ஆயிரம் கலை கண்ட அருள்மொழியே வாழி டாக்டர் இரா. நாகசாமி வெற்றிகள் பொருளடக்கம் | ஏழாம் அங்கம்
இராஜராஜன் முடிசூடும்போது அனைத்து அரசர்களுக்கும் தூதுவரை அனுப்பி நட்புக் கரம் நீட்டினான். ஆனால், சேர மன்னன் இராஜராஜன் அனுப்பிய தூதுவனை இகழ்ந்தான். சேரனும் பாண்டியனும் அப்பொழுது நட் புடன் திகழ்ந்தனர். ஆதலால் புதிதாக முடிசூடும் இராஜ ராஜனின் ஆற்றல் அறியாது இகழ்ந்தனர். அச்செய்தியைத் தூதன் வந்து உரைக்கிறான். ஓர்ந்து இணைந்திட விரும்பலன் உதியர்கோன் பூழியன் உடன் போந்த பெற்றியால்; தேர்ந்துமே நேரியர் திறல் நினைத்திடாது நெடும் பாழியில் வீழவே தூற்றினன் தூதினை என்ற சொல் கேட்டதால் சேர மன்னன் உதியர்கோன் என்றும் உதகை வேந்து என்றும் அழைக்கப்பட்டான். பூழியன் என்பது பாண்டியன். நேரியர் என்பவர் சோழர். பாழி எனில் போர் எனும் பொருள். இராஜராஜன் பட்டத்துக்கு வந்ததும், தனது தூதனை சேரன் இகழ்ந்ததால் ஒரே பகலில் பதினெட்டு சுரங்களைக் கடந்து உதகையை வென்றான் என்று உலாக்கள் கூறுகின்றன. “தூதற்காப் பண்டு பகல் ஒன்றில் ஈரொன்பது சுரமும் கொண்டு மலை நாடு கொண்டோன்” என்கிறது உலா. இராஜராஜன் சீற்றம் மிக தனது சேனைத் தலைவனாகிய கிருஷ்ணன் இராமனுக்கு ஆணையிடுகிறான்: பல்லவி படை செலுத்துக பகை எனும் சொலே இலை எனும் வகை படை செலுத்துக சரணம் வடதிசை தனில் குடை பெயர்கவே கொடியர் வீழ்ந்திட வாள் பெயர்கவே இடி நிகர்த்திடும் முரசதிர்கவே புலி பொறித்த நம் கொடி பறக்கவே ..... 1 ஒளியினிற் கடுகிடும் தேர் செலுத்தியே வளியின் மீமிசை பரி செலுத்தியே தலைகளை இடறிடக் கரி செலுத்தியே அலைகளின் மிசை கலன் செலுத்தியே ..... 2 மலை நடுங்கியே மாமடு வாகிட அலை எழுந்துமே உயர் கிரியுமாகிட நிலமதிர்ந்ததுமே நடுநடுங்கிட திசை தொறும் ஒலி கிடுகிடுத்திட ..... 3 உதகை வேந்தும் கடலினில் புகுந்திட மதுரை வேந்தும் மலையினில் ஒளிந்திட இலங்கை வேந்தும் இருளினில் மறைந்திட வேங்கி வேந்தும் விழுந்தடி பணிந்திட ..... 4 சேரன் நாட்டினை செந்தழல் தழுவிட செழியன் நாட்டினை கழுதையும் உழுதிட சளுக்கர் நாடுமே துகள் துளாகிட நுளம்பர் பாடியும் நொடியினில் நொறுங்கிட ..... 5 அவன் ஆணையிட்டது தான் தாமதம். அவனது சேனை மாற்றரசுகளைக் களத்தில் அடிபணிய வைத்தது. அப்பணியைச் செய்து முடித்த பெருமை அவனது சேனாபதி கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழ பிரும்மமாராயன் என்பவனையும், குரவன் உலகளந்தானான ராஜராஜ மகாராஜன் என்பவனையும் சாரும். இவர்களுடன் வில்லவன் மூவேந்த வேளான், ராஜகேசரி மூவேந்த வேளான், தென்னவன் மூவேந்த வேளான், நித்த வினோத விழுப்பரையன், ராஜராஜ வாணகோவரையன் முதலியோர் இப் போர்களில் பங்குபெற்றனர். இராஜராஜன் பெற்ற வெற்றிகளில் முதலிடம் பெறுவது காந்தளூர் சாலை என்ற இடத்தது ஆகும். “காந்தளூர் சாலை கலமறுத்த” என்று அவன் பெயர் ஏற்றான். அவனது மெய்க்கீர்த்திகள் அவன் அடைந்த வெற்றிகளைத் தொகுத்துக் கூறுகின்றன. அம்மெய்க்கீர்த்தியை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் பாடல் இயற்றப்பட்டுள்ளன. இராஜராஜனது வீரத்தைக் குறிக்கும் பகுதி இது. அரசன் ஆணைப்படி அனைத்து நாடுகளும் கைப்பற்றப்பட்டன என சேனாபதி கிருஷ்ணன் இராமன் வந்து சொல்வதாக இப்பாடல் அமைகிறது. (இராகம்-இந்தோளம்) திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டிடும் தேவ கணத்தினில் அறுந்தது காந்தளூர்ச்சாலை கங்க பாடியும் தடிகபப் பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசைப் புகழ்தர ஈழமண்டலமும் இரட்டப்பாடி ஏழரை இலக்கமும் திண் திறல் வென்றித் தண்டாற் கொண்டு இன்றே உந்தம் அடியினில் வீழ்த்தினம் என்றனன் இராமனாம் சேனைத் தலைவனும் நன்று நன்றென நவின்றனன் நாதனே 1. ஸ்வஸ்தி ஸ்ரீ ஏதத் விஸ்வ ந்ருப ச்ரேணி மௌளி மாலோபலாலிதம் ஸாஸநம் ராஜராஜஸ்ய ராஜகேசரி வர்மண: திருமகள் பொலப் பெருநிலச் செல்வ்யுந் தனக்கெயுரிமை பூ- 2. ண்டமை மநக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடுங் கங்கபாடியுந் தடிகைபாடியும் நுளம்பாடியுங் குடமலை நாடுங் கொல்ல- 3. முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி எழரை இலக்கமுந் திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூ- 4. ழியு ளெல்லு' யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டெய் செழியரைத் தெசுகொள் கொராஜகேசரிவர்மரான ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு இ - (இராகம்-இந்தோளம்) ஆசைலாத் ஹிமாம்சு ஜன்ம மஹிமாத் ஆதக்ஷிணாம்போ நிதே: ஆசாஸ்தாஹ்வய பர்வதாத் கிரிபதே: ஆசம்புனாதிஷ் டிதாத் ராஜானோ நிஜவம்ச ரக்ஷண பரா: போக்தும் ச போகான் பஹூன் நீத்யா நித்யவிநீத பாதகமல துவந்த்வம் சமாசிஸ்ரியன் மாற்று அரசர்கள் எல்லாரும் இராஜராஜனது அடி பணிந் ததை இராஜேந்திர சோழன் அளித்த திருவாலங்காட்டு செப்பேடுகள் மேற்கண்டவாறு கூறுகின்றன. அப்பாடல் செப்பேட்டில் சமஸ்கிருத மொழியில் உள்ளது. அதை அப்படியே எடுத்து இங்கு வழங்குகின்றோம். இமயத்தை நிகர்க்கும் ஸ்ரீசைல மலையிலிருந்து தெற்குக் கடல் வரையும், அஸ்தகிரி மலையிலிருந்து சம்புவினால் தோற்றுவிக்கப்பட்ட மலை வரையிலும் (நான்கு எல்லைக்கு உட்பட்ட) உள்ள அரசர்கள் தங்களது வம்சங்களைக் காத்துக் கொள்ளவும் சுகங்களை அனுபவிக்கவும் வேண்டி நித்ய விநீதனாகிய இராஜராஜனது பாத கமலங்களைச் சரண் அடைந்தார்கள் என்பது கருத்து. (ஆறாவது அங்கம் முற்றும்)
பொருளடக்கம் | ஏழாம் அங்கம்