chap10 chapter9.html chapter10.html chapter11.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 10. புறத்திணை என்னும் நாடக வழக்கு
பொருளடக்கம் | அத்தியாயம்-9 | அத்தியாயம்-11 | அகெடமி

தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் அகத்திணை, களவியல், கற்பியல் ஆகிய இயல்களில் இன்பச்சுவையை முதலில் கூறி, அறம், பொருள் பற்றியவற்றை “புறத்திணை இயல்” எனும் பகுதியில் விவரிக்கிறார். வள்ளுவர் தமது திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்று இன்பத்தை இறுதியில் அமைத்துள்ளார். அது வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறநூல். ஆதலால் இன்பத்தை இறுதியில் வைத்தார். தொல்காப்பியர் நாடக வழக்கிற்கு ஏற்ப இன்பச் சுவையை முதலில் வைத்தார் என்று தோன்றுகிறது. அகத்திணையில் முதலாகிய நிலத்தில் தொடங்கி அதற்கு ஏற்ப, புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல் என்ற கற்பனை நிலையை மையமாக்கி நாடக வழக்கு என்ற சூத்திரத்தில் முடித்துள்ளார். அப்படியானால், புறத்திணையும் நாடக அமைப்பில் சேர்ந்ததா என்றால், தொல்காப்பியர் தமது நூலை அப்படித்தான் அமைத்து உள்ளார் என்பதில் ஐயம் இல்லை. புறத்திணையில் முதல் சூத்திரம் “வெட்சி தானே குறிஞ்சியது புறனே” என்பதாம். இதை உரை ஆசிரியர்கள் தெளிவாகக் குறித்துள்ளனர். அதனால் புறமும் நாடக வழக்குத்தான். புறத்திணையில் பெரும்பாலும், மன்னர்களும் குறுநில மன்னர்களும், பிறரும் எதிரிகளின்மீது படையெடுத்து வெற்றி பெறுவதும், கோட்டை கொத்தளங்களைக் கைப்பற்றுவது, யானை, குதிரைப் படைகள், தேர், காலாட்படைகளுடன் நேர்முகமாக போரிட்டு வெற்றி பெறுதலும், வெற்றியில் கொண்ட பொருள்களை தானும் கொண்டு தன் வீரர்க்கும் கொடுத்து மகிழ்தலும், அவனது தேவியின் சிறப்பும், அவளது கற்பின் பெருமையும், அவன் பாணர்களையும் ஆடல்மகளிரான விறலியர்க்கு விருந்திட்டு பொருள்களை வழங்குதலையும் பாடுகின்றன. இவை பலநிலைகளில் நடைபெறும். எடுத்துக்காட்டாக மன்னன் படை எடுப்பதற்கு முன்னர், தன் நாட்டின் எல்லைப்புறத்து உள்ள வீரர்களை மாற்றான் எல்லைக்குள் அனுப்பி, அங்குள்ள பார்ப்பனர், பெண்கள், பிணியால் பீடிக்கப்பட்டவர்கள், சந்ததி அற்றவர்கள் முதலியோரை பத்திரமான இடத்திற்குச் சென்று தங்களை காத்துக் கொள்ளச் சொல்லவேண்டும். அங்கு இருந்த பசுமாடுகளை தங்கள் நாட்டுக்கு ஓட்டிவந்து காத்தல் வேண்டும். மாற்றான் மறித்தால் அவனை வெட்டி வீழ்த்தி பசுக்களைக் கொண்டுவர வேண்டும். அது தான் அறம். அதுதான் தருமயுத்தமாகும் என்று தொல்காப்பியம் கூறுகிறது. இதை “தந்து ஓம்பல்” என்பர். இவ்வாறு வீரர் சென்று மாடு பிடித்து வருவது பல நிலைகளில் நடைபெறும். முதலில் பலவீரர்கள் ஓரிடத்திலே கூடுவர். அங்கு வெட்சிப்பூவை அணிந்து கைகோர்த்து ஒருவகை பறை கொட்டி குரல் எழுப்பி ஒரு கூத்து ஆடுவர். அவர்கள் செல்லும் முன்னே சகுனம் பார்க்க பறவையின் ஒலி கேட்பர். அவ்வொலி சாதகமாக இருந்தால் அப்போழுது ஒரு கூத்தாடுவர். அடுத்து வெற்றி வழங்குமாறு வேண்டி கொற்றவைக்கு பலி கொடுத்துக் கிளம்புவர். இதை “கொற்றவை நிலை” என்பர். பின்னர் மாற்றான் எல்லைக்குள் தொழுவத்தில் புகுந்து அங்கு காத்து நின்ற காவலரை வெட்டி வீழ்த்தி, மாடுகளை ஓட்டிவந்து தம் எல்லைக்குள் ஆரவாரத்துடன் புகுவர். அங்கு ஊரார் முன் கூத்தாடுவர். பின்னர் மாடுகளை பிறர்க்கு பிரித்துக் கொடுத்து தாமும் வைத்துக்கொள்வர். பின்னர் பெரும் விருந்துடன் ஆடல் பாடல் நிகழும். இதில் அரசன் தொடர்பு நேர்முகமாக இருக்குமானால் அதை “வேத்தியல்” என்ற கூத்துவகையில் குறிப்பர். மக்கள் மட்டும் தொடர்பு எனில் “பொது இயல்” என்று கூறுவது வழக்கம்.
பொருளடக்கம் | அத்தியாயம்-9 | அத்தியாயம்-11 | அகெடமி