chap1 aNintuRai.html chapter1.html chapter2.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 1. செந்தமிழ் நாடும் பண்பும்
பொருளடக்கம் | அறிமுகவுரை | அத்தியாயம்-2 | அகெடமி

தமிழ் எங்கு தோன்றியது. எங்கெல்லாம் பரவியது, செந்தமிழ் பண்பு எங்கு திகழ்ந்தது என்பது குறித்து பல ஆராய்ச்சிகள் நடை பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் மேலை நாட்டவர் எழுதிய கட்டுரைகளைக் காட்டி, தங்கள் முடிவுகளை வெளியிடுகிறார்கள். இந்நிலையில், தமிழ் நூல்களிலேயே என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று ஆராய்வது இந்த அத்தியாயத்தின் நோக்கம். தமிழ் நூல்களில் தொன்மையான இலக்கணமான தொல்காப்பியத்தின் மூலம் இதைக் காணலாம். ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயல்பாகத் தோன்றி, தன் பொருளை முழுமையாக வெளிப்படுத்துவது “இயற்சொல்” எனப்படும். அது தோன்றி இயற்கையாக வழங்கி வருவது என்பதால், அது தோன்றி விளங்கும் இடத்தை செந்தமிழ் நாடு என்றனர். இச்சூத்திரத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் “அதுதான் இயல்பாகிய சொல், அதுதான் திரிந்து வரும் சொல்லும், திசைக்கண் வழங்கும் சொல்லும், ஆரியர் சொல்லும் என்று அத்துணை சொல்லும், “செய்யுள் ஈட்டுவதற்கு உரிய சொற்கள்” என்று சொல்லலாம்” என்கிறார். இயல்பாகத் தோன்றிய தமிழ்தான் தமிழின் அடிப்படை சொற்கள். அவைதாம் திரிந்தும், திசைக்கண் மயங்கியும் வரும் தமிழ் சொற்களாம். இதைத் தொல்காப்பியர் தெளிவாக விளக்குகிறார். இயல்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி தம் பொருள் வழாமை இசைக்கும்சொல்லே ...................... (தொ.கா. சூ.879) என்று கூறுகிறார். எனவே எங்கு செந்தமிழ் வார்த்தைகள் இயல்பாக விளங்குகின்றவோ அதுதான் தமிழ் தோன்றிய நிலம். இதை நச்சினார்க்கினியர் வலியுறுத்தி “இயற்சொல் என்று கூறிய சொல் தாமே செந்தமிழ் நிலத்தின் கண்ணே வழங்குவதோடு பொருந்தி, தம் பொருள் வழங்கிட இசைக்கும் சொல்லே” என்கிறார். அதனால் செந்தமிழ் நிலம் எனில் இயல்தமிழ் தோன்றி வழங்கும் இடமாகும். தமிழின் இயல்பாகிய சொல் எது எனில் செந்தமிழ் நாட்டில் வழங்குவதோடு பொருந்தி தன் பொருள் கெடாமல் இசைக்கும் சொல்லே, செந்தமிழ் நிலத்தும், கொடுந்தமிழ் நிலத்தும் கேட்போருக்கு பொருள் கெடாமல் ஒலிக்கும் சொல் என்றார் நச்சினார்க்கினியர். இத்துடன் செந்தமிழ் நாடு எது என்பதையும் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். “செந்தமிழ் நிலமாவது, வைகையாற்றின் வடக்கும், மருதையாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கும் ஆகும்” என்கிறார். இதைச் சற்று கூர்ந்து கவனித்தால் வைகை மதுரையம்பதியாம் பாண்டியர் தலைநகரைக் குறிக்கும். கருவூர் என்பது சேரர்களின் தலைநகர். அதன் கிழக்கு மருவூரின் மேற்கு. மருவூர் என்பது பூம்புகாரைக் குறிக்கும். சிலப்பதிகாரத்தில் “மருவூர்பாக்கம்” என்பது பூம்புகாரின் உள்பகுதி. அது காவிரியாறு கடலில் கலக்கும் ஊர். மருதையாறு என்பது சரியாக விளங்க வில்லை. அது கொள்ளிடம் என்று இப்பொழுது கூறப்படும் ஆறாக இருக்கக்கூடும். அதன் தெற்கு கருவூர் தொடங்கி காவேரி நேர்கிழக்காக ஓடி கடலில் சங்கமம் ஆகும் பகுதியாம். காவிரிச் சமவெளியின் இருமருங்கும் வைகையின் வடக்கும் கொள்ளிடத்தின் தெற்கும் ஆன சமவெளியில் தோன்றி வழங்கியதுதான் “இயல் தமிழ் நிலம்” என்னும் பகுதியாம். பாண்டியர், சேரர், சோழர், ஆகிய மூன்று முடி மன்னர்களின் ஆட்சிப் பரப்புக்குள்ளானது என்பது தெளிவு. கருவூர் என்பது காவிரியாற்றின் கரையில் இல்லாவிடினும், ஆன்பொருணை ஆறு காவிரியில் கூடும் இடத்திற்கு அருகில் உள்ளது. கருவூரிலிருந்து பத்து கல் தொலைவில் பாண்டிக்கொடுமுடி என்னும் ஊர் உள்ளது. வடக்கிலிருந்து தெற்காக இதுவரை ஓடி வந்த காவிரியாறு, கொடுமுடியை அடைந்ததும் நேராகத் திரும்பி நேர் கிழக்காக, உறையூர், குடந்தை, மாயூரம், பூம்புகார் வரை (திருச்சி, தஞ்சை மாவட்டங்களை உள்ளடக்கி) இருமருங்கிலும் செழுமையாக்கி, கடலில் நுழைகிறது. இது முற்றும் காவிரிச் சமவெளியாகும். கொடுமுடி தொடங்கி கடலில் புகும்வரை செழுமைமிக்க காவிரிச் சமவெளியாகும். இதைத்தான் நச்சினார்க்கினியர் “செந்தமிழ் நாடு” என்று குறிக்கிறார். இங்கு தோன்றியதுதான் இயற்சொல்லாகிய “செந்தமிழ்” என்பதும், எனவே “செந்தமிழ் பண்பு” என்பது “காவிரிச் சமவெளி பண்பு” என்று கொள்வதே பொருந்தும். செந்தமிழ் நாட்டிலிருந்து தூரம் செல்லச் செல்ல, இயற்சொல் சற்றுத் திருந்தி வழங்கப்படுகிறது. இயற்சொல்லின் முதலிலோ, இடையிலோ, இறுதியிலோ, இவ்வாறு திரிந்து சொல் வழங்கும் போது அதை “திரிசொல்” என்றோ “வழக்குச் சொல்” என்றோ கூறுகிறோம். செந்தமிழ் நாட்டைச் சுற்றி பல காதம் வரை இவ்வாறு வழக்கு மொழியாக 12 நாடுகள் விளங்குகின்றன என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். அவை:
  1. பொங்கா நாடு
  2. ஒளி நாடு
  3. தென் பாண்டி நாடு
  4. குட்ட நாடு
  5. பன்றி நாடு
  6. கற்கா நாடு
  7. சீதா நாடு
  8. பூழி நாடு
  9. மலையமான் நாடு
  10. குட நாடு
  11. அருவா நாடு
  12. அருவா வட தலை
இந்நாடுகள் செந்தமிழ் நாட்டின் தென் கிழக்கிலிருந்து தொடர்ந்து ஒவ்வொன்றாக வலமாக விளங்குகின்றன. இவற்றில் பல கல்வெட்டுகளிலும் இடம் பெறுகின்றன. ஒளி நாடு, தென்பாண்டி நாடு, குட நாடு, கற்கா நாடு மலையமான் நாடு (திருக்கோயிலூர்), அருவா நாடு முதலியவை இவ்வாறு காணப்படுகின்றன. இவை ஒலி திரிந்து வழங்கினாலும், பொருள் மாறாது, வழங்குவதாலும் பெரும்பான்மை இவ்வாறு தமிழ்ச் சொற்கள் வழங்குவதால் இவையும் பொதுவாக “தமிழ்நாடு” என்று கூறப்பட்டன. இவை இவ்வாறு செந்தமிழ் நாட்டைச் சுற்றி வேங்கடம் முதல் தென்பாண்டி நாட்டின் இறுதியான குமரிவரை உள்ள பகுதி முற்றிலும் தமிழ்நாட்டுள் அடங்கும். இதனால் பொதுவாக வழங்கும் செய்யுளும் (இயல் சொல்லும்) வழங்கும் பகுதியை வட வேங்கடம் முதல் தென் குமரிவரை பரந்த பகுதி என்று கூறிய நச்சினார்க்கினியர் இந்த எல்லைகளுக்குப் புறம்பே 12 நாடுகள் உள்ளன என்றும் அங்கு அந்தந்த நாட்டில் வழக்கில் இருந்த வட்டார மொழிகள் இருந்தன என்றும் அவற்றுடன் சில தமிழ்ச் சொற்களும் இணைந்து காணப்படும் என்றும் கூருகிறார். அம்மொழியை “திசைமொழி” என்றும் கூறும் நச்சினார்க்கினியர், அங்கு பெரும்பான்மை வட்டாரமொழியும் திரிந்த தமிழ் சொல் மிகச் சிறுபான்மையாகவும் வழங்கும். அவ்வகைச் சொற்களை திசைச்சொற்கள் என்றார். இவ்வாறு எல்லைப் புறங்களிலும் 12 நாடுகள் உள்ளன என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். அவை:
  1. சிங்களம்
  2. பழம் தீவு
  3. கொல்லம்
  4. கூபம்
  5. கொங்கணம்
  6. துளுவம்
  7. குடசும்
  8. கரு நடம்
  9. கூடம்
  10. வடுகு
  11. தெலுங்கு
  12. கலிங்கம்
இவை அனைத்தும் தமிழ் நாட்டு எல்லைக்கும் புறத்தே விளங்கும் நாடுகளாம். இருப்பினும் ஒரு சிறுபான்மையாக தமிழ் இணைந்து நிற்கும். எனவே இங்கு காணப்படும் தமிழ் சொற்களை திசைச் சொற்கள் என்று தொல்காப்பியர் வழங்கியுள்ளார். இவை அனைத்தும் வரலாற்றில் அறிந்தவை தாம். இவற்றிற்கு அப்பால் வடக்கே வழங்கப்படுவதை வடசொல் என்பர். இவை பிராகிருதச் சொற்களும், சமஸ்கிருதச் சொற்களும் ஆகும். இவற்றை வடசொல் என்றும் ஆரியச்சொல் என்றும் வழங்கினர். செந்தமிழ் நாட்டில் தொடங்கிய இயற்சொல்லுடன் மேலும் மூன்று என்னும் தமிழ்ச் சொற்களைத் தான் விளக்கியபோது ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சில சொற்களைப் பட்டியல் இட்டு, இது திரிசொல், இது திசைச் சொல், இது வடசொல் என்று காட்டியுள்ளார். இதுதவிர பிற நூல்களுக்கு உரை எழுதும்போது நச்சினார்க்கினியர் இது திசைச் சொல், இது திரிசொல் என்றெல்லாம் குறிப்பதைக் காண்கிறோம். இதிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே மொழி (சொல்) ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளனர் என்பது வெளிப்படுகிறது. அதனால் தமிழ்ச்சொல் ஆராய்ச்சி என்பது வெள்ளைக்காரன் வந்து சொன்னபின் தொடங்கியது என்பது வரலாற்று உண்மை அல்ல. இது செந்தமிழின் தொடக்கத்திலிருந்து வழங்கி வரும் ஆய்வு என்பதை பிற நூல்கள் வாயிலாகவும் அறியலாம். தமிழில் ஒப்பற்ற நாடகக் காப்பியமாம் சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோ அடிகள், தமது காப்பியத்தில் வேனிற் காதையில் தொடக்கத்தில் தமிழ் எங்கு அரசு வீற்றிருந்தது என்பதைக் காட்டுகிறார். நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம் பறுத்த தண்புணல் நாட்டு மாடமதுரையும் பீடார் உறந்தையும் கலிகெழு வஞ்சியும், ஒலி புனர் புகாரும் அரசு வீற்றிருந்த உரை சால் சிறப்பின் .................... (வேனிற் காதை — வரி — 1-5) இதற்கு இரண்டு உரைகள் உள்ளன. ஒன்று அரும்பத உரை ஆசிரியர் பத்தாம் நூற்றாண்டில் எழுதியது. இரண்டாவது, அடியார்க்கு நல்லார் உரை. இங்கு அரும்பத உரை ஆசிரியர் வேங்கட மலை முதல் குமரிக்கடல் வரை, இவை தமிழை எல்லைப்படுத்தின நாடு என்றும் நகரம் என்றும் நான்கினுமாக வீற்றிருந்த மன்னன் என்று கூறியுள்ளார். அடியார்க்கு நல்லார் இங்கு சில வரலாற்றுச் செய்திகளைக் குறிக்கிறார். நெடியோன் குன்றம் என்பது வேங்கடமலை என்றும் தொடியோள் பௌவம் என்பது குமரி நதி என்றும் குறித்தவர் “இளங்கோ குமரிக் கடல்” என்று குறித்தார். ஏனெனில் இங்கு குமரி என்று ஒரு நதியும் சில நிலப்பகுதிகளும் இருந்தன. இங்கு குமரி ஆற்றிலிருந்து வடக்கே பஹ்றுளி என்ற ஆறு வரை 700 காதம்வரை நிலப்பரப்பு இருந்தது. அங்கு ஏழேழு நிலங்களாக 49 நாடுகள் இருந்தன.
  1. தெங்க நாடு ­— 7
  2. மதுரை நாடு ­— 7
  3. முன் பாலை நாடு ­— 7
  4. பின் பாலை நாடு ­— 7
  5. குன்ற நாடு ­— 7
  6. கண்கரை நாடு ­— 7
  7. குறும்பனை நாடு ­— 7
என்று 49 நாடுகள். இவற்றுடன் கொல்லமும், குமரி எனும் மலை நாடும் இருந்தன. இவை அனைத்தும் கடலில் மூழ்கின. கடலில் மூழ்கிய இப்பகுதிகளில் அக்காலத்து பல தமிழ்ச் சான்றோர்கள் இருந்தனர். அவர்கள் தமிழில் பல நூல்களை எழுதினர். அவர்களில் அகத்தியர், இறையனார், குமரவேள், முரஞ்சியூர், முடிநாகராயர், நிதியின் கிழவர் முதலிய 4,449 பேர் புலவர்கள். அவர்கள் இயற்றிய நூல்கள் அநேகம் உள்ளன. பரிபாடல்கள், முதுநாரை, முதுகுருகு, களரியாவிளை என்ற நூல்கள் அத்தனையும் கற்றும் அறிந்தும் இன்புற்ற புலவோர்கள் 4,440 ஆண்டுகள் இருந்தனர். அக்காலக் கட்டத்தில் 89 பாண்டிய மன்னர்கள் ஆண்டிருக்கிறார்கள். இவர்களில், காய்சினவழுதி (உக்ரப்பெருவழுதி) முதல் கடுங்கோன் வரை ஆண்டிருக்கிறார்கள். இவர்களில் எழுவர் கவியரங்கு ஏறினர். அவர்களில் சயகீர்த்தி என்னும் நிலந்தரு திருவில்பாண்டியன் அவையில் தொல்காப்பியர் தமது இலக்கணநூலை அரங்கேற்றினர். அவன் காலத்தில் தென் பாலி முகம் என்றிருந்தது. அதன் வட எல்லை குமரி ஆறு. இதைக் “குமரிக் கோடு” என்றழைத்தனர். அவை கடலில் மூழ்கின என்று அடியார்க்கு நல்லார் குறிக்கிறார். அக்காலத்தில் பல நூல்கள் மறைந்தன. தொல்காப்பியம் மட்டும் எஞ்சிற்று. அதற்குப்பின் வந்த நக்கீரர், இளம்பூரணார் முதலிய புலவர்கள் இதை வரலாறாகக் குறிக்கின்றனர். இதலிருந்து தொல்காப்பியம் வழங்கிய பகுதி வேங்கடம் முதல் குமரிக் கடல் வரை “தமிழ்நாடு” என்று தெளிவாகிறது. இது குறித்து இளங்கோயடிகள் வேனிற்காதையில் வேங்கடம்முதல் குமரிவரை கூறி மதுரை, வஞ்சியாகிய கருவூர், உறையூர், பூம்புகார் என்ற நான்கு நகரங்களையும் குறித்திருக்கிறார். இது நச்சினார் கூறியபடி காவிரி சமவெளியையும், அங்கு மூன்று அரசுகள் அமைந்திருந்ததையும் குறிக்கிறது என்பதை காணலாம். இதனால் இயற்சொல் விளங்கிய தமிழ் தோற்றத்துக்கும், பிற இடங்களுக்கும் பரவியதையும் உறுதி செய்கிறது. பண்டைத் தமிழ்ப் புலவர்களின் கருத்துப்படி, குமரிக்கடலின் தெற்கே பெரும் பரப்பில் இருந்த தமிழ் பகுதி கடலில் மறைந்தது என்பதும், வேங்கடத்துக்கும், குமரிக்கும் இடைப்பட்ட பகுதிதான் “தமிழ் வழங்கிய பகுதி” என்றும், காவிரிச் சமவெளியில்தான் இயற்தமிழாம் செந்தமிழ் தோன்றி வளர்ந்தது என்பதும், தமிழ் எல்லைக்கப்பால் பல வட்டார மொழிகள் இருந்திருக்கின்றன என்பதும் தெரிய வருகிறது. அப்பகுதிகளான சிங்களம், கொல்லம், கருநடம், துளுவம், கொங்கணம், வடுகு, தெலுங்கு ஆகிய நாடுகளில் அவ்வட்டார மொழிகள்தான் இருந்தன என்பதுடன், அங்கு எல்லையில் கலந்த சிறுபான்மைதான் தமிழ் என்பதும் உறுதியாகிறது. அவற்றை தமிழ்நாட்டுடன் சேர்க்க முடியாது. வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான் அதாவது 19ம் நூற்றாண்டில் இருந்துதான் திராவிட மொழி ஆராய்ச்சி என்பதே தொடங்கியது. இதை ஆராயும்போது ஒன்றை மனதில் கொள்ளவேண்டும். திராவிடம் என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல. தமிடம், தமிளம், திரமிளம், திராவிடம் என்று தமிழ்மொழியானது வடமொழியினரால் பயன்படுத்தப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு கலிங்கத்து காரவேலன் கல்வெட்டில், திரமிளசங்கம் என்று தமிழ்தான் குறிக்கப்பட்டது. நாகார்ஜுன கொண்டாவில், போதிஸ்ரீ என்ற பௌத்த பெண்மணியின் கல்வெட்டில் தமிடம் என்பது தமிழர்களைக் குறிக்கிறது. இலங்கையில் தமிழ் என்பது திரமிட என்று கூறப்படுகிறது. பிற்காலத்தும் பல வடமொழி சான்றுகளிலும் “திரமிடம்” என்ற சொல் வடமொழிச் சொல்லாகத்தான் உள்ளது. தமிழ் நாட்டின் எல்லையைத் தாண்டி உள்ள 12 நாடுகளிலும், சிங்களம், கொல்லம், கருநடம், கொங்கணம், வடுகு, தெலுங்கு ஆகிய நாடுகளில் வழங்கியது தமிழ்மொழி அல்ல. அவை பிறமொழிகளாகும். எல்லையைத் தாண்டி உள்ளே புகுந்த கலப்படத் திசைத்தமிழைத் தவிர அப்பகுதியில் விளங்கியது தமிழ் அல்ல. இக்காலத்தில் திராவிட மொழி, திராவிடப் பண்பு என்பது அந்த எல்லைப் பகுதிகளிலும் இல்லை. அதனால் இப்போதுள்ள கருத்தான திராவிட மொழி என்பதோ திராவிட பண்பு என்பதோ ஒன்றும் இல்லை. எனவே மலையாளம், கருநடம், தெலுங்கு, தமிழ் மொழிகளை திராவிட மொழிகள் என்பது பகுத்தறிவின்பால் பட வழியில்லை. இவ்வேறுபாட்டால்தான் இந்நான்கு மொழி பேசுவோரிடையேயும் உணர்வுப்பூர்வமான ஒற்றுமையைக் காண முடியவில்லை. திராவிடம் என்று சொல்வதால் தமிழின் பெருமை மங்கிவிட்டது. திசைச்சொல்லையும், வடசொல்லையும் தமிழ் செய்யுளில் பயன்படுத்தும்போது வடசொல்லில் உள்ள வர்க்க எழுத்துக்களைத் தவிர்த்து தமிழுக்கும் வடசொல்லுக்கும் பொதுவான எழுத்தைப் பயன்படுத்தவும் என்று தொல்காப்பிய சூத்திரம் கூறுகிறது. “வடசொல் கிளவி வட எழுத்தொரி இ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகுமே” என்பது தொல்காப்பிய சூத்திரம். அதாவது “ஜோதி” என்ற சொல்லை “சோதி” என்று எழுதவும். இது பாகதச் சிதைவு, ஆயினும் இம்முறையில் ஒரு சிக்கல் உண்டு. எழுத்து எனப்படுவது எதிரில் உள்ளவரிடம் சொல்வதற்கு மட்டும் பயன்படுத்துவது அல்ல. பல காதங்களுக்கு அப்பால் உள்ளவர்க்கும், பல நூற்றாண்டுகள் கழித்து படிப்போர்க்கும் அறிய உதவுவது எழுத்தால் வடித்த சொல். அங்கு “சோதி” என்ற சொல் பொருள் கொள்வதில் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும். “சோதி” என்ற சொல் “பரிசோதித்தல்” என்ற பொருளைக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு. அதே போல நாட்டியத்தில் “பாவம்” என்ற சொல் பயன்படும். இதில் முதல் எழுத்தை வலித்துச் சொன்னால்தான் பொருள் பொருந்தும். “பாவம்” என்று சாதாரணமாகப் படித்தால் பொருள் மாறுபடும். இந்த இடர்ப்பாட்டைத் தவிர்க்க தொல்காப்பியர் மற்றொரு சூத்திரத்தை கொடுத்துள்ளார் (சூத். 884) மேற்கூறிய நான்கு சொர்களையும் செய்யுளில் தொடுக்கும்போது அந்நாற்சொல்லும் தொடுக்கும் காலை வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும் விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழி தொகுத்தலும் நீட்டும் வழி நீட்டலும், குறுக்கும் வழி குறுக்கலும் நாட்டல் வலிய என்மனார் புலவர் என்கிறார். இதனால் இந்தக் குறைபாடு நீங்கிவிடும் என்று சொல்ல இயலாது. ஆயினும் திசைச் சொல்லையும், வடசொல்லையும் தமிழ்ச் செய்யுளில் நீக்கத் தேவையில்லை. பயன்படுத்தலாம் என்பது தொல்காப்பியர் கொள்கை. அதுபோல் சில இடங்களில் மந்திரங்கள் தெய்வங்களைக் குறிப்பவை ஆதலால், அப்படியே பயன்படுத்த வேண்டும். செய்யுள் யாப்புக்காக மாற்றக்கூடாது என்கிறார் தொல்காப்பியர், தொல் நெறி மொழிவயின் அஆகுநவும் மெய்நிலை மயக்கின் அஆகுநவும் மந்திரப் பொருள் வயின் அஆகுநவும் அன்றி அனைத்தும் கடப்பாடிலவே இவற்றின் வழியால் தொல்காப்பியர் விதிப்படி வடசொல்லை பயன்படுத்தக்கூடாது என்று எதுவும் இருந்திருக்கவில்லை; மந்திரங்களை தமிழ்ச் செய்யுளில் தவிர்க்க வேண்டியதில்லை; தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல்லையும், திசைச் சொல்லையும், மந்திரங்களையும் தழிழில் பயன்படுத்தலாம் என்ற பரந்த விதிகள் இருந்துள்ளன என்பதெல்லாம் தெரியவருகின்றன. ஆனால் சிலர் தங்கள் மனம் போனபடி தமிழை குறுக்கும் நோக்கு பண்டைய இலக்கண மரபுக்கு மாறுபட்டதாம். அண்மைக்காலத்தில் புதிதாக வந்துள்ள சில சொற்களைக் காணுங்கள். சமத்துவபுரம் (கருணாநிதி), சங்கமம் (கனிமொழி), சகோதரத்துவம் (ஸ்டாலின்) முதலிய சொற்களைத் தோற்றி பயன்படுத்துவது வடமொழியை வரவிடோம் என்று கடுமையாக எதிர்க்கும் அன்பர்களால்தான் என்பது வியப்பாக இருக்கிறதல்லவா? இதன் அடிப்படையில் வடசொல்லாகிய திராவிடம் என்பதை “தமிழ்” என்ற இன் சொல்லுக்குப் பதில் பயன்படுத்துகின்றனரோ என்று தோன்றுகிறது. அண்மையில் திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் “தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் “திராவிடம்” என்ற சொல்லை, பொருள் தெரியாது கண்டபடி பயன்படுத்துகின்றனர்” என்று தம் அறிக்கையில் கூறியுள்ளார். “திரு” என்று ஈராயிரம் ஆண்டுகளாக இருந்த சொல்லை “அருள்மிகு” என்றும் “அ.மி” என்ற சொல்லால் சமயச்சார்பற்ற அரசு மாற்றியமைத்தது எவ்விலக்கணத்தின்படி எனில், எமக்கு யாமே இலக்கணம் என்று அவர் குறிக்கக்கூடும். ஆய்வாளர்களுக்கு ஒரு பெரும் சிக்கல் இப்போது உள்ளது. தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பையும் தமிழ் என்ற சொல்லால் அழைப்பதா, அன்றி தமிழ் அல்லாத வடசொல்லாம் “திராவிடம்” என்ற சொல்லால் அழைப்பதா என்பதாகும். இதில் புகுந்தால் பல குழப்பங்கள் அதிகரிக்கும். எனவே இப்போதுள்ள மரபுப்படியே விட்டு விடுதல் சிறந்ததாம்.
பொருளடக்கம் | அறிமுகவுரை | அத்தியாயம்-2 | அகெடமி