கபிலைவாசகம் contents.xml about_the_book.html preface.html ஏற்றப்பாட்டுகள் கடவுள் துணை. ஸ்ரீ வேதவியாஸமஹாமுனிவர். பாண்டவர்களுக்கு உபதேசித்த. கபிலைவாசகம். சென்னை சென்னை சூளை பெரியநாயகியம்மன் அச்சுக்கூடுத்தில் பதிப்பிக்கப்பெற்றது 1923 34, ஆண்டியப்பநாயகன் தெரு, சூளை, மதராஸ்
Contents | Home

காப்பு. நேரிசை வெண்பா. தென்கயிலைத்திக்குமுதற் சீர்வானுலகுபுகழ் தென்கபிலைவாசகத்தைச் செப்பவே — முன்கை வரிவாரணமேந்தி மானேந்திபோற்றுங் கரிவாரணமுகவன் காப்பு. நூல். உத்தரபூமியில் காம்பிலிநாட்டின் கங்கைக்கு வடகரையிலோர் தெய்வநாயகபுர மென்கிற ஊரில் அந்தணராசீர்மமென்னும் அக்கராரத்தில் குடிவிளைஞ னென்றோராயனுண்டு. அந்த ஆயன் மேய்க்கின்ற பசுக்கள் நானூறைந்நூறுண்டு. அப்பசுக்களுக்குப் பெயர் காமாட்சி யென்றும், மீனாட்சி யென்றும், கமலாட்சி யென்றும், விசாலாட்சி யென்றும், வநஜாட்சி யென்றும், வடிவாம்பிகை யென்றும், அபிராமி யென்றும், சுந்தரி யென்றும், மோஹாம்பரி யென்றும், வேங்கடலட்சுமி யென்றும், ஏகவல்லி யென்றும், அமரவதி யென்றும், ஐரரவத மென்றும், சரஸ்வதி யென்றும், நர்மதா வென்றும், கோதாவிரி யென்றும், தாம்பிரவந்நி யென்றும், துங்கபத்திரி யென்றும், காவேரி யென்றும், கன்னியாகுமரி யென்றும், சொக்கநாயகி யென்றும், கமலாலய மென்றும், சுபத்திரை யென்றும், வேதவல்லி யென்றும், காராயணி யென்றும், சுப்பம்மா ளென்றும், பிரமரத்தா ளென்றும், முத்துமாரி யென்றும், மாரிமுத் தென்றும், அங்கம்மா ளென்றும், அலர்மே லென்றும், வள்ளியம்மை யென்றும், தெய்வானை யென்றும், எல்லம்மை யென்றும், நல்லம்மை யென்றும், செல்லம்மை யென்றும், அகலிகை யென்றும், தாரை யென்றும், துரோபதை யென்றும், மண்டோதரி யென்றும், சீதாதேவி யென்றும், இந்திராணி யென்றும், பூமிதேவி யென்றும், ரம்பா வென்றும், ஊர்வசி யென்றும், திலோத்தமை யென்றும், மேனகை யென்றும், திரிசடை யென்றும், அஞ்சுக மென்றும், உண்ணாமுலை யென்றும், அருந்ததி யென்றும், வண்டார்குழலி யென்றும், அல்லியரசானி யென்றும், பூங்குறத்தி யென்றும், பூஞ்சோலை யென்றும், செந்தாமரை யென்றும், வடமலை யென்றும், திருவேங்கட மென்றும், பெண்கணாயக மென்றும், பெருந்தேவி யென்றும், பேசாமடந்தை யென்றும், பிரமாத்தை யென்றும், விருதாசல மென்றும், சேஷாசல மென்றும், இந்திரரேகை யென்றும், சீவரேகை யென்றும், தனரேகை யென்றும், தான்யரேகை யென்றும், மச்சரேகை யென்றும், சித்ராங்கி யென்றும், ரத்நாங்கி யென்றும், மரகதாங்கி யென்றும், மோஹநாங்கி யென்றும், கோமளாங்கி யென்றும், சாமளாங்கி யென்றும், ரமாமணி யென்றும், சிந்தாமணி யென்றும், தெய்வசிகாமணி யென்றும், ரத்நாகர மென்றும், ராஜரத்ன மென்றும், இரதிதேவி யென்றும் இவ்வகைப் பெயரையுடைய பசுக்களின்னம் அநேகமுண்டு, அப்பசுக்களுக்கு நீர் நிழல் புல்லுள்ள விடத்தில் மேய்த்துக்கட்டி வெக்கை, வெதுப்பு, மாரடைப்பான், கோமாரி, புரைசூடு முதலிய வியாதிகள் வரவொட்டாமல் தன் சரீரத்தைப்போல பாதுகாத்துக் கொண்டு வருகிற நாளையில் ஒருநாள் பசுக்களையெல்லா மேயவிட்டு மேற்சொல்லிய இடையனொரு மரத்தடியில் நிழலுக்கிருக்கிற சமயத்திலே ௸ பசுக்களெல்லாம் காட்டிலுஞ் செடியிலும் மலை யடிவாரத்திலும் நான்கு திக்கெங்கும் போய்மேயுகிற போது அதிலொரு பிராமணன் வீட்டுக் காராம்பசுவானது சிலதூர மதிகமாகப்போய் மேயுகிறவேளையில் ஓர் பெரிய வேங்கைப் புலியானது நாலைந்து நாளாய்த் திரியாத கானகமலை யெல்லாந் திரிந்து எங்கு மிரை யகப்படாமல் தனித்துமேயுகிற பசுவைப் பார்த்து மணியி னோசையினாலே தனது நெடியவாலைத் தட்டிக் கடவாயை சொரிந்தெச்சரித்துக் கோட்டாவி விட்டுத் திக்கென்று நெருப்புப் பொரிகள் பறக்கத் தக்கதாகக் கந்துபாய்ந்துவந்த மாத்திரத்திலே அந்தப் பசுவுக்கு நினைவழிந்து நெடுமூச்செறிந்து நிலைகலங்கி நிலையிலிருந்தது. இப்படிக்கிருந்த பசுவை மலையடிவாரமாக மெள்ள நடத்திக்கொண்டு போச்சுது. அப்போதந்தப் பசுவானது தன் கண்ணை விழித்துப் பார்க்குமளவிலே கண்களிருண்டு காற்களும் நடுநடுங்கி மெய்மறந்து மிகவும் பயந்து வருந்துகிற பசுவை ௸ மாகதராஜன் பார்த்து வாராய் வாராய் கபிலாய் நீபெருமூச்சுவிட்டா லுன்னாலே யாகிற காரியமே திருக்கின்றது நான் நாலைந்துநாளா யிரைகிடையாம லெங்குந் திரிந்துவந்தேன் இன்று நான் பிரவேசித்த வேளை நல்ல முகூர்த்த மாகையா லெனக்கு நல்லமெதுவாகிய இரைகிடைத்தது நீவிசனப் பட்டதினா லென்னகாரிய மிருக்கிறதென்று மரகதராஜன் சொல்லக், கபிலையானது நிலத்தி லுதித்த பூண்டு நிலத்திலே மடியவேண்டும் பூமியிலுள்ள நாள் வரைக்குமிந்த சரீரம்நிற்பதில்லை. நீரின்மேற் குமிழி போல அநித்தியமே யல்லாமல் வேறில்லை. ஆன படியினாலே உமக்கு இரையாகிறதற்கு நானென்ன பாக்கியஞ் செய்தேனோ தெரியாது ஆனாலெனக்கொரு விண்ணப்பமுண்டு. அதென்னவென்றால், நான் வெகு நாள் மலடாயிருந்து புத்திரவாஞ்சையினாலே ஈன்ற பசுக்களைக் கண்டு மிகவு மேக்கமிட்டுக் கண்ட கண்ட தலங்களை யெல்லாங் கையெடுத்துக் கும்பிட்டு கணாத கோயிலுக் கெல்லாங் காணிக்கைக் கொடுத்தனுப்பி தெய்வ கடாட்சத்தினாலே நானொருசேங்கன்றையீன் றெடுத்தேன் அந்த சேங்கன்றானது இளங்கன்றான படியினாலே இன்னம் புல்லைப்பிடித்து மேயுகிறவகை யறியாது மேலும் புத்தியறிந்தா லெனக்கொரு பயமில்லை இப்போது நீ ரென்னை இரையாகக் கொண்டு போகிறதற்கு நானெவ்வளவு பயப்படவில்லைமேலும், நான் வீடுவீட்டு வெளியிலே புறப்படுகிறபோது வாசற்படி என்தலையிலிடித்தது, காலுமடிந்துக் கொண்டது, வலியன் வலமாயிற்று, விச்சுளிகட்டிற்று, கெவுளிகொட்டிற்று, கருடன் சுற்றிற்று, நரையான் தடுத்தது, எண்ணெய்வாணிய னெதிர்ப்பட்டான், ஒற்றைப்பார்ப்பா னெதிரிப்பட்டான், விறகுதலைய னெதிரிட்டான், காடைகட்டிற்று, விதவையைக் கண்டேன், ஆந்தை சீறிற்று, ஒரி குறுக்கிட்டது, நானென்ன அவசகுணங் கண்டேனோ அது எனக்குத் தெரியாதென்று கபிலையானது சொல்லிப் புலியைப் பார்த்து ஐயா மரகதராஜனே நான்போய்க் கன்றுக்கு ஊட்டங் கொடுத்துப் புத்திமதிகளைச் சொல்லி என்னினத்தா ரிடத்தி லென் கன்றை யொப்பித்துப் பிற்பாடுமக்கு நானிறையாக ஒரு க்ஷணத்திலே வருகிறேன் அப்படிக்கு நான் பொய்சொல்லிப் போவேனென்று தாங்களெண்ண வேண்டாம் அப்படி உமக்கு நம்பிக்கை யில்லாவிட்டால் நான் பிரமாணஞ் செய்துக் கொடுக்கிறேன் கேளும் மிருகராஜனே செய்த நன்றியை மறந்தவன் பொய்சாட்சி சொன்னவன் வழக் கோரஞ் சொன்னவன் ஏரி குளங்களைத் துற்றவன் விளையும்பயிரை மேய்த்தவன் விற்குந்தானியத்தில் பதரைக்கலந்தவன் நேரம்விசாரியாம லாக்கினை செய்தவன் அடைக்கலத்தைக் காட்டி விட்டவன் தாய் தந்தையைப் பழித்தவன் பெரியோரை யிகழ்ந்தவன் அக்ராரத்தை யழித்தவன் தண்ணீர்ப் பந்தலை யழித்தவன் ஆலயத்தை யழித்தவன் வித்தையை மறந்தவன் கற்பையழித்தவன் விற்கும் பண்டங்களை விலை குறைத்தவன் விருந்தை வைத்துண்டவன் ஊருடமைத் தின்றவன் அதிதிகளை யடித்தவன் பிச்சையைத் தடுத்தவன், பித்து, மலடு, ஊமை, முடம், குருடு, செவிடு, கூன் இவர்களை யடித்துப் பறித்தவன், பசுவை யடித்தவன், பசுவுக்கு எச்சிலை போடுகிறவன், குருவை மறந்தவன், கொலை செய்தவன், வழியில் முள்வேலியைப் போட்டவன், வாயில்லாச் சீவன்மேல் வலிய பளுவை வைத்தவன், குலமகளைக் கைவிட்டு விலை மகளை இச்சித்தவன் எல்லையளவைங் பிடிங்கினவன், வாத்தியார், வண்ணான், மருத்துவன், நாவிதன் இவர்கள் கூலியைக் கொடாதவன், பிறர்தாரத்தை விரும்பினவன், கன்னக்கோல் வைப்பவன், தூண்டில் போடுகிறவன், படுகுழிபாச்சுகிறவன், நீரிலம்மண மாக நிற்பவன், நம்பினவரை நட்டாற்றில் விட்டவன், அங்காடிக்கூடையை அதிரவிலை யிட்டவன், பங்கிலா னொருவன் பங்கைப் பறித்தவன், அளவைக் குரைத்து விற்பவன், வேட்டைநாயை வீட்டிற்கட்டி வைத்தவன், ஒருவன் விவாகத்தைத் தடுத்தவன், பிச்சையிடாமல் தானே உண்பவன், மருந்திட்டுக் கொல்லுகிறவன், வேதசாஸ்திரங்களைத் தப்பிநடந்தவன் இப்படியாகச் சொல்லப்பட்ட பாவங்களைச் செய்தவன் போகிறதோஷத்திற் போவேனென்று கபிலைசொல்ல, மிருகராஜன் ஆ ஆ இந்தப் பசுவினுடைய நற்குண நற்செய்கையாகிய அறிவையும் மெய்ஞ்ஞானத்தை யும் பிரமாண வாக்கியங்களையும் மாகதராஜன் சொல்லக்கேட்டு மிகவுஞ் சந்தோஷமடைந்து நீ சீக்கிர முன் வீட்டிற்குப்போய்க் கன்றுக்கு முலையூட்டங் கொடுத்து உங்களினத்தார் கையிலொப்பித்துப் போட்டு விரைவில் வரக்கடவாய் நீ வருகிற வரைக்கும் வழிபார்த்துக் கொண்டிருப்பேன் மேலுமென் கையிலகப்பட்ட வுன்னைத் தப்பவிட்டிந்த காட்டிற் பட்டிணியா யிருப்பேனோ வென்று மிருகராஜன் சொல்லக் கபிலையானது கேட்டு உமக்கு நானிறை யாவதற்குச் சந்தேகமில்லை உமக்கனேகம் புண்ணிய முண்டாகும் ஆகையாலெனக்குச் செலவு கொடுத் தனுப்பும் ஐயா மிருகராஜனே யென்று கேழ்க்க அப்படிக்கே மிருகேந்திரன் செலவுகொடுக்கக் கபிலையானது செலவுபெற்றுக்கொண்டு தன்னூரை நோக்கி ஓட்டமா யோடி வருகிறபோது ௸ ஆயன் பசுக்களை யெல்லாம் கூட்டிக்கொண்டு வருகிற சமயத்தில் பிராமணன் வீட்டுக் காராம்பசுவைக் காணாமற் பற்பல திசை யெங்குந்தேடிப் பின்பசுக்களுடைய பெயரைச் சொல்லிக் குடிகுலத்தாளே காராம்பசுவைக் காண்ணீரோ, நிலைமலைத்தாளே காராம்பசுவைக் காணீரோ, ரத்நஹாரமே காரரம்பசுவைக் காணீரோ, செங்கமலத்தாயே கரீராம்பசுவைக் காணீரோ, முத்துமாரியே காராம்பசுவைக் காணீரோ, வேதவல்லியே காராம்பசுவைக் காணீரோ, அலர்மேலுமங்கையே காராம்பசுவைக் காணீரோ, ஆதிலட்சுமியே காராம்பசுவைக் காணீரேர், அஷ்டலட்சுமியே காராம்பசுவைக் காணீரோ, வேதலட்சுமியே காராம்பசுவைக் காணீரோ, கமலக்கண்ணியே காராம்பசுவைக் காணிரோ, அன்னக்கிளியே காராம்பசுவைக் காணீரோ என்றிந்தப்படிக்குப் பசுக்களுடைய பெயரைச்சொல்லிச் சொல்லிக் கூப்பிட்டுக் காடுஞ் செடியும் மலைகளு மெங்குந் தேடிக்காணாமல் ஆயன் மிகவும் விசாரத்துடன் வருகிறபோது, கன்றுக்கு மிகவும் பசியதிகமாய்த்தேடித் தவிர்த்துக் கொண்டு அம்மா அம்மா வென்று நான்கு திக்கிலும் பார்த்து நிற்கிற ததியில் ௸ பசுவுக்கு கன்று கூப்பிட்டசத்தங் கேள்விப்பட்டுப் பெருமூச்செறிந்து தன்னுடம்பெல்லா மயிர்க்குச்செறிந்து நடுநடுங்கிக் கன்றைப்பார்த்து அப்பாவென்று தந்நாவினாலே அக்கன்றினுடைய தேகமுழுமையுந் தடவிக்கொடுத்துப் பின்பு முலையை யூட்டங் கொடுக்கக் கன்றானது தாயைப்பார்த்து ஏனம்மா வுன்னுடம் பெல்லாங் கிள்ளுங்கிழியும் விறனகத்தாற் பட்டு மெய்தளர்ந்து முகம்வாடி உதிரம் பெருகியிருப்பானேனென்று கன்றுகேழ்க்கப் பசுவான தொன்று மில்லை யென்றுசொல்ல ௸ கன்று மறுத்துக் கேட்க ஆனால் சொல்லுகிறேன் கேள் என்மகனே எனகலிதீர்த்த பெருமானே என்னப்பனே என்கண்மணியே என்னரு மருந்தே என்னையனே என்னாவியே முள்முதலிய செடிகளிலு மலையிலு மேய்கிறபடியினாலே தேகமாதியந்தமு முள்ளேறுண்டு மேலும் நேற்றிய சாயங்காலம் மேயப்போன விடத்திலொரு மிருகேந்திரன் கையிலகப்பட்டுக் கொண்டேன் என்னைக் கொல்ல வெத்தனித்தபோது ஐயா மிருகேந்தரனே எனக்கொரு கன்றுண்டு அந்த கன்றுக்கு முலையூட்டங் கொடுத்துப் புத்திமதிகளைச் சொல்லி எங்களினத்தார்வச மடைக்கலமா யொப்பித்து வருகிறேனென்று ௸ புலிக்குச் சத்தியம் பண்ணிவந்தேன் அப்படியே நான் வாக்கியந் தப்பாமற் புலிக்கிறையாகப் போகவேண்டும், நீபுத்தியுள்ள வனாய்க் கன்றுகளுடனேகூட மேய்ந்தோடிப் பாடித் துள்ளிக்குதித்துக் காலையொடித்துக் கொள்ளாதே சிறுகயிறு கட்டினால் அறுத்துக் கொள்ளாதே பயிர்முதலிய விடத்தில் மேயாதே புல்லுள்ள விடத்திலே மேய்ந்து நீருள்ளவிடத்திலே குடித்து நிழலுள்ள விடத்திலே நிற்பாயாக மேலுமந்திசந்திக்கு முன்னே வீட்டிற்குவந்து சேருவாயாக அல்லாமலு மென்னை நினைந்து நினைந்து மனந்தளராதே யென்று கன்றுக்கு வேண்டிய புத்திமதிகளைச் சொல்லி, மேயுகிற பசுக்களுடனே ஒ பசுக்களே கேளுங்கள், நான் மேயபோன விடத்திலே ஒரு வேங்கைப்புலியினிடத்தில் அகப்பட்டுக் கொண்டென்னைக் கொல்லப் போகிறபோது நான் கன்றுக்கு முலையூட்டங் கொடுத்து வேண்டிய யுத்திமதிகளைச் சொல்லி இனத்தார் முன்னிலையி லொப்பிவித்து வருகிறே னென்று வந்தேனாகையா லின்றைக்கு நான் புலிக்கு இறையாகப் போகவேண்டும் நீங்களிந்தக் கன்றைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டு மென்று சொல்லப், பசுக்களெல்லாம் நீ புலியின்கையி லகப்பட்டுத் தப்பி வந்ததே மெத்த நல்லகாரிய மாயிற்று இப்போது நீ மறுபடியுந் திரும்பிப் போக வேண்டிய காரண மென்ன நீ போகவேண்டாஞ் சத்தியமேது பிரமாணமேது புலியின்கையிலே தப்பிவந்ததே சத்தியமென்று வெகுவாய் பசுக்கள் சொல்லவுங் கேளாமல் சத்தியந் தப்பினால் வெகுபாவத்தை யனுபவிக்கவேண்டும் இந்த சரீரம் நீச்சயமில்லை அநித்தியசரீரம் நீரின் மேற்குமிழி இந்த வாழ்வு நிற்கப்போகிற தில்லை பாபத்திற்கு பயப்படவேண்டும் நீங்கள் இதற்குத் தடைசெய்ய வேண்டாஞ் சந்தோஷமாகச் செலவு கொடுத் தனுப்பினால் உங்களுக்குப் புண்ணியஞ் சித்திக்கு மென்று கபிலை சொல்ல, அதுகேட்டு மற்றபசுக்கள் சொன்னது நீ சத்தியம் தப்பாமற் போகவேண்டு மென்றிருந்தால் தடங்கலென்ன யிருக்கிறது அப்படியே போ வென்று செலவு கொடுக்க ௸ காராம் பசுவானது செலவு பெற்றுக்கொண்டு போகச் சேங்கன்றானது தாய்க்குமுன்னே குதித்தோடிவந்து தாயோடேகூட நடக்கப் பசுக்க ளெல்லாந் தடுக்க நிற்காமற் சாகிறதே நல்லது சந்திரனைக் காணாத குமுதத்தைப் போலவும், சூரியனைக் காணாத தாமரையைப் போலவும், மாரிகாணாத பயிரைப்போலவும், சேறுகாணாத வண்டைப் போலவும், கலையைக் காணாத மானைப் போலவும், கரைகாணாத வோடத்தைப் போலவும், சோடுகாணாத பேடுபோலவும், தாயைக்காணாம லிருக்கிறதைப் பார்க்கிலும் தாயோடேகூட சாகிறதே நல்லதென்று கனறானது கண்ணீர்விட்டு அழுது வருந்துகிறபோது மற்றப்பசுக்க ளெல்லாங் கூடிக் கன்றுக்கு மிகவுறுதிப்பாட்டைச் சொல்லிக் கன்றைதேற்றி நிறுத்தினார்கள், பிற்பாடு ௸ காராம்பசுவானது முன்வந்த வழியைத் தொடர்ந்துவந்து வாரும் ஒய் ஐயா மரகதராஜனே நான்போய் வருகிறவரைக்குந் தாங்கள் மிகுந்த பசியாய்த் துயரத்துடனே இருந்தீர்கள் அது மெத்தவுந் தோஷ மெனக்கு வந்து நேரிட்டது இனியாகிலு மென்னைப் புசித்துப் பசியாற்றிக் கொள்ளுமென்று கபிலைசொல்ல மரகதராஜன் கேட்டு தனது குகையை விட்டு வெளியில் வந்து பசுவைப் பார்த்து அத்தியந்த சந்தோஷப்பட்டு வாராய் கபிலாய் நீ சத்தியந்தப்பாமல் வந்தபோதே என் பசிதாகமெல்லாந் தணிந்துப்போயிற்று ஆதலால் நீ திரும்பிப்போ யுங்கள் இனத்தாரண்டைக்கடி வாழக்கடவா யென்று மிருகராஜன் சொல்ல, பசுவு[ங்]கேட்டு சுவாமி மிருகராஜனே நான் வருகிறதற்கு நேரமாயிற் றென்று தாங்கள் கோவிக்கவேண்டாம் மேலும் நான் திரும்பி இனத்தாரிடத்திற் சென்றால் தாங்களுக் கிறையாக மாட்டாமல் நடுவழியிலே பயந்து திரும்பி வந்து விட்டேனென்று சில வார்த்தைகளினாலே யென்னைப்பேசி யேசுவார்கள் அவ்வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு உயிரைவைக்க மாட்டேனாதலால் தேவரீருடைய பசிதணிய வென்னைப் புசித்து விடுமென்று கபிலைசொல்ல, மிருகராஜனதைக் கேட்டு என் பசி உன்னைப்பார்த்த மாத்திரத்திலே பசியாறிப் போய்விட்டது இன்றைக்குன்னைப் புசித்துப் பசியாரினா லெத்தனை நாளைக்குப் பசியில்லாம லிருக்கப் போகுது முன்னென்ன பாவஞ் செய்தேனோ அம்புவியில் வெம்புலியாகப் பிறந்து கும்பிக்கிரைதேடி வெம்பியலையப் பட்டேனிது போதாதா ஆதலினாலே இத்தனை சத்தியமும் நீதியும் விவேகமுள்ள உன்னை புசித்தால் பதிவிரதாபங்கம் பண்ணினவன் போகிற தோஷத்திலே போவேன் இன்னம் நீசொன்ன பிரமாணந் தப்பினவனென்ன தோஷத்திற் போவானோ அந்த தோஷத்திலே நனும் போகக்கடவேன் உன்னுடைய தருமமாய்ப்போகுது நீ போயுன் கன்றுடனே சேர்ந்துக்கொண்டு இனத்தாரோடே கூடிச் சுகமாய் வாழக்கடவா யென்று மிருகராஜன் மெத்தவும் வேண்டிக் கொண்டதற்குப், பசுவானது இந்த சரீரத்தை உனக்கிரையாகக் கொடுத்து விட்டேனினிமேல் நான் போகமாட்டேனென்று இருவரும் வாக்கு வாதம் பண்ணுகிற புதுமையை இரஜித கயிலாசவாசியாகிய சந்திரசடாதர சாம்பசிவ மூர்த்தியும், சகலலோக ரட்சகனாக விளங்காநின்ற வைகுண்ட நாதனாகிய ஸ்ரீ மகாலட்சுமி சமேதனும், சகல சிருஷ்டி கர்த்தாவாகிய பிரமதேவரும், தேவரிந்திராதி முதலிய முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரம் ரிஷீஸ்வராளும், அஷ்டவசுக்களும், அஷ்டதிக்கு பாலகரும், பன்னிரண்டு சூரியரும், ஏகாதசருத்திராதிகளும், கிந்நரர், கிம்புருடர், கெருடகாந்தருவர், சித்தவித்தியாதார், தும்புருநாரதர் முதலிய தேவர்கள் இவ்வாச்சரியத்தைக் கண்டு தாங்கள் தங்கள் வாஹனங்களி லேறிக் கொண்டு வந்து புலியினுடைய சத்தியத்தையும், பசுவினுடைய சத்தியத்தையும் பார்த்து மிகுந்த சந்தோஷத்தை யடைந்து ௸ பசுவுக்கும் புலிக்கும் மகத்தாகிய மோக்ஷ பதவியைக் கொடுத்துப் புஷ்பகவிமானத்தி லேற்றிக்கொண்டு தேவதுந்துபி முழங்கப் புஷ்பமாரி பெய்யும் சொர்க்கத்தை சேர்ந்தார்கள். ஆதலால் சத்தியந் தப்பாமல் கபிலையானது நடந்தபடியால் திரிமூர்த்திமுதலிய தேவர்கள் களிக்கத்தக்கதாகக் கபிலையும் புலியும் மோக்ஷவாசிகளானார்கள் ஆகையாலிந்த கபிலைவாசகத்தைப் படித்தவருங் கேட்டவருங் கேட்பவரைக் கண்டு தரிசித்தவரும் மஹாபுண்ணிய மோக்ஷ முண்டாகும். இந்த கபிலைவாசகத்தை ஸ்ரீவேதவியாஸ மஹாமுனிவர் பூலோகத்திற் பாண்டு புத்திரராகிய பாண்டவர்களுக்குக் தெரியச் சொன்னார். அதனாலே அவர்கள் திவ்விய சந்தோஷத்தை யடைந்து பின்பு மோக்ஷத்தை யடைந்தார்கள் கபிலைவாசகம் முற்றிற்று.
Contents | Home