புநிலையைக் காண்பவர்கள். வள்ளுவர் தமது துறவறவியலில் நிலையாமை, துறவு, மெய்யுணர்வு, அவா அறுத்தல் என்ற நான்கு பகுதிகளிலும் இந்த ஞானமரபைத்தான் பிரதிபலிக்கிறார். இவை அனைத்தின் இறுதியிலும் சொல்லப்படுவது இதுதான்: மனிதன் காமம், வெகுளி, மயக்கம் ஆகிய அவித்தைகளை (அஞ்ஞானம் அல்லது மயக்கம்) — நீக்கி ஆன்மாவின் இயற்கையை உணர்வதே, அனைத்துத் துன்பங்களையும் அகற்றும். அதன் வாயிலாக என்றென்றும் நிலைத்து நிற்கும் சுயரூபமாகிய இயற்கை நிலையை தனக்குள் — காண்பதுதான் மனிதன் இந்த வாழ்விலேயே பெறும் பேறு. அதுதான் ஜீவன் முக்தி. யாரும் கண்டிராத சொர்க்கலோகம், எங்கேயோ இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு வழிபாடு செய்வதென்பது வீடுபேறு தராது. தன் இயல்பு நிலையை தனக்குள் தானே அறிவதுதான் வீடுபேறு. பதஞ்சலி முனிவர் தமது யோக சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பல சொற்களை திருக்குறளில் பல அத்தியாயங்களுக்கு அதே வரிசையில் தலைப்பாக வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார் என்பதைக் காணலாம்.
பொருளடக்கம் | அத்தியாயம்-33 | அத்தியாயம்-35 | அகெடமி