chap29 chapter28.html chapter29.html chapter30.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 29. தமிழகம் தடம் புரண்டது 1750-1850
பொருளடக்கம் | அத்தியாயம்-28 | அத்தியாயம்-30 | அகெடமி

தமிழக வரலாற்றில் 1750முதல் 1850வரை ஏற்பட்ட மாற்றங்கள் பல வழிகளிலும் ஒரு திருப்பு முனையாக இருந்தது. ஏறக்குறைய 1730 இல் தென் தமிழ் நாடு மதுரையை தலைநகராகக்கொண்டு ஆண்ட நாயக்கர் ஆட்சியில் திகழ்ந்தது. இராணி மங்கம்மாள் ஆட்சியிலும், விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியின் கீழும் இருந்தது. நாயக்கர் ஆட்சியில் அரசரின் கீழ், நாடு பல சிறு பகுதிகளாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாளையங்கள் என்ற பெயரில் ஒரு தலைவர் கீழ் ஆளப்பட்டு வந்தன. மண்டலங்கள் சேனாபதிகள் போல் வீரர்களின் கீழ் ஆளப்பட்டன. அவர்களைப் பாளையக் காரர்கள் என்று அழைப்பர். இவர்களில் பெரும்பாலானவர்கள், வீர மறவர் குலத்தைச் சார்ந்தவர்கள். மற்றும் பலர் தெலுங்கு பேசும் நாயக்கர்களாவர். இவர்கள் தங்கள் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளைக் காக்கவும், வேளாண் குடி மக்கள் விவசாயம் செய்ய பாதுகாவலாகவும், பிறர் படை எடுப்புக்களைத் தடுக்கவும், ஏனையோர் தங்கள் தொழில்களை புரியவும், வழக்குகள் இருப்பின் தீர்க்கவும் உரிமை பெற்றிருந்தனர். இதற்காக தங்கள் பகுதி மக்களிடம் ஒரு வரி வசூலிக்கவும் இவர்கள் உரிமை பெற்றிருந்தனர். இதில் ஒரு பகுதியை மதுரை நாயக்கருக்கு ஆண்டுதோறும் வரியாகக் கொடுத்து, தாங்கள் பாதி கொண்டு ஒரு சிற்றரசரைப்போல் ஆண்டனர். தஞ்சைப் பகுதியில் மராத்தியர்களின் ஆட்சியும், வடக்கே ஆற்காட்டை தலைமையாகக் கொண்டு ஆண்ட நவாபின் கீழும் இருந்தது. ஹைதராபாத்தில் நிஜாமும், மைசூரில் ஹைதர் அலியும், திப்புவும் ஆண்டனர். சென்னையில் ஆங்கில கிழக்கிந்திய கும்பனி வியாபாரம் செய்ய உரிமை பெற்றிருந்தனர். இந்த நிலையில் நிஜாமுக்கும் ஆற்காடு நவாப்புக்கும் ஒரு சண்டை மூண்டது. நவாபு தென்நாட்டின் மீது படை எடுத்து, சேலம், கோயம்புத்தூர், திருச்சியின் ஒரு பகுதி, நெல்லை, மதுரை ஆகிகிய பகுதிகளின் மீது படை எடுத்து அவற்றைத் தனது ஆட்சியின் கீழ் காண்டுவந்தான். திருச்சி, மதுரை பகுதிகளில் நாயக்கர் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. நவாபின் ஆட்சியில் மதுரைக்குக் கொடுத்து வந்த ஒரு வரியை இப்பொழுது நவாப்பிற்குக் கொடுக்க நேர்ந்தது. வேளாண் குடி மக்கள் இதுவரையிலும் கொடுத்துவந்த வரி பல மடங்கு அதிகமாகக் கொடுக்க நேர்ந்தது. அதே சமயத்தில் மைசூரில் ஹைதர் அலியும் பின்னர் திப்பு சுல்தானும் தமிழகத்தின் மீது படை எடுத்து சேலம், கோவை, நெல்லைமீது பாய்ந்து கைப்பற்றினர். நவாப்பிற்குக் கொடுத்த வரியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக மக்கள் இவர்களுக்குக் கொடுக்க நேர்ந்தது. தன் கையிலிருந்து நழுவிய பகுதிகளை மீட்க நவாப் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கும்பனியாரின் உதவியை நாடினான். இந்தியர்களைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த மஸ்கட் என்ற துப்பாக்கி, கையெறி குண்டுகளையும், பீரங்கிகளையும் ஆங்கிலேயர் கொண்டிருந்தனர். ஆகையால் வேலும் கத்தியும், வில்லும், அம்பும் கொண்டிருந்த நம் வீரர்கள் விரைவில் தகர்த்து எறியப்பட்டனர். நெல்லைப் பகுதிவரை ஆங்கிலயேர் கைப்பற்றினர். கைப்பற்றினர். முதலில் நவாபுக்காகத்தான் கும்பனியார் படை ஏவினர். ஆனால் அதற்கான செலவுகளை நவாபு கொடுக்க இயலவில்லை. அதற்குப் பதிலாக சேலம், கோவை, திருச்சி பகுதிகளை நவாபு ஆங்கிலேயர்க்குக் கொடுத்துவிட்டான். வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிக்க வந்த வெள்ளைக்காரனுக்கு காலூன்ற ஒரு நாடே கிடைத்தது. வியாபாரம் செய்வதைக் காட்டிலும் நாட்டை ஆளுவதின் மூலமே அதிகப் பொருளும் ஒரு நாடே கிட்டியதால் வெள்ளைக்காரன் வியாபாரத்தைவிட்டு நாடாளத் தலைப்பட்டான். இவ்வாறு அடிக்கடி ஏற்பட்ட போர்களினாலும் நாட்டின் கைமாற்றத்தாலும், வரிச் சுமை தாங்காமல் வேளாண் மக்கள் திகைத்தனர். இதுவரையிலும் தங்களுடைய நிலம் என்று வாழ்ந்த தமிழ் மக்களுக்கு இடி வீழ்ந்தாற்போல் ஒரு தடுமாறிய நிலை ஏற்பட்டது. இனி நிலம் தனிப்பட்ட யாருக்கும் சொந்தம் அல்ல. ஆனால் அதில் பயிர் செய்து கொள்ள உரிமை மட்டும் அவரவர்க்கு உண்டு. அதன் விளைச்சலில் வெள்ளைக்காரன் நிர்ணயம் செய்யும் வரியைத் தவறாது கொடுக்க வேண்டும். இல்லை எனில் நிலத்தை சொந்தக்காரரிடமிருந்து பிடுங்கி வேறு ஒருவருக்குக் கொடுத்து விடுவான் என்பது அவர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. எந்த ஒரு நிலத்தை தம் முன்னோர்களெல்லாம் பரம்பரையாகக் காத்து, பண்படுத்தி விளை நிலமாக்கி வாழ்ந்தார்களோ அத்தமிழ் மண் வெள்ளைக்காரரின் மண்ணாகிவிட்டது. தமிழகம் தமிழனது அல்ல, வெள்ளைக்காரன் நிலமாக மாறிவிட்டது. தமிழன் தனது சுதந்திரத்தை இழந்த கதை இது. இதனால் மனம் உடைந்த வேளாண் குடி மக்கள் உற்ற நிலமிழந்து, ஊரிழந்து புறத்தே சென்று உயிர் வாழும் நிலை ஏற்பட்டது. பட்ட புண்ணில் முள் குத்துவதுபோலே மற்றொன்றும் வெள்ளைக்காரன் செய்தான். ஒவ்வொரு ஆண்டும் நிலத்தின்மீது இட்ட வரியை நிர்ணயிப்பது என்ற முறையைக் கொண்டுவந்தான். பெரும்பாலும் இதனால் வரிச்சுமை மேலே மேலே ஏறியதே ஒழிய, தாங்கக்கூடிய அளவில் இல்லை. இதனால் பல ஆண்டுகள் சீரான வரி வசூலிக்கும் கொள்கை போய், திணறிய பல மக்கள் தங்கள் தொழிலை கை விட்டனர். தங்கள் சொத்தை செலவு செய்து நிலத்தைப் பண்படுத்தி அதிக விளைச்சல் காட்டினால், அதற்கு அதிக வரியை கேட்டுத் தொல்லை கொடுத்தானே ஒழிய அதனால் குடியானவற்கு எந்த இலாபமும் இன்றிப் போயிற்று. இந்த நிலையில் மற்றொரு பிரச்னையும் தோன்றியது. பண்பட்ட நிலத்தில் வரி அதிகம். இதுகாறும் பயிரின்றி இருந்த நிலங்கள் ஏராளமாக இருந்தன. புன்செய்யை நன் செய்தால் வரி குறையும். ஆதலால், பலர் தங்கள் பண்பட்ட நிலத்தைவிட்டு புன்செய்யை பண் செய்ய நகர்ந்தனர். இதனால் விளைச்சலும், வரியும் மேலும் சரிந்தன. வெள்ளைக்காரர்களுக்கு மேலும் ஒரு பிரச்னை. நம் தமிழ் மொழி அவர்களுக்குத் தெரியாது. நம்முன்னோர்க்கு அவன் மொழி தெரியாது. அதனால் நிர்வாகத்தில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. நிர்வாகத்தை நடத்த வெள்ளைக்காரத்துரைக்கு தமிழ் போதிக்க கிறிஸ்துவப் பாதிரியார்கள் பயன்பட்டனர். பாதிரியார்கள் பல முனைகளிலும் பயன்பட இது ஏதுவாயிற்று. அதிகாரம் செலுத்தும் வெள்ளைக் காரத்துரைக்கு தமிழ் மொழி கற்பித்தல், தங்கள் சமயத்தை பரப்ப பல்லோரை மதம் மாற்றம் செய்தல், தமிழகத்திலிருந்த பல மரபுகளையும் இழித்தல் என்ற நிலைகள் ஏற்பட்டன. வெள்ளைக்காரத் துரைகளுக்கு சம்பளம் அதிகம். அதுபோல் அவர்களது அடியார்களுக்கும் சம்பளம் அதிகம் கொடுக்க வரிச்சுமையை மிகவும் ஏற்றினர். விவசாயம் வீழ்ந்துவிட்டது. நிலத்தை விட்டுச் சென்றோர் நிலங்களை, பிறருக்கு “பட்டா” செய்து கொடுக்கவும் துரைகள் முயன்றனர். ஆண்டாண்டு வரியை ஆய்வதா அல்லது ஒரு சில ஆண்டுகளாவது நிலையான வரியை நீட்டித்தால் விவசாயம் சிறக்குமா என்று வெள்ளைக்காரத் துரைமார்களுக்குள்ளே விவாதம் பல ஆண்டுகளாக இருந்தும் தலையாய உழு குடி மக்களின் வாழ்க்கை, சீர் குலைந்த ஒரு குழப்ப நிலையில் தமிழகம் திகைத்தது. நம் நாட்டை இழந்தனம். நம் நல் வாழ்வை இழந்தனம். பரம்பரையாக வளர்ந்த தமிழ் மரபை இழந்தனம். தடம் புரண்டு திகைத்து நின்றது தமிழகம். இதைத் தாங்கமாட்டாமல் வீர கர்ஜனை புரிந்து, “தமிழனென்று சொல்லடா, தலை நிமர்ந்து நில்லடா” என்று குரல் கொடுத்துக் கிளம்பினர் சிலர். அப்படிச் சீறியெழுந்த பாளையக்காரர்கள், பாஞ்சாலக் குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கர், மருது சகோதரர்கள், புலித் தேவன் முதலிய பாளையக்காரர்கள் அனைவரையும் துரைமார்கள், “கள்ளர்கள், கொள்ளைக்காரர்கள், கலகக்காரர்கள்” என்று தூற்றினர். பெரும்பாலான பாளையக்காரர்கள் கட்ட பொம்மனுக்கு உதவியாக இருந்தனர். துரைமார்கள் தங்கள் அசுரப் படைக் கலங்களை கொண்டு வென்று பிடித்தனர். பிடித்த மறு கணமே அவர்கள் அனைவரையும் தூக்கிலிட்டுக் கொன்றனர். “வானம் பொழியுது பூமி விளையுது உனக்கென்ன கிஸ்தி” என்று கேட்ட கட்டபொம்மனையும் தூக்கிலிட்டனர். ஆனால் அவர்கள் பொருளாதார குழப்பம் தீராது ஆண்டு முடித்தனர். விவசாயம் ஒடுங்கியது. வந்தது சுதந்திரம். முதலடியாக “சோஷலிச பேட்டர்ன் ஆஃப் சொசைடி” என்றனர். ஒருவருக்கு பதினைந்து ஏக்கர் நிலத்திற்கு மேல் இருந்தால் அதைப் பிடுங்கி அவர்களையும் அழித்தனர். “கரீபி ஹடோ” என்றனர். வேலையற்ற விவசாயிகளுக்கு மாதம் முன்னூறு ரூபாய் என்றனர். இவைகள்தான் இடைத் தரகரை பணக்காரர் ஆக்கியது. இப்பொழுது மாதம் ருபாய் 6000 ஒரு சில விவசாயிகளுக்கு கொடுப்போம் என்றனர். எங்கே பணம் என்றால் என்னை எதிர்த்துக் கேட்கிறாயா? என்கின்றனர். உழு குடி மக்களின் பிரச்னைகளை ஆராய்ந்து விஞ்ஞான முறைப்படி திட்டம் தீட்டி நிரந்தரமான வாழ்க்கைக்கு அடிகோலினால் ஒழிய, சிறு சிறு டோஸ்களால் பலன் வரும் எனத் தெரியவில்லை.
பொருளடக்கம் | அத்தியாயம்-28 | அத்தியாயம்-30 | அகெடமி